பாடல் #1715

பாடல் #1715: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஏத்தின ரெண்ணிலி தேவரெம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தெண்ணல் வள்ளலென்
றார்த்தன ரண்டங் கடந்தப்புற நின்று
காத்தன னவனின் கருத்தறி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எததின ரெணணிலி தெவரெம மீசனை
வாழததினர வாசப பசுநதெணணல வளளலென
றாரததன ரணடங கடநதபபுற நினறு
காததன னவனின கருததறி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்தினர் எண் இலி தேவர் எம் ஈசனை
வாழ்த்தினர் வாச பசும் தெண்ணல் வள்ளல் என்று
ஆர்த்தனர் அண்டம் கடந்து அப்புறம் நின்று
காத்தனன் அவனின் கருத்து அறியாரே.

பதப்பொருள்:

ஏத்தினர் (போற்றி வணங்குகின்றார்கள்) எண் (எண்ணிக்கை) இலி (இல்லாத) தேவர் (தேவர்கள்) எம் (எம்பெருமானாகிய) ஈசனை (இறைவனை)
வாழ்த்தினர் (வாழ்த்துகின்றார்கள்) வாச (நறுமணமாக இருப்பவன் என்றும்) பசும் (பசுமையாக இருப்பவன் என்றும்) தெண்ணல் (மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும்) வள்ளல் (பெருங் கருணை கொண்ட வள்ளல்) என்று (என்றும்)
ஆர்த்தனர் (கூவி அழைத்து வழிபடுகின்றார்கள்) அண்டம் (ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம்) கடந்து (கடந்து) அப்புறம் (அதற்கு அப்பாலும்) நின்று (நின்று)
காத்தனன் (அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய) அவனின் (அந்த இறைவனின்) கருத்து (உண்மையான தன்மையை) அறியாரே (அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

எண்ணிக்கை இல்லாத தேவர்கள் எம்பெருமானாகிய இறைவனை நறுமணமாக இருப்பவன் என்றும், பசுமையாக இருப்பவன் என்றும், மாசு மருவில்லாத பேரழகோடு இருப்பவன் என்றும், பெருங் கருணை கொண்ட வள்ளல் என்றும் போற்றி வணங்கி வாழ்த்தி கூவி அழைத்து வழிபடுகின்றார்கள். ஆயினும் அண்ட சராசரங்களாகவும் அவற்றை எல்லாம் கடந்து அதற்கு அப்பாலும் நின்று அனைத்தையும் காத்து அருளுகின்றவனாகிய அந்த இறைவனின் உண்மையான தன்மையை அவர்கள் அறிவது இல்லை.

பாடல் #1716

பாடல் #1716: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

ஒண்சுட ரோனயன் மால்பிர சாபதி
யொண்சுட ரானவிர வியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராயெங்குந் தாபர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒணசுட ரொனயன மாலபிர சாபதி
யொணசுட ரானவிர வியொ டிநதிரன
கணசுட ராகிக கலநதெஙகுந தெவரகள
தணசுட ராயெஙகுந தாபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒண் சுடரோன் அயன் மால் பிரசாபதி
ஒண் சுடர் ஆன இரவியோடு இந்திரன்
கண் சுடர் ஆகி கலந்து எங்கும் தேவர்கள்
தண் சுடர் ஆய் எங்கும் தாபரம் ஆமே.

பதப்பொருள்:

ஒண் (அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற) சுடரோன் (ஜோதியான இறைவனே) அயன் (பிரம்மனாகவும்) மால் (திருமாலாகவும்) பிரசா (உயிர்களின்) பதி (தலைவனாகிய உருத்திரனாகவும்)
ஒண் (ஒன்று பட்டு இருக்கின்ற) சுடர் (ஒளி) ஆன (ஆகிய) இரவியோடு (சூரியனாகவும்) இந்திரன் (தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும்)
கண் (அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து) சுடர் (காண்கின்ற ஒளி) ஆகி (ஆகவே) கலந்து (கலந்து நிற்கின்றவனாகவும்) எங்கும் (அனைத்திலும் இருக்கின்ற) தேவர்கள் (தேவர்களாகவும்)
தண் (குளிர்ந்த) சுடர் (ஒளியைத் தருகின்ற சந்திரன்) ஆய் (ஆகவும்) எங்கும் (எங்கும் பரந்து இருக்கின்றான்) தாபரம் (அவனே இலிங்க வடிவம்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்திலும் பொருந்தி ஒன்றாகவே இருக்கின்ற ஜோதியான இறைவனே பிரம்மனாகவும், திருமாலாகவும், உயிர்களின் தலைவனாகிய உருத்திரனாகவும், ஒன்று பட்டு இருக்கின்ற ஒளியாகிய சூரியனாகவும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனாகவும், அனைத்து உயிர்களின் கண்களில் இருந்து காண்கின்ற ஒளியாகவே கலந்து நிற்கின்றவனாகவும், அனைத்திலும் இருக்கின்ற தேவர்களாகவும், குளிர்ந்த ஒளியைத் தருகின்ற சந்திரனாகவும், எங்கும் பரந்து இருக்கின்றான். அவனே இலிங்க வடிவம் ஆகும்.

