பாடல் #706

பாடல் #706: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மரணஞ் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் திருவுரு வாதன்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

விளக்கம்:

பாடல் #705 ல் கூறியுள்ள ஆறு தகுதிகளுடன் முதுமை அடையாமல் மரணம் இல்லாத தன்மையைப் பெறுதலும் எங்கிருந்தாலும் எப்போதும் அருள் வெளியோடு கலந்திருத்தலும் இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு பலவித நற்செயல்கள் செய்து பெற்ற பலன்களை பித்ருக்களுக்கு சமர்ப்பணமாக அளித்தலும் சிவபெருமானை உணர்ந்து அவனது திருவுருவமாகவே மாறுவதும் ஆகிய மொத்தம் பத்து வித தகுதிகளை பலவித யோகங்கள் மூலமாக கற்று தமது கையில் இருக்கும் பொருள் போலத் தெள்ளத் தெளிவாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

கருத்து: யோகமுறைகளை முறையாகக் கற்று உணர்ந்து பத்துவிதமான தகுதிகளை அடைந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள்.

பாடல் #707

பாடல் #707: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதங்கள் நோவ நடந்தும் பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருக்கின்ற நகரறி வாரே.

விளக்கம்:

இறைவனைக் காண வேண்டுமென்று ஓயாமல் அலைகள் அடித்துக் கொண்டிருக்கும் கடல்கள் சூழ்ந்த இந்த உலகம் முழுவதையும் தனது பாதங்கள் வலிக்கும் வரை நடந்து தேடினாலும் ஒரு பயனும் இருக்காது. பார்க்கும் அனைத்தையும் இறைவனாக பார்த்து அந்த இறைவன் மீது உண்மையான அன்பை செலுத்துபவர்கள் சித்திகளை அடைந்து தமது உள்ளமாகிய திருக்கோயிலேயே இறைவன் வீற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொள்வர்கள்.

கருத்து: இறைவனை வெளியில் எங்கு தேடினாலும் காண முடியாது. உண்மையான அன்பால் தேடினால் கண்டு கொள்ளலாம்.

பாடல் #708

பாடல் #708: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

விளக்கம்:

மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும் சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும் அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும் விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும் ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும் சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும் அதைத்தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும் தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும் அசையா சக்தி (பரன்-சிவம்) அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே ஆகும்.

கருத்து: உயிர்களின் உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரத்தில் ஒளிமயமாகவும் எட்டாவதாக அமிர்தம் பொழிகின்ற இடத்தில் பரஒளியாகவும், ஒன்பதாவதாக தலையைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் பரஒலியாகவும் இருக்கின்ற மூர்த்திகள் அனைவரும் பராபரை எனும் ஆதிமூலசக்தியின் திருவடிவங்களே ஆகும்.

பாடல் #709

பாடல் #709: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

விளக்கம்:

யோகத்தின் மூலம் குண்டலினி சக்தியை மேலெழுப்பி மூலாதாரம் முதலிய ஆறு ஆதார சக்கரங்களிலும் வீற்றிருக்கும் மூர்த்திகளோடும் கலந்து சென்று அதற்கு மேலே இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் சதாசிவமூர்த்தியோடு இணைந்து அமிர்தமாகி தலை உச்சியிலிருந்து நான்கு அங்குலத்திற்குக் கீழே இருக்கும் உள் நாக்கில் பரஒளியாகிய அசையும் சக்தியுடன் கலந்து அதன்பிறகு தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குலத்திற்கு மேலே இருக்கும் துவாதசாந்த வெளியில் இருக்கும் பரநாதமாகிய அசையா சக்தியோடு இரண்டறக் கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

கருத்து: குண்டலினி சக்தியை ஏழு சக்கரங்களுக்கும் ஏற்றிச் சென்று எட்டாவது நிலையில் அமிர்தமாகி ஒன்பதாவது நிலையில் இறைவனோடு கலந்து இருப்பதே பேரின்பம் கொடுக்கும் ஆனந்த யோகமாகும்.

பாடல் #710

பாடல் #710: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

விளக்கம்:

குளிர்ச்சியான சந்திரனின் குணம் கொண்ட இடகலை மற்றும் வெப்பமான சூரியனின் குணம் கொண்ட பிங்கலை ஆகிய நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றுகளை சுழுமுனை நாடிவழியே ஒன்றாகச் சேர்த்து மேலெழுப்பிச் சென்று சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் ஒன்றாகக் கலக்கும் படி செய்யும் அகயோகத்தை செய்த யோகியர்களே வானத்தில் வீற்றிருக்கும் பழம்பெரும் தேவர்களாகிறார்கள். இந்த அகயோகத்தை உண்மையாக கடைபிடித்து இருக்கும் சித்தர்களுக்கு அதையும் தாண்டிய ஆனந்த யோகத்தில் தன்னை அடையும் வழியைக் காட்டி அங்கே அவர்களுடன் கலந்து இறைவனும் நிற்கின்றான்.

