பாடல் #1766

பாடல் #1766: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

வேண்டி நின்றேதொழு தேன்வினை போயற
வாண்டொரு திங்களும் நாளு மளக்கின்ற
காண்டகை யானோடும் கன்னி யுணரினு
மூண்டகை மாறினு மொன்றது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெணடி நினறெதொழு தெனவினை பொயற
வாணடொரு திஙகளும நாளு மளககினற
காணடகை யானொடுங கனனி யுணரினு
மூணடகை மாறினு மொனறது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற
ஆண்டு ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண் தகை ஆன் ஓடும் கன்னி உணரினும்
ஊண் தகை மாறினும் ஒன்று அது ஆமே.

பதப்பொருள்:

வேண்டி (இறைவனை வேண்டி) நின்றே (நின்று) தொழுதேன் (வணங்கினேன்) வினை (எனது வினைகள் அனைத்தும்) போய் (நீங்கி) அற (அழிந்து விடும் படி)
ஆண்டு (ஆண்டுகள்) ஒரு (ஒவ்வொன்றையும்) திங்களும் (மாதங்கள்) நாளும் (நாட்கள்) அளக்கின்ற (என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை)
காண் (கண்டு தரிசிக்கும்) தகை (இயல்போடு) ஆன் (இருக்கின்ற நாயகனாகிய) ஓடும் (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற) கன்னி (என்றும் இளமையான இறைவியையும்) உணரினும் (உணர்ந்து தொழுதாலும்)
ஊண் (தமது உடலின்) தகை (இயல்பை கடினமான சாதகங்களால்) மாறினும் (மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும்) ஒன்று (இரண்டுமே ஒன்றான) அது (ஞான இலிங்கத்தின் வழியாகவே) ஆமே (இருக்கின்றது).

விளக்கம்:

எனது வினைகள் அனைத்தும் நீங்கி அழிந்து விடும் படி இறைவனை வேண்டி நின்று வணங்கினேன். ஆண்டுகள் ஒவ்வொன்றையும் மாதங்கள், நாட்கள் என்று இருக்கின்ற உயிர்களின் வாழ் நாளை அளந்து அருளுபவனை கண்டு தரிசிக்கும் இயல்போடு இருக்கின்ற நாயகனாகிய இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற என்றும் இளமையான இறைவியையும் உணர்ந்து தொழுதாலும், தமது உடலின் இயல்பை கடினமான சாதகங்களால் மாற்றி யோகத்தின் மூலம் உணர்ந்தாலும், இரண்டுமே ஒன்றான ஞான இலிங்கத்தின் வழியாகவே இருக்கின்றது.

பாடல் #1767

பாடல் #1767: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

ஆதிபர தெய்வ மண்டத்து நற்றெய்வஞ்
சோதி யடியார் துடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வ நின்மல னெம்மிறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதிபர தெயவ மணடதது நறறெயவஞ
சொதி யடியார துடரும பெருநதெயவம
நீதியுள மாதெயவ நினமல னெமமிறை
பாதியுள மனனும பராசததி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதி பர தெய்வம் அண்டத்து நல் தெய்வம்
சோதி அடியார் தொடரும் பெரும் தெய்வம்
நீதி உள் மா தெய்வம் நின் மலன் எம் இறை
பாதி உள் மன்னும் பரா சத்தி ஆமே.

பதப்பொருள்:

ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) பர (பரம்பொருளாகிய) தெய்வம் (இறைவன்) அண்டத்து (அண்டங்களுக்கு எல்லாம்) நல் (நன்மை செய்கின்ற) தெய்வம் (இறைவன்)
சோதி (தமக்குள் சோதி வடிவாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொண்ட) அடியார் (அடியவர்களை) தொடரும் (எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற) பெரும் (மாபெரும்) தெய்வம் (இறைவன்)
நீதி (தர்மங்கள் அனைத்திற்கும்) உள் (மூலப் பொருளாக இருக்கின்ற) மா (மாபெரும்) தெய்வம் (இறைவன்) நின் (இப்படி எந்தவிதமான) மலன் (குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான) எம் (எமது) இறை (இறைவன்)
பாதி (அவனுடைய திருமேனியில் சரிபாதியாக) உள் (உள்ளே) மன்னும் (எப்போதும் நிலைபெற்று சேர்ந்தே இருக்கின்ற) பரா (அசையும் சக்தியாகிய) சத்தி (இறைவியோடு) ஆமே (சேர்ந்தே இருக்கின்றான்).