பாடல் #1717

பாடல் #1717: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தாபரத் துள்நின் றருளவல் லான்சிவன்
மாபரத் துண்மை வழிபடு வாரில்லை
மாபரத் துண்மை வழிபடு வாளர்க்குப்
பூவகத் துண்ணின்ற பொற்கொடி யாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தாபரத துளநின றருளவல லானசிவன
மாபரத துணமை வழிபடு வாரிலலை
மாபரத துணமை வழிபடு வாளரககுப
பூவகத துணணினற பொறகொடி யாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தாபரத்து உள் நின்று அருள வல்லான் சிவன்
மா பரத்து உண்மை வழி படு ஆர் இல்லை
மா பரத்து உண்மை வழி படு ஆளர்க்கும்
பூ அகத்து உள் நின்ற பொன் கொடி ஆகுமே.

பதப்பொருள்:

தாபரத்து (பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு) உள் (உள்ளே) நின்று (நின்றும்) அருள (உயிர்களுக்கு அருளும்) வல்லான் (வல்லமை பெற்றவன்) சிவன் (அருள் வடிவான இறைவன்)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆர் (உயிர்கள்) இல்லை (இல்லை)
மா (அனைத்திற்கும் மேலான) பரத்து (பரம்பொருளாகிய இறைவனின்) உண்மை (உண்மையான தன்மையை உணர்ந்து) வழி (அவனை அடைவதற்கான வழியில்) படு (செல்லுகின்ற) ஆளர்க்கும் (உயிர்களுக்கு)
பூ (அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின்) அகத்து (நடுவுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) பொன் (பொன்னாலான) கொடி (கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக) ஆகுமே (இறைவன் இருப்பான்).

விளக்கம்:

பரம்பொருளாகிய இலிங்க வடிவத்திற்கு உள்ளே நின்றும் உயிர்களுக்கு அருளும் வல்லமை பெற்றவன் அருள் வடிவான இறைவன். அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனின் உண்மையான தன்மையை உணர்ந்து அவனை அடைவதற்கான வழியில் செல்லுவதற்கு பெரும்பாலான உயிர்கள் முயற்சி செய்வது இல்லை. அவ்வாறு முயற்சி செய்கின்ற உயிர்களுக்கு அவர்களின் தலை உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் இருக்கின்ற ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரின் நடுவுக்கு உள்ளே நிற்கின்ற பொன்னாலான கொடி போன்ற சுழுமுனை நாடியின் மூலம் தன்னை அடைவதற்கான வழியில் அவர்களை கொண்டு செல்லுகின்ற சக்தியாக இறைவன் இருப்பான்.

பாடல் #1718

பாடல் #1718: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

தூய விமானமுந் தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற் சூக்கும
மாய பெலிபீடம் பத்திர லிங்கமா
மாய வரனிலை யாய்ந்துகொள்வார் கட்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூய விமானமுந தூலம தாகுமா
லாய சதாசிவ மாகுநற சூககும
மாய பெலிபீடம பததிர லிஙகமா
மாய வரனிலை யாயநதுகொளவார கடகெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூய விமானமும் தூலம் அதாகும் ஆல்
ஆய சதா சிவம் ஆகும் நல் சூக்குமம்
ஆய பெலி பீடம் பத்திர இலிங்கம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள் ஆர்களுக்கே.

