பாடல் #1505

பாடல் #1505: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அண்ணலை வானவ ராயிரம் பேர்சொல்லி
யுன்னுவ ருள்மகிழ்ந் துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை வானவ ராயிரம பெரசொலலி
யுனனுவ ருளமகிழந துணணின றடிதொழக
கணணவ னெனறு கருது மவரகடகுப
பணணவன பெரனபு பறறிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர் உள் மகிழ்ந்து உள் நின்று அடி தொழ
கண் அவன் என்று கருதும் அவர்கட்கு
பண் அவன் பேர் அன்பு பற்றி நின்றானே.

பதப்பொருள்:

அண்ணலை (அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை) வானவர் (அடியவர்களாகிய வானவர்கள்) ஆயிரம் (ஆயிரம் விதமான) பேர் (பெயர்களை) சொல்லி (சொல்லி போற்றி)
உன்னுவர் (தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து) உள் (உள்ளம்) மகிழ்ந்து (மகிழ்ந்து) உள் (தமக்குள்) நின்று (நிற்கின்ற) அடி (அவனது திருவடியை) தொழ (தொழுவார்கள்)
கண் (தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன்) அவன் (அவனே) என்று (என்று) கருதும் (எண்ணுகின்ற) அவர்கட்கு (அவர்களுக்கு உள்ளே இருந்து)
பண் (இலயிக்கின்ற இசையைப் போல) அவன் (அந்த இறைவன்) பேர் (மாபெரும்) அன்பு (அன்பு காட்டி) பற்றி (அவர்களை அரவணைத்து) நின்றானே (நிற்கின்றான்).

விளக்கம்:

அனைத்திற்கும் எஜமானனாகிய இறைவனை அடியவர்களாகிய வானவர்கள் ஆயிரம் விதமான பெயர்களை சொல்லி போற்றி தமது எண்ணத்திற்குள் வைத்து நினைந்து உள்ளம் மகிழ்ந்து தமக்குள் நிற்கின்ற அவனது திருவடியை தொழுவார்கள். தமது கண்ணுக்கு கண்ணாக இருப்பவன் அவனே என்று எண்ணுகின்ற அவர்களுக்கு உள்ளே இருந்து இலயிக்கின்ற இசையைப் போல அந்த இறைவன் மாபெரும் அன்பு காட்டி அவர்களை அரவணைத்து நிற்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.