விளக்கம்:

ஆதியிலிருந்தே இருக்கின்ற பரம்பொருளாகிய இறைவன், அண்டங்களுக்கு எல்லாம் நன்மை செய்கின்ற இறைவன், தமக்குள் சோதி வடிவாக இருக்கின்ற இறைவனை உணர்ந்து கொண்ட அடியவர்களை எப்போதும் பிரியாமல் சேர்ந்தே இருக்கின்ற மாபெரும் இறைவன், தர்மங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக இருக்கின்ற மாபெரும் இறைவன், இப்படி எந்தவிதமான குற்றங்களும் குறைகளும் இல்லாத தூய்மையான எமது இறைவன் தனது திருமேனியில் சரிபாதியாக உள்ளே எப்போதும் நிலைபெற்று சேர்ந்தே இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவியோடு ஞான இலிங்கமாக இருக்கின்றான்.

பாடல் #1768

பாடல் #1768: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுளே
சுத்த சிவபதந் தோயாத தூவெளி
யத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலா
மொத்தயு மாமீசன் றானான துண்மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததிககு மெலெ பராசததி தனனுளெ
சுதத சிவபதந தொயாத தூவெளி
யததன திருவடிக கபபாலைக கபபாலா
மொததயு மாமீசன றானான துணமையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்திக்கு மேலே பரா சத்தி தன் உள்ளே
சுத்த சிவ பதம் தோயாத தூ வெளி
அத்தன் திரு அடிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆம்
ஒத்தயும் ஆம் ஈசன் தான் ஆனது உண்மையே.

பதப்பொருள்:

சத்திக்கு (உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும்) மேலே (மேலே அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற) பரா (அசையும்) சத்தி (சக்தியாகிய) தன் (இறைவிக்கு) உள்ளே (உள்ளே சரிபாதியாக நிற்கின்ற)
சுத்த (ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான) சிவ (சிவப் பரம்பொருளின்) பதம் (திருவடியானது) தோயாத (எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப் படாததுமாகிய) தூ (தூய்மையான) வெளி (பரவெளியில் வீற்றிருக்கின்றது)
அத்தன் (அப்படி இருக்கின்ற அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனின்) திரு (திரு) அடிக்கு (அடிகளானது) அப்பாலைக்கு (அண்ட சராசரங்களையும் தாண்டி) அப்பால் (பரவெளியையும் தாண்டி இருக்கின்ற) ஆம் (எல்லையில்லா இடத்தில்)
ஒத்தயும் (தனித்தும்) ஆம் (இருக்கின்றான்) ஈசன் (எப்பொருளுக்கும் தலைவனாகிய இறைவன்) தான் (அவன் தானே) ஆனது (அனைத்துமாக இருப்பது) உண்மையே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கின்ற இறை சக்திக்கும் மேலே அண்ட சராசரங்களை இயக்கிக் கொண்டு இருக்கின்ற அசையும் சக்தியாகிய இறைவிக்கு உள்ளே சரிபாதியாக நிற்கின்ற ஒரு குற்றமும் குறையும் இல்லாத தூய்மையான சிவப் பரம்பொருளின் திருவடியானது, எதிலும் குறைவில்லாததும் எதனாலும் பாதிக்கப் படாததுமாகிய தூய்மையான பரவெளியில் வீற்றிருக்கின்றது. அப்படி இருக்கின்ற அனைத்திற்கும் தந்தையாகிய இறைவனின் திரு அடிகளானது அண்ட சராசரங்களையும் தாண்டி பரவெளியையும் தாண்டி இருக்கின்ற எல்லையில்லா இடத்தில் தனித்தும் இருக்கின்றான் எப்பொருளுக்கும் தலைவனாகிய இறைவன். அவன் தானே அனைத்துமாக இருப்பது உண்மையே ஆகும்.

பாடல் #1769

பாடல் #1769: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

கொழுந்தினைக் காணிற் குவலையந் தோன்று
மெழுந்தடங் காணி லிருக்கலு மாகும்
பரந்தடங் காணிற் பராபதி மேலே
திரண்டெழக் கண்டவர் சிந்தையு ளானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கொழுநதினைக காணிற குவலையந தொனறு
மெழுநதடங காணி லிருககலு மாகும
பரநதடங காணிற பராபதி மெலெ
திரணடெழக கணடவர சிநதையு ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கொழுந்தினை காணில் குவலையம் தோன்றும்
எழுந்த தடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்த தடம் காணில் பரா பதி மேலே
திரண்டு எழ கண்டவர் சிந்தை உள் ஆனே.