பதப்பொருள்:

தூய (தூய்மையான) விமானமும் (விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்}) தூலம் (தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே) அதாகும் (பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு) ஆல் (இருக்கின்றது ஆதலால்)
ஆய (இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்}) சதா (பரம் பொருளாகிய) சிவம் (சிவபெருமானின் பிரபஞ்ச சக்தி) ஆகும் (ஆகும்) நல் (அது உலகத்திற்கு நன்மையானதை கொடுக்கின்ற) சூக்குமம் (நுண்ணிய வடிவம் ஆகும்)
ஆய (இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற) பெலி (பலி) பீடம் (பீடமானது) பத்திர (தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற) இலிங்கம் (இலிங்க) ஆம் (வடிவம் ஆகும்)
ஆய (இவ்வாறு இருக்கின்ற) அரன் (இறைவனின்) நிலை (நிலையை) ஆய்ந்து (ஆராய்ந்து) கொள் (அறிந்து கொள்ளுகின்ற) ஆர்களுக்கே (உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்).

விளக்கம்:

விமானம் என்று அழைக்கப் படுகின்ற இலிங்கத்தின் மேல் பகுதியானது {பாணம்} தீயவற்றை அழித்து உலகிற்கு நன்மையை தருகின்ற தூல வடிவமே பிரபஞ்சமாகி பிரபஞ்சத்தோடு தொடர்பு கொண்டு இருக்கின்றது. ஆதலால் இலிங்கத்தின் அடிப் பகுதியாக இருக்கின்ற {ஆவுடையார்} பரம் பொருளாகிய சிவபெருமானின் பிரபஞ்ச சக்தியாக உலகத்திற்கு நன்மையை கொடுக்கின்ற நுண்ணிய வடிவமாக இருக்கின்றது. இலிங்கத்தின் நடுப் பகுதியாக இருக்கின்ற பலி பீடமானது தம்மிடம் வேண்டி வருபவர்களை பாதுகாக்கின்ற இலிங்க வடிவமாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற இறைவனின் நிலையை ஆராய்ந்து அறிந்து கொள்ளுகின்ற உயிர்களால் மட்டுமே இலிங்கத்தின் உண்மையை உணர முடியும்.

பாடல் #1719

பாடல் #1719: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

முத்துடன் மாணிக்க மொய்த்த பவளமுங்
கொத்து மக்கொம்பு சிலைநீறு கோமள
மத்தன்றன் னாகம மன்ன மரிசியா
முத்தத்தின் சாதனம் பூமண லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முததுடன மாணிகக மொயதத பவளமுங
கொதது மககொமபு சிலைநீறு கொமள
மததனறன னாகம மனன மரிசியா
முததததின சாதனம பூமண லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முத்துடன் மாணிக்கம் ஒய்த்த பவளமும்
கொத்தும் அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன் தன் ஆகமம் அன்னம் அரிசி ஆம்
உத்தத்தின் சாதனம் பூ மண இலிங்கமே.

பதப்பொருள்:

முத்துடன் (முத்துக் கல்லும்) மாணிக்கம் (மாணிக்கம் கல்லும்) ஒய்த்த (அவற்றுக்கு ஈடான) பவளமும் (பவளக் கல்லும்)
கொத்தும் (கொத்துகின்ற உளியும்) அக் (அதை தட்ட உதவுகின்ற) கொம்பு (சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட) சிலை (சிலையில்) நீறு (திரு நீறும்) கோமளம் (கோமேதகக் கல்லும் அணிவித்து)
அத்தன் (அனைத்திற்கும் தந்தையான இறைவன்) தன் (தனது உயிர்களுக்கு அருளிய) ஆகமம் (சிவ ஆகமத்தில் உள்ளபடி) அன்னம் (சமைக்கப் பட்ட உணவும்) அரிசி (சமைக்கப் படாத அரிசியும்) ஆம் (படையலாக வைத்து)
உத்தத்தின் (மனதை ஒருமுகப் படுத்துகின்ற) சாதனம் (கருவியாக) பூ (அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற) மண (நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே) இலிங்கமே (பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்).

விளக்கம்:

முத்துக் கல்லும், மாணிக்கம் கல்லும், அவற்றுக்கு ஈடான பவளக் கல்லும், கொத்துகின்ற உளியும் அதை தட்ட உதவுகின்ற சுத்தியும் போன்ற ஆயுதங்களால் செதுக்கப் பட்ட சிலையில், திரு நீறும், கோமேதகக் கல்லும் அணிவித்து, அனைத்திற்கும் தந்தையான இறைவன் தனது உயிர்களுக்கு அருளிய சிவ ஆகமத்தில் உள்ளபடி சமைக்கப் பட்ட உணவும், சமைக்கப் படாத அரிசியும் படையலாக வைத்து, மனதை ஒருமுகப் படுத்துகின்ற கருவியாக அணிவித்த பூமாலையில் இருந்து வருகின்ற நறுமணமும் சேர்ந்து அமைக்கப் பட்டதே பரிபூரணமான சிவ இலிங்கம் ஆகும்.