கருத்து: சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை மேலே சேர்க்கும் அகயோகத்தை செய்த யோகிகள் தேவர்களாகிறார்கள். அதையும் தாண்டி துவாதசாந்த வெளியில் இருக்கும் இறைவனோடு இணைகின்ற ஆனந்த யோகத்தை செய்த யோகிகள் இறைவனோடு இரண்டறக் கலந்துவிடுகிறார்கள்.

பாடல் #711

பாடல் #711: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டுஅறி வார்க்கு நமனில்லை தானே.

விளக்கம்:

கீழ்நோக்கிச் செல்லும் மூச்சுக்காற்றை மேல்நோக்கி செல்ல வைத்து அதை சுழுமுனை நாடியோடு கட்டி வைக்கும் திறனைப் பெற்ற யோகியர்கள் அனைத்தும் தாமே என்பதை உணர்ந்து நிற்பார்கள். அதன்பின் சகஸ்ரதளத்தில் மலர்ந்த ஆயிரம் தாமரை இதழ்களின் மேலே வீற்றிருக்கும் இறைவனோடு மூச்சுக்காற்றை கலக்கவிட்டு அதை மீண்டும் கீழிறக்கி உள் நாக்கின் மேலே மூடியுள்ள துளையைக் குத்தி அதில் அமிர்தத்தை சுரக்க வைத்து அந்த அமிர்தத்தைப் பருகி தனது நடு நாடியாகிய சுழுமுனையிலேயே மூச்சுக்காற்றை நிறுத்தி வைக்க முடிந்த யோகியர்கள் இனி எப்போதும் இறந்து பிறவாத நிலையை அடைவார்கள்.

கருத்து: அகயோகம் ஆனந்தயோகம் செய்த யோகியர்களுக்கு இறப்பும் பிறப்பும் இல்லை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #34

7-1-2008 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மீகப் பாதையில் செல்லும் போது சுய உடமைகள் (பொருட்கள்) இருப்பது தேவையற்றதா? அவ்வாறு சுய உடமைகள் இருப்பது தவறாகுமா?

கலிகாலத்தில் உடமைகள் இல்லாமல் வாழ்வது கடினம். இருப்பினும் நாம் ஒரு பொருளை நம் தேவைக்காக என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் அப்பொருள் இருந்தால்தான் நம்மால் இருக்க முடியும் என்று இருக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். சொத்துக்கள் இருந்தால் தவறாகாது. சொத்துக்கள் தான் அனைத்தும் என்கின்ற மனப்பான்மை இருக்கக்கூடாது. ஏனெனில் எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் உடம்பை விட்டுச் செல்லும் போது அனைத்தையும் விட்டு விட்டே செல்ல வேண்டும். ஆத்மாவின் விடுதலைக்கும் ஆத்மாவின் முக்திக்கும் சொத்துக்கள் தேவையற்றது. இந்நிலையில் சொத்துக்களை அனுபவித்துச் செல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே இருக்க வேண்டும். பிற்காலத்தில் இதை விட்டுச் செல்ல வேண்டுமே என்று வருத்தமாக இருக்கக்கூடாது. உடமைகள் இருப்பது தவறில்லை. ஆனால் உடமைகள் இல்லாமல் வாழ முடியும் என்பதை மனதில் வைத்து ஆன்மீகப் பாதையில் சென்றால் எவ்விதத் தவறும் இல்லை. உதாரணமாக ஆன்மீகப் பாதையில் செல்வோர் தொலைபேசி உபயோகிப்பது தொலைக்காட்சி காண்பது தவறாகாது. இருப்பினும் அதனை அனுபவித்து விட்டு அது இல்லாமல் இருக்கும் போது அதனை நினைத்துக் கவலைப்படக்கூடாது என்பதே எமது அறிவுரை.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #33

11-12-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: இறைவனின் அருளானது ஏன் அனைவரின் மீதும் விழவில்லை?

இறையருள் அனைவரின் மீதும் சமமாக விழுகிறது. இதை பலர் உணர்வதில்லை. வெளிச்சம் விழும் காலத்தில் நல்ல கண்ணாடி வழியாக சிறப்பாக வெளிச்சம் உண்டாகும். அழுக்காக உள்ள கண்ணாடியில் வெளிச்சம் சிறிது குறைவாக விழும். கறுப்பாக உள்ள கண்ணாடியில் வெளிச்சமே வராது. இவ்விதமே மனிதரின் நிலைமை ஆத்மா எந்த அளவிற்கு சுத்தமாக உள்ளதோ அந்த அளவிற்கே இறைவன் அருளை அவர்களால் உணர முடியும். இறைவனுக்குப் பேதங்கள் இல்லை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இறைவன் படைத்தது என்கின்ற போது அனைவரும் அவரின் குழந்தைகள். இத்தகைய நிலையில் ஒருவருக்கு நலம் தருவதும் மற்றவருக்குத் துன்பம் தருவதும் இல்லை. பின் ஏன் சிலருக்கு கடினம் என்றால் அவரவர் கொண்டு வந்த கர்ம மூட்டைகளின் நிலைகளே ஆகும். இந்நிலையில் ஒன்றை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை நாம் தியானத்தின் வழியாகவும் வழிபாட்டின் வழியாகவும் தயார் செய்து கொண்டால் அருளைப் பெறுவதை உணர்வதையும் உணராமல் இருப்பதையும் பெரும் அளவில் அறிந்து கொள்ள முடியும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #32