பதப்பொருள்:

கொழுந்தினை (தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின்) காணில் (ஆரம்ப நிலையை தரிசிக்கும் சாதகர்களுக்கு) குவலையம் (உலகங்கள் அனைத்திலும்) தோன்றும் (சூட்சுமமாக அவன் கலந்து இருப்பது தெரியும்)
எழுந்த (அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த) தடம் (சுவடை) காணில் (கண்டு உணர்ந்தால்) இருக்கலும் (அதன் மூலம் அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருப்பதும்) ஆகும் (முடியும்)
பரந்த (தமக்குள்ளிருந்து தோன்றிய இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவி இருக்கின்ற) தடம் (சுவடை) காணில் (கண்டு உணர்ந்தால்) பரா (பராசக்தியின்) பதி (தலைவனாக) மேலே (அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம்)
திரண்டு (அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாக திரண்டு) எழ (எழுந்து நிற்பதை) கண்டவர் (கண்டு உணர்ந்த சாதகர்களின்) சிந்தை (அறிவுக்கு) உள் (உள்ளே) ஆனே (அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான்).

விளக்கம்:

தமக்குள்ளிருந்து ஞானமாக வெளிப்படுகின்ற இறைவனின் ஆரம்ப நிலையை தரிசிக்கும் சாதகர்களுக்கு உலகங்கள் அனைத்திலும் சூட்சுமமாக அவன் கலந்து இருப்பது தெரியும். அவன் தமக்குள்ளிருந்து எழுந்து வந்த சுவடை கண்டு உணர்ந்தால் அதன் மூலம் அவனை அடைந்து எப்போதும் அவனோடு சேர்ந்தே இருப்பதும் முடியும். தமக்குள்ளிருந்து தோன்றிய இறைவனே அனைத்து உலகங்களுக்கும் பரவி இருக்கின்ற சுவடை கண்டு உணர்ந்தால் பராசக்தியின் தலைவனாக அனைத்திற்கும் மேலே அவன் வீற்றிருப்பதை உணரலாம். அப்படி அனைத்திலும் கலந்து நிற்கின்ற இறைவன் ஒன்றாக திரண்டு எழுந்து நிற்பதை கண்டு உணர்ந்த சாதகர்களின் அறிவுக்கு உள்ளே அவன் எப்போதும் ஞான இலிங்கமாக வீற்றிருப்பான்.

பாடல் #1770

பாடல் #1770: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

எந்தை பரமனு மென்னம்மை கூட்டமு
முந்த வுரைத்து முறைசொல்லில் ஞானமாஞ்
சந்தித் திருந்த விடம்பெருங் கண்ணியை
யுந்தியின் மேல்வைத்து உகந்திருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எநதை பரமனு மெனனமமை கூடடமு
முநத வுரைதது முறைசொலலில ஞானமாஞ
சநதித திருநத விடமபெருங கணணியை
யுநதியின மெலவைதது உகநதிருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எந்தை பரமனும் என் அம்மை கூட்டமும்
உந்த உரைத்து முறை சொல்லில் ஞானம் ஆம்
சந்தித்து இருந்த இடம் பெரும் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்து இருந்தானே.

பதப்பொருள்:
எந்தை (எமது தந்தையாகிய) பரமனும் (பரம்பொருளும்) என் (எமது) அம்மை (தாயாகிய) கூட்டமும் (அனைத்து விதமான சக்திகளும்)
உந்த (முழுவதுமாக தாம் உணர்ந்ததை) உரைத்து (எடுத்துச் சொல்லி) முறை (தகுதியானவர்களுக்கு உணர்ந்து கொள்ளும் படி) சொல்லில் (சொல்ல முடிந்தால்) ஞானம் (அதுவே உண்மை ஞானம்) ஆம் (ஆகும்)
சந்தித்து (அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு இறைவனை சந்தித்து) இருந்த (இருக்கின்ற) இடம் (இடம்) பெரும் (அழகிய பெரும்) கண்ணியை (கண்களை உடைய இறைவி இறைவனோடு சேர்ந்து)
உந்தியின் (நடுவாகிய நிலைக்கு) மேல் (மேல்) வைத்து (வைத்து இருக்கும் போது அங்கே) உகந்து (இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக) இருந்தானே (இருப்பான்).