பாடல் #1720

பாடல் #1720: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

துன்றுந் தயிர்நெய் பால்தூய மெழுகுடன்
கன்றிய செப்புக் கனலிரதஞ் சலம்
வன்றிறல் செங்கல் வடிவுடை வில்லம்பொன்
தென்றியங் கொன்றை தெளிசிவ லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

துனறுந தயிரநெய பாலதூய மெழுகுடன
கனறிய செபபுக கனலிரதஞ சலம
வனறிறல செஙகல வடிவுடை விலலமபொன
தெனறியங கொனறை தெளிசிவ லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

துன்றும் தயிர் நெய் பால் தூய மெழுகு உடன்
கன்றிய செப்பு கனல் இரதம் சலம்
வன் திறல் செங்கல் வடிவு உடை வில்லம் பொன்
தென்றி அம் கொன்றை தெளி சிவ இலிங்கமே.

பதப்பொருள்:

துன்றும் (முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான) தயிர் (தயிரும்) நெய் (நெய்யும்) பால் (பாலும்) தூய (கலப்படமில்லாத) மெழுகு (அரக்கும்) உடன் (இவற்றுடன்)
கன்றிய (முறைப்படி புடம் போட்ட) செப்பு (செம்பும்) கனல் (நெருப்பும்) இரதம் (பழச்சாறும்) சலம் (தூய்மையான அபிஷேக நீரும்)
வன் (வலிமையாக) திறல் (சுடப்பட்டு இறுகிய) செங்கல் (செம்மையான கல்லும்) வடிவு (அழகிய வடிவத்தை) உடை (உடைய) வில்லம் (வில்வ இலையும்) பொன் (தங்கமும்)
தென்றி (மென்மையுடன் தேன் நிறைந்த) அம் (அழகிய) கொன்றை (கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது) தெளி (மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும்) சிவ (சிவபெருமானின்) இலிங்கமே (பரிபூரண இலிங்கம் ஆகும்).

விளக்கம்:

முறைப்படி பசும் பாலில் செய்த தூய்மையான தயிரும், நெய்யும், பாலும், கலப்படமில்லாத அரக்கும், இவற்றுடன் முறைப்படி புடம் போட்ட செம்பும், நெருப்பும் (விளக்கு, யாகம், போன்றவை), பழச்சாறும், தூய்மையான அபிஷேக நீரும், வலிமையாக சுடப்பட்டு இறுகிய செம்மையான கல்லும், அழகிய வடிவத்தை உடைய வில்வ இலையும், தங்கமும், மென்மையுடன் தேன் நிறைந்த அழகிய கொன்றை மலர்களும் வைத்து வழிபடுவது மனதை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு உதவும் சிவபெருமானின் பரிபூரண இலிங்கம் ஆகும்.

பாடல் #1721

பாடல் #1721: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

மறையவ ரற்சனை வண்படி கந்தா
னிறையவ ரற்சனை யேயபொன் னாகுங்
குறைவில் வசீகர கோமள மாகுந்
துறையுடைச் சூத்திரர் தொல்வாண் லிங்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மறையவ ரறசனை வணபடி கநதா
னிறையவ ரறசனை யெயபொன னாகுங
குறைவில வசிகர கொமள மாகுந
துறையுடைச சூததிரர தொலவாண லிஙகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மறை அவர் அற்சனை வண் படிகம் தான்
இறை அவர் அற்சனை ஏய பொன் ஆகும்
குறை இல் வசீகரம் கோமளம் ஆகும்
துறை உடை சூத்திரர் தொல் வாள் இலிங்கமே.

பதப்பொருள்:

மறை (வேதங்களை உச்சரித்து) அவர் (சாதகர்கள்) அற்சனை (பூசை செய்கின்ற போது) வண் (வடிவாக அமைக்கப் பட்ட) படிகம் (படிக இலிங்கம்) தான் (தான் பெற்ற மந்திரங்களை பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும்)
இறை (இறைவன் மேல் பக்தியோடு) அவர் (சாதகர்கள்) அற்சனை (பூசை செய்கின்ற போது) ஏய (அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற) பொன் (பொன் போல ஒளி வீசி) ஆகும் (அமைதியை கொடுக்கக் கூடியது ஆகும்)
குறை (அப்போது ஒரு குறையும்) இல் (இல்லாத) வசீகரம் (சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய) கோமளம் (பேரழகு பெற்ற) ஆகும் (இலிங்கமாக ஆகும்)
துறை (இவை எல்லாம் இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக) உடை (ஏற்றுக் கொண்டு) சூத்திரர் (அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு) தொல் (ஆதியிலிருந்தே இருக்கின்ற) வாள் (ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய) இலிங்கமே (ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்).

