பாடல் #1653: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)
கதிர்கொண்ட காந்தங் கனலின் வடிவா
மதிகண்ட காந்த மணிநீர் வடிவாஞ்
சதிகொண்டு தாக்கி யெரியின் வடிவா
மெரிகொண்ட வீசனெ ழில்வடி வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கதிரகொணட காநதங கனலின வடிவா
மதிகணட காநத மணிநீர வடிவாஞ
சதிகொணடு தாககி யெரியின வடிவா
மெரிகொணட வீசனெ ழிலவடி வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கதிர் கொண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்டு தாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே.
பதப்பொருள்:
கதிர் (இறையருள் பெற்று பொன் போன்ற பிரகாசமான உடலைக்) கொண்ட (கொண்டு) காந்தம் (தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள்) கனலின் (வெப்பத்தின்) வடிவு (வடிவமாக) ஆம் (இருக்கின்றார்கள்)
மதி (இறையருளால் உண்மை ஞானத்தை) கண்ட (கண்டு கொண்டு) காந்தம் (தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள்) மணி (இரசமணியின்) நீர் (நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போல தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தை தருகின்ற) வடிவு (ஞான வடிவமாக) ஆம் (இருக்கின்றார்கள்)
சதி (தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை) கொண்டு (கொண்டு) தாக்கி (அவற்றை தாக்கி) எரியின் (எரித்து அவற்றை) வடிவு (நெருப்பின் வடிவமாக) ஆம் (ஆக்கி விடுவதே)
எரி (தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக்) கொண்ட (கொண்டு இருக்கின்ற) ஈசன் (இறைவனின்) எழில் (பேரழகு) வடிவு (வடிவத்தின்) ஆமே (தத்துவம் ஆகும்).
விளக்கம்:
இறையருள் பெற்று பொன் போன்ற பிரகாசமான உடலைக் கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் வெப்பத்தின் வடிவமாக இருக்கின்றார்கள். இறையருளால் உண்மை ஞானத்தை கண்டு கொண்டு தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்க்கின்ற ஞானிகள் இரசமணியின் நீரால் இரும்பையும் தங்கமாக்குவது போல தங்களை நாடி வந்த மற்றவர்களுக்கும் ஞானத்தை தருகின்ற ஞான வடிவமாக இருக்கின்றார்கள். தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை எப்படி அழிக்க வேண்டும் என்கின்ற சூழ்ச்சியை கொண்டு அவற்றை தாக்கி எரித்து அவற்றை நெருப்பின் வடிவமாக ஆக்கி விடுவதே தமது இடது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியைக் கொண்டு இருக்கின்ற இறைவனின் பேரழகு வடிவத்தின் தத்துவம் ஆகும்.
கருத்து:
இறைவன் தமது திருக்கரத்தில் நெருப்புச் சட்டியை வைத்திருப்பதன் தத்துவம் தம்மை சரணடைந்த அடியவர்களின் வினைகளை அழித்து நெருப்பாக்குவதே ஆகும். அது போலவே இறையருளால் ஞானத்தை பெற்ற ஞானியர்களும் இரும்பை ஈர்த்து இழுக்கின்ற காந்தத்தைப் போல தங்களை நோக்கி மற்றவர்களையும் ஈர்த்துக் கொண்டு இரும்பு போல இருக்கின்ற அவர்களின் அறிவையும் தங்கம் போல மாற்றுகின்ற இரசமணி நீராக இருக்கின்றார்கள்.