பாடல் #1504

பாடல் #1504: ஐந்தாம் தந்திரம் – 12. தாச மார்க்கம் (இறைவனை எஜமானராகவும் தம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறை)

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்ப னென்று மொருவன் செழிகழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அநதிபபன திஙக ளதனபினபு ஞாயிறு
சிநதிபப னெனறு மொருவன செழிகழல
வநதிபபன வானவர தெவனை நாடொறும
வநதிபப தெலலாம வகையின முடிநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செழி கழல்
வந்திப்பன் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்தே.

பதப்பொருள்:

அந்திப்பன் (காலையிலும் மாலையிலும்) திங்கள் (மனதாலும்) அதன் (அதன்) பின்பு (பிறகு அதற்கு ஏற்றபடி) ஞாயிறு (உடலாலும் வழிபாடு செய்து)
சிந்திப்பன் (சிந்தித்துக் கொண்டே இருப்பேன்) என்றும் (எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற) ஒருவன் (ஒருவனையும்) செழி (நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின்) கழல் (திருவடிகளை)
வந்திப்பன் (போற்றி வணங்குவேன்) வானவர் (வானவர்களுக்கு எல்லாம்) தேவனை (அதிபதியாக இருக்கின்ற இறைவனை) நாள் (தினம்) தோறும் (தோறும்)
வந்திப்பது (இவ்வாறு நான் போற்றி வணங்குவது) எல்லாம் (எல்லாமே) வகையின் (இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற) முடிந்தே (வழி முறைப் படியே ஆகும்).

விளக்கம்:

காலையிலும் மாலையிலும் மனதாலும் அதன் பிறகு அதற்கு ஏற்றபடி உடலாலும் வழிபாடு செய்து சிந்தித்துக் கொண்டே இருப்பேன். எப்போதும் எமக்கு எஜமானராக இருக்கின்ற ஒருவனையும் நினைப்பதை அருளுபவனுமாகிய அவனின் திருவடிகளை போற்றி வணங்குவேன். வானவர்களுக்கு எல்லாம் அதிபதியாக இருக்கின்ற இறைவனை தினம் தோறும் இவ்வாறு நான் போற்றி வணங்குவது எல்லாமே இறைவனை எஜமானராகவும் எம்மை அடியவராகவும் பாவிக்கின்ற வழி முறைப் படியே ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.