விளக்கம்:

வேதங்களை உச்சரித்து சாதகர்கள் பூசை செய்கின்ற போது வடிவாக அமைக்கப் பட்ட படிக இலிங்கம் தான் பெற்ற மந்திரங்களை பிரதிபலித்து நன்மை செய்யக் கூடியது ஆகும். இறைவன் மேல் பக்தியோடு சாதகர்கள் பூசை செய்கின்ற போது அந்த இலிங்கமே அவர்களின் பக்குவத்திற்கு ஏற்ற பொன் போல ஒளி வீசி அமைதியை கொடுக்கக் கூடியது ஆகும். அப்போது ஒரு குறையும் இல்லாத சாதகரின் மனதை வசீகரிக்கக் கூடிய பேரழகு பெற்ற இலிங்கமாக ஆகும். இவை எல்லாம் இறைவனை அடைவதை மட்டுமே தொழிலாக ஏற்றுக் கொண்டு அதற்கான முறைகளை அறிந்து அதன் படியே செய்கின்றவர்களுக்கு ஆதியிலிருந்தே இருக்கின்ற ஜோதி வடிவான இறைவனின் அம்சமாகவே சாதகரையும் ஜோதியாக மாற்றக் கூடிய ஒளி வடிவான இலிங்கமாக ஆகி விடும்.

பாடல் #1722

பாடல் #1722: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அதுவுணர்ந் தேனொரு தன்மையை நாடி
யெதுவுணரா வகை நின்றன னீசன்
புதுவுணர் வான புவனங்க ளெட்டு
மிதுவுணர்ந் தென்னுடல் கோயில் கொண்டானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அதுவுணரந தெனொரு தனமையை நாடி
யெதுவுணரா வகை நினறன னீசன
புதுவுணர வான புவனஙக ளெடடு
மிதுவுணரந தெனனுடல கொயில கொணடானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அது உணர்ந்தேன் ஒரு தன்மையை நாடி
எது உணரா வகை நின்றனன் ஈசன்
புது உணர்வு ஆன புவனங்கள் எட்டும்
இது உணர்ந்த என் உடல் கோயில் கொண்டானே.

பதப்பொருள்:

அது (அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) ஒரு (ஒரு) தன்மையை (ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில்) நாடி (தேடுவதன் மூலம்)
எது (எந்த முறையினாலும்) உணரா (உணர்ந்து கொள்ள முடியாத) வகை (வகையில்) நின்றனன் (நிற்கின்ற) ஈசன் (இறைவனை)
புது (ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான) உணர்வு (உணர்வு) ஆன (ஆக) புவனங்கள் (அனைத்து உலகங்களையும் சென்று) எட்டும் (அடைகின்ற தன்மையை)
இது (எமக்குள்) உணர்ந்த (உணர்ந்த போது) என் (அவன் எமது) உடல் (உடலையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) கொண்டானே (ஆட்கொண்டு வீற்றிருந்தான்).

விளக்கம்:

அனைத்திலும் இருக்கின்ற பரம்பொருளை ஒரு ஜோதியின் தன்மையில் உள்ள இலிங்க வடிவத்தில் தேடுவதன் மூலம் உணர்ந்து கொண்டேன். எந்த முறையினாலும் உணர்ந்து கொள்ள முடியாத வகையில் நிற்கின்ற இறைவனை ஒளி பொருந்திய இலிங்கத்தின் மூலம் உணரும் போது, இது வரை யாம் உணராத ஒரு புதுவிதமான உணர்வாக அனைத்து உலகங்களையும் சென்று அடைகின்ற தன்மையை எமக்குள் உணர்ந்த போது, அவன் எமது உடலையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு வீற்றிருந்தான்.

பாடல் #1723

பாடல் #1723: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

அகலிட மாயறி யாம லடங்கு
முகலிட மாய்நின்ற ஊனதி னுள்ளே
பகலிட மாமுன்னம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகலிட மாயறி யாம லடஙகு
முகலிட மாயநினற ஊனதி னுளளெ
பகலிட மாமுனனம பாவ வினாசன
புகலிட மாயநினற புணணியன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகல் இடம் ஆய் அறியாமல் அடங்கும்
உகல் இடம் ஆய் நின்ற ஊன் அதின் உள்ளே
பகல் இடம் ஆம் முன்னம் பாவ விநாசன்
புகல் இடம் ஆய் நின்ற புண்ணியன் தானே.

