பாடல் #408: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இவர்கட்கு
ஆதி இவனேதான் அருளுகின் றானே.
விளக்கம்:
அனைத்திற்கும் தலைவனாகிய சிவம் ஒருவனும் அவனிடமிருந்து நன்மை புரியத் தோன்றிய சிவன் சக்தியாகிய இருவரும் சேர்ந்து அசுத்த மாயையில் பிறக்கும் மனித பிறப்பினரோடு சுத்தமாயையை கூட்டிச் சேர்த்து தேவர்களைப் படைத்தனர். இந்த தேவர்கள் இறைவனிடம் வந்து எங்களுக்கு இடும் பணி என்ன என்று கேட்டுப் பெற்று அப்படியே செய்வதாக ஏற்றுக்கொண்டு அதை செயல் படுத்துகின்றனர். இந்த தேவர்கள் அனைவருக்கும் தத்தமது பணிகளை கருணையால் அருளுபவன் ஆதியிலிருந்தே இருக்கின்ற இறைவன் ஆவான்.
உட்கருத்து:
தேவர்கள் அனைவருமே முதலில் மனிதர்களாகப் பிறந்து பிறகு தவம் செய்து இறைவனிடம் தமக்கு கொடுக்கும் வேலைகளைக் கேட்டு அவனது அருளால் பெற்று அதை நடத்துபவர்களாகும். இதை 302, 380, 398 பாடல்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பாடல் #409: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
அப்பரி சேதென்று புகலும் மனிதர்
அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.
விளக்கம்:
இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது என்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும். இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும். ஆனால் இறைவனை தமக்குள் அறியாமல் ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர்களை மாயை என்னும் ஆணவ இருளாய் உயிர்களுக்கு பரிசாய் இருக்கும் இறைவனே மூடியிருகின்றான்.
சூரியன், சந்திரன் மற்றும் அக்கினி, இந்திரன், இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகிய எட்டுத்திசைகளுக்கான காவலர்களும் போதனை செய்யும் ஆகாயம், ஒலியை பரப்பும் காற்று, சுட்டெரிக்கும் நெருப்பு, நீர் இருக்கும் பூமி ஆகிய பஞ்ச பூதங்களும், கேட்டல், ருசித்தல், முகர்தல், பார்த்தல், உணர்தல் ஆகிய ஐந்து ஞானேந்திரியங்களும் வாக்கு, கைகள், கால்கள், உடல்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களும். செயல், புத்தி, சித்தம், அஹங்காரம் என நான்கு அந்தக்கரணங்கள் இவை அனைத்தும் அசையா சக்தி அசையும் சக்தியினால் தோன்றிய சுத்தமாயை அசுத்த மாயையில் இருந்து தோன்றியவையாகும்.
பிரளயம் முடிந்து புதிய உலகங்கள் உருவாகிய காலத்தில் உலகங்களில் எல்லாம் புதிய உயிர்களைப் படைப்பதால் தாமே இறைவன் என்று பிரம்மனும், அந்த உயிர்களை எல்லாம் காப்பதால் தாமே இறைவன் என்று திருமாலும் அறியாமையால் ஒருவருக்கொருவர் எண்ணிக்கொண்டு இருந்தார்கள். அப்போது இறைவன் அவர்களின் முன்பு ஒரு மாபெரும் தீப்பிழம்பாக வந்து நின்று இப்பிழம்பின் அடி அல்லது உச்சியைக் காணுபவரே இறைவன் என்று கூற இருவரும் தீப்பிழம்பின் அடியையோ உச்சியையோ காண இயலாமல் புலம்ப ஆரம்பித்தனர்.
பிரம்மனும் திருமாலும் அடியையோ உச்சியையோ காண முடியாத அளவிற்கு ஈரேழு பதினான்கு உலகங்களையும் கடந்து நிற்கின்றான் எம்பெருமான் சதாசிவமூர்த்தி. அவன் தாமாகவே ஏழுலகிற்கும் தீப்பிழம்பாக நிற்கின்றான். ஏழுலகமும் வியாபித்திருக்கும் வானத்திலும் மாபெரும் ஒளிப்பிழம்பாக ஊடுருவி நிற்பவன் நீலநிறமடைந்த கழுத்தை உடைய சிவபெருமான். இறைவன் என்னை ஆட்கொண்ட இறைதன்மையாலே நானும் இதை அறிந்தேன்.
சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே அனைத்து உயிர்களின் உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும் அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும் சூரியனாகவும் குளிர்ந்த சந்திரனாகவும் பரவி இருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தாமாகவும் நிற்கின்றான்.
மண்ணுலகிலிருந்து அண்டங்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டு விண்ணுலகமும் தாண்டி நீண்டு வளர்ந்த தீப்பிழம்பாக நின்றான் சதாசிவமூர்த்தி. அவனது அக்னி உருவத்தை ஆராய முற்பட்டு பிரம்மன் இறைவனின் திருமுடியைக் காணவும் திருமால் இறைவனின் திருவடியைக் காணவும் சென்றனர். பிரம்மன் மேல் செல்ல செல்ல இறைவனின் திருமுடி மேலே வளர்ந்து கொண்டே இருக்க திருமால் கீழே செல்ல செல்ல நன்மையை அருளும் இறைவனின் கழல்கள் அணிந்த திருவடி கீழே வளர்ந்து கொண்டே இருந்து இருவருக்கும் எதையும் காண இயலவில்லை.
உள்விளக்கம்: இறைவனை உணர்ந்தால் இறைவன் எந்த ரூபத்தில் இருந்தாலும் இறைவனை அறியலாம். இறைவனை ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்ள முயன்றால் அவரை அறிய இயலாது.
இறைவனின் சிவந்த திருவடிகளை போற்றி வணங்கும் பலகோடி தேவர்களும், மாபலியிடம் மூன்று அடி நிலம் தா என்று கேட்டு வென்ற திருமாலும் இறைவனிடம் அருள் வேண்டி தவமிருக்கும் முனிவர்களும் இறைவன் வகுத்துக்கொடுத்த வேதங்களை ஓதி உயிர்களைப் படைக்கும் பிரம்மனும் எவ்வளவு தூரம் தான் அலைந்து தேடினாலும் இறைவனின் திருவடிகளையோ திருமுடியையோ காண இயலாது.
உள்விளக்கம்: தேவர்கள், முனிவர்கள், திருமால், பிரம்மா என்று எவ்வளவு உயர்ந்த இறைநிலையில் இருந்தாலும் நானே செய்கிறேன் என்ற எண்ணத்துடன் இறைவனை தனக்குள் உணராமல் வெளியில் தேடினால் இறைவனை காண இயலாது.
நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரம்மனும் கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும் ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களின் உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடனே கலந்து இருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்கள் ஆக முடியாது.