13-11-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: பொதுவாக அனைத்தும் கர்மவிதிப்படி நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. இத்தகைய கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியுமா?

உறுதியாக மாற்றிவிட முடியும். ஏன் என்றால் கர்ம விதிகள் இறைவனால் மாற்ற முடியாவிட்டால் இறைவனை விட கர்மவிதி பெரிதாகும் அல்லவா? இறைவனே பெரியவன். ஆகையால் கர்ம விதிகளை இறைவனால் மாற்றிவிட முடியும். இத்தகைய நிலையில் சில விஷேச நாட்களில் உலக நன்மைக்காக இறைவன் கர்ம நிலைகளை மாற்றிவிட இயலும். மேலும் பொதுவாக அவரவர் தன் கர்ம விதிகளை தீர்த்தல் வேண்டும் என விதியும் உண்டு. இது மனதினால், உடலால், துயரத்தால், தவத்தால், வழிபாட்டால் எனப் பல வகையில் தீர்த்திட முடியும். நல் எண்ணம் படைத்தோர் இதனை தியானவழி பூஜை வழிகளில் தீர்த்திடுகின்றனர். இவ்விதம் இருந்த போதிலும் அவரவர் செய்த கர்மத்திற்கு ஏற்றார் போல் மன வேதனைகளும் உடல் வேதனைகளும் அவர்களைத் தொடரும். காரணம் அவரவர் தம் சுமைகளை பிறக்கும் பொழுது கொண்டு வருவதே. இது மட்டுமல்லாது அக்குறைகளை தீர்த்திட முயற்சிக்காமல் மேலும் சில கர்ம வினைகளை சேர்ப்பதே மனிதனின் நிலைக்குக் காரணம். தீவிரமான வழிபாடு தியான முறைகள் சகிப்புத்தன்மை ஆகியவற்றை வளர்ப்பதோடு எதிர்பார்ப்பற்ற நிலையில் வாழ்வதும் எளிதாக கர்ம நிலைகளை மாற்றி இறைவனின் பாதம் அடைய வழி வகுக்கும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #31

17-10-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேள்வி: ஆன்மிக பாதையில் தடைகள் பல வருகின்றதே இறைவனை நாடத் தடைகள் ஏன் வருகின்றது?

தடைகள் என்பது பொதுவாக அனைத்திலும் வரக்கூடியது என்பதை அறிதல் வேண்டும். தடை என்றால் அத்தடைகளை மீற வேண்டும் என்பதே பொருள். தடை ஒன்று இருந்தால் அதைச் சுற்றிச் செல்லலாம். அதன் மீது தாவிச் செல்லலாம் இல்லை மாற்று வழியாகச் செல்லலாம். தடைகளை நாம் தாண்டிச் செல்ல நம் ஆன்மிக வளர்ச்சி பெருமளவில் வளரும் என்பது இதற்குப் பொருள். தடைகள் இல்லையேல் ஆன்மிகப் பாதையில் சாதனை புரியும் வாய்ப்புக்கள் கிடைக்காது என்ற ஓர் நிலையும் உள்ளது. போராடிச் செல்வதே எப்பொழுதும் நலம். அவ்விதம் போராட்டம் நடத்தும் காலங்களில் நாம் நம்முடைய குறைகளையும் நிறைகளையும் தானாக அறிவோம். அதற்கு ஏற்றாற் போல் நாம் செல்வதும் உண்டு. இது மட்டும் இல்லாமல் தடைகளை வெல்ல பெரியோர்களை நாடுவோம். இவ்வழியில் பெரியோர்களின் ஆசிகளும் கிடைக்கும். இதற்காகத்தான் தடைகளை நம் வாழ்க்கையில் பலவகைகளாக அனைவரும் காண்கிறோம். குறிப்பாக ஆன்மிகப் பாதையில் தடைகள் ஓர் தடையல்ல ஓர் பிரசாதமாக காணுதல் வேண்டும். ஏனெனில் நாம் அத்தடைகளைத் தாண்டி மேலே செல்லும் போது ஆண்டவன் ஆனந்தம் கொள்கிறான். ஆனந்தத்தின் பூரிப்பால் அவன் அருள் புரிகின்றான். அந்த அருளை நாமும் பெற மேலும் மேலும் மேன்மைகள் உண்டாகும் என்பதே பொருளாகும்.