பதப்பொருள்:

அகல் (அகன்று விரிந்து இருக்கின்ற) இடம் (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) அறியாமல் (யாரும் அறியாத வண்ணம்) அடங்கும் (அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள்)
உகல் (அழியக்கூடிய) இடம் (இடம்) ஆய் (ஆக) நின்ற (நிற்கின்ற) ஊன் (எமது உடம்பு) அதின் (அதற்கு) உள்ளே (உள்ளே எழுந்தருளினான்)
பகல் (அப்போது இருளே இல்லாத வெளிச்சமான) இடம் (இடம்) ஆம் (ஆக எமது உடலை மாற்றி) முன்னம் (இது வரை எமக்கு இருந்த) பாவ (அனைத்து விதமான பாவங்களையும்) விநாசன் (அழித்து அருள் புரிந்து)
புகல் (யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற) இடம் (இடம்) ஆய் (ஆகவே) நின்ற (நிற்கின்றான்) புண்ணியன் (புண்ணியமே உருவான) தானே (இலிங்க வடிவான இறைவன்).

விளக்கம்:

அகன்று விரிந்து இருக்கின்ற அண்ட சராசரங்களாக யாரும் அறியாத வண்ணம் அனைத்திலும் அடங்கி இருக்கின்ற பரம்பொருள் அழியக்கூடிய இடமாக நிற்கின்ற எமது உடம்பிற்கு உள்ளே எழுந்தருளினான். அப்போது இருளே இல்லாத வெளிச்சமான இடமாக எமது உடலை மாற்றி, இது வரை எமக்கு இருந்த அனைத்து விதமான பாவங்களையும் அழித்து அருள் புரிந்து, யாம் சரணாகதியாக எப்போதும் இருக்கின்ற இடமாகவே நிற்கின்றான் புண்ணியமே உருவான இலிங்க வடிவான இறைவன்.

பாடல் #1724

பாடல் #1724: ஏழாம் தந்திரம் – 2. அண்ட லிங்கம் (அண்டம் எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளின் வடிவம்)

போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல் விசும்பாய் நிற்கு
மாதியுற நின்றது அப்பரி சாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பொது புனைகழல பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியு ளீசனுடல விசுமபாய நிறகு
மாதியுற நினறது அபபரி சாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

போது புனை கழல் பூமி அது ஆவது
மாது புனை முடி வானகம் ஆவது
நீதி உள் ஈசன் உடல் விசும்பு ஆய் நிற்கும்
ஆதி உற நின்றது அப் பரிசு ஆமே.

பதப்பொருள்:

போது (மலர்கள்) புனை (சூடிய) கழல் (இறைவனின் திருவடிகள்) பூமி (உலகம்) அது (அது) ஆவது (ஆக இருக்கின்றது)
மாது (இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள்) புனை (கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற) முடி (இறைவனின் திருமுடி) வானகம் (ஆகாயம்) ஆவது (ஆக இருக்கின்றது)
நீதி (தர்மத்தின்) உள் (வடிவமாக உள்ள) ஈசன் (இறைவனின்) உடல் (திருமேனியானது) விசும்பு (அண்ட சராசரங்கள்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றது)
ஆதி (ஆதி மூலமாகிய இறைவனுக்கு) உற (ஏற்ற வகையில்) நின்றது (நின்றது) அப் (அவன் அருளிய) பரிசு (பரிசாகிய) ஆமே (இலிங்கமே ஆகும்).

விளக்கம்:

மலர்கள் சூடிய இறைவனின் திருவடிகள் உலகமாக இருக்கின்றது. இறைவனின் சரிபாதியாக இருக்கின்ற இறைவியானவள் கங்கை நீராக அமர்ந்து இருக்கின்ற இறைவனின் திருமுடி ஆகாயமாக இருக்கின்றது. தர்மத்தின் வடிவமாக உள்ள இறைவனின் திருமேனியானது அண்ட சராசரங்களாக நிற்கின்றது. ஆதி மூலமாகிய இறைவனுக்கு ஏற்ற வகையில் நின்றது அவன் அருளிய பரிசாகிய இலிங்கமே ஆகும்.