விளக்கம்:

எமது தந்தையாகிய பரம்பொருளும், எமது தாயாகிய அனைத்து விதமான சக்திகளும் முழுவதுமாக தாம் உணர்ந்ததை எடுத்துச் சொல்லி தகுதியானவர்களுக்கு உணர்ந்து கொள்ளும் படி சொல்ல முடிந்தால் அதுவே உண்மை ஞானம் ஆகும். அப்படி உண்மை ஞானம் பெற்ற ஞானிகளுக்கு அழகிய பெரும் கண்களை உடைய இறைவி இறைவனோடு சந்தித்து இருக்கின்ற இடமாக பாடல் #1764 இல் உள்ளபடி நடுவாகிய நிலைக்கு மேல் வைத்து இருக்கும் போது அங்கே இறைவனும் விருப்பத்தோடு ஞான இலிங்கமாக இருப்பான்.

பாடல் #1771

பாடல் #1771: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன் விளையாட்டா முயிராக்கி
யொத்த விருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்த மதாகுந் துரியம் பிறிவித்துச்
சித்த மகிழ்ந்து சிவமகமாக் குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவன விளையாடடா முயிராககி
யொதத விருமாயா கூடடத திடைபூடடிச
சுதத மதாகுந துரியம பிறிவிததுச
சிதத மகிழநது சிவமகமாக குமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் விளையாட்டு ஆம் உயிர் ஆக்கி
ஒத்த இரு மாயா கூட்டத்து இடை பூட்டி
சுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்து
சித்தம் மகிழ்ந்து சிவம் அகம் ஆக்குமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) விளையாட்டு (ஆடுகின்ற திருவிளையாட்டின்) ஆம் (மூலம்) உயிர் (உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை) ஆக்கி (உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து)
ஒத்த (ஒன்றாக இருக்கின்ற) இரு (சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான) மாயா (மாயைகளின்) கூட்டத்து (கூட்டத்திற்கு) இடை (நடுவில்) பூட்டி (பந்த பாசங்களால் பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள்)
சுத்தம் (தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம்) அது (அந்த உயிர்) ஆகும் (ஆகும் போது) துரியம் (அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும்) பிறிவித்து (அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு)
சித்தம் (அந்த உயிரின் சித்தத்தை) மகிழ்ந்து (பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து) சிவம் (சிவமாகவே) அகம் (அந்த உயிரின் உள்ளத்தை) ஆக்குமே (ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தாங்கள் ஆடுகின்ற திருவிளையாட்டின் மூலம் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப ஐந்து பூதங்களால் உடலை உண்டாக்கி அதனோடு உயிரை சேர்த்து, ஒன்றாக இருக்கின்ற சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டு விதமான மாயைகளின் கூட்டத்திற்கு நடுவில் பந்த பாசங்களால் அந்த உயிர்களை பூட்டி அவர்களின் வினைகளை அனுபவிக்க வைக்கின்றார்கள். அந்த உயிர்களில் தம்மை அடைய விரும்பி முயற்சி செய்கின்ற உயிர்களின் வினைகளை சிறிது சிறிதாக நீக்கி சுத்தம் செய்து, அது அனுபவிக்க வேண்டிய அனைத்து அவத்தைகளையும் அதனிடமிருந்து மாற்றி நீக்கி விட்டு, அந்த உயிரின் சித்தத்தை பேரின்பத்தில் மகிழ்ந்து இருக்கும் படி செய்து, சிவமாகவே அந்த உயிரின் உள்ளத்தை ஞான இலிங்கமாக்கி விடுவார்கள்.

பாடல் #1772

பாடல் #1772: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்
சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவனறன விளையாடடுத தாரணி
சததி சிவமுமாஞ சிவஞ சததியாகுஞ
சததி சிவமனறித தாபரம வெறிலலைச
சததி தானெனறுஞ சமைநதுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமும் ஆம் சிவம் சத்தி ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்தி தான் ஒன்றும் சமைந்து உரு ஆகுமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) தன் (தங்கள்) விளையாட்டு (திருவிளையாட்டால்) தாரணி (அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள்)
சத்தி (இறைவியானவள்) சிவமும் (இறைவனுமாகவும்) ஆம் (இருக்கின்றாள்) சிவம் (இறைவனாவன்) சத்தி (இறைவியாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) அன்றி (இல்லாமல்) தாபரம் (இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள்) வேறு (வேறு) இல்லை (எதுவும் இல்லை)
சத்தி (இறைவி) தான் (தானே) ஒன்றும் (இறைவனோடு சேர்ந்து) சமைந்து (கலந்து) உரு (அனைத்து விதமான வடிவங்களாகவும்) ஆகுமே (ஆகுகின்றாள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.