திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை பகுதி-1

“திருமந்திரம் கூறும் புற சமைய நிந்தனை” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 16-10-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்

“திருமந்திரம் கூறும் ஜீவ காருண்யம் – சிவராத்திரியின் காரணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 1-03-2022 சிவராத்திரி அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

திருமந்திரம் சொல்லும் சிவ மணம்

“திருமந்திரம் சொல்லும் சிவ மணம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-03-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1605

ஞாதுரு ஞான ஞேயம் முன்னுரை:

பார்க்கின்றவன் என்பது சாதகரை குறிக்கும். சாதகர் தமது ஆன்மாவை மாயை நீங்கிய ஞானத்தோடு பார்க்கும் போது அது சிவமாகத் தெரிகின்றது. அதுவே ஞானத்தின் மூலம் பார்க்கப் படுகின்ற பொருளாகும். தமது ஆன்மா சிவமாக இருப்பதை ஞானத்தினால் பார்த்து உணர்ந்த சாதகருக்கு ‘நான்’ என்ற அகங்காரம் நீங்கி விடுகின்றது.

பாடல் #1605: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

நீங்கார் சிவானந்த நேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படராப் படரினு
மாங்கார நீங்கி யதனிலை நிற்கவே
நீங்கா வமுத நிலைபெற லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நீஙகார சிவானநத நெயததெ நினறிடப
பாஙகான பாசம படராப படரினு
மாஙகார நீஙகி யதனிலை நிறகவெ
நீஙகா வமுத நிலைபெற லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நீங்கார் சிவ ஆனந்த நேயத்தே நின்றிட
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுத நிலை பெறல் ஆமே.

பதப்பொருள்:

நீங்கார் (நீங்காமல்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்த (பேரானந்தத்தில்) நேயத்தே (தூய்மையான அன்பிலே) நின்றிட (நின்று இருப்பார்கள்)
பாங்கு (அப்படி நிற்கின்ற பாவனை) ஆன (விட்டுவிடாமல் இருக்கும் போது) பாசம் (பாசத் தளைகள்) படரா (மூடி விடாமல் இருக்கும்) படரினும் (பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட)
ஆங்காரம் (நான் என்கின்ற அகங்காரம்) நீங்கி (நீங்கி விட்டதால்) அதன் (பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத) நிலை (நிலையிலேயே) நிற்கவே (நிலைத்து நிற்பார்கள்)
நீங்கா (அப்போது எப்போதும் நீங்காத) அமுத (சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற) நிலை (நிலையை) பெறல் (அவர்களால் பெற) ஆமே (முடியும்).

விளக்கம்:

திருவடி பேற்றை பெற்ற அடியவர்கள் நீங்காமல் சிவப் பரம்பொருளின் பேரானந்தத்தில் தூய்மையான அன்பிலே நின்று இருப்பார்கள். அப்படி நிற்கின்ற பாவனை விட்டுவிடாமல் இருக்கும் போது பாசத் தளைகள் மூடி விடாமல் இருக்கும். பிறகு உலக நன்மைக்காக செயல்கள் செய்யும் போது பாசம் வந்தால் கூட நான் என்கின்ற அகங்காரம் நீங்கி விட்டதால் பாசத் தளைகளால் மறுபடியும் மாயையில் மூழ்கிவிடாத நிலையிலேயே நிலைத்து நிற்பார்கள். அப்போது எப்போதும் நீங்காத சமாதி நிலையில் அமிழ்தத்தை பருகிக் கொண்டே பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற நிலையை அவர்களால் பெற முடியும்.

பாடல் #1606

பாடல் #1606: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவ
ராயத்தி னின்ற வறிவறி வோரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞெயததெ நினறொரககு ஞானாதி நீஙகிடும
ஞெயததில ஞாதுரு ஞெயததில வீடாகும
ஞெயததின ஞெயததை ஞெயததை யுறறவ
ராயததி னினற வறிவறி வொரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நீங்கிடும்
ஞேயத்தில் ஞாது உரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தின் நின்ற அறிவு அறிவோரே.

பதப்பொருள்:

ஞேயத்தே (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து) நின்றோர்க்கு (நின்றவர்களுக்கு) ஞான (தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை) ஆதி (ஆராய்கின்ற அறிவு) நீங்கிடும் (நீங்கி விடும்)
ஞேயத்தில் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை) ஞாது (பார்க்கின்ற) உரு (உருவமே) ஞேயத்தில் (பார்க்கப்படுகின்ற பரம்பொருளில்) வீடு (முக்தி நிலை) ஆகும் (ஆகும்)
ஞேயத்தின் (ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில்) ஞேயத்தை (பரம்பொருளாக இருக்கின்ற) ஞேயத்தை (பரமாத்மாவோடு) உற்றவர் (சேர்ந்து இருக்கின்ற)
ஆயத்தின் (அடியவர் கூட்டத்துடன்) நின்ற (தாமும் சேர்ந்து நிற்கின்ற) அறிவு (அறிவை) அறிவோரே (அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்).

விளக்கம்:

ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவை சிவப் பரம்பொருளாக உணர்ந்து நின்றவர்களுக்கு தாமே சிவம் என்பதை உணர்கின்ற ஞானத்தை ஆராய்கின்ற அறிவு நீங்கி விடும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவில் சிவப் பரம்பொருளை பார்க்கின்ற உருவமே பார்க்கப்படுகின்ற பரம்பொருளில் முக்தி நிலை ஆகும். ஞானத்தினால் பார்க்கப் படுகின்ற ஆன்மாவாக உள்ள சிவப் பரம்பொருளில் பரம்பொருளாக இருக்கின்ற பரமாத்மாவோடு சேர்ந்து இருக்கின்ற அடியவர் கூட்டத்துடன் தாமும் சேர்ந்து நிற்கின்ற அறிவை அவர்கள் அறிந்து கொள்ளுவார்கள்.

பாடல் #1607

பாடல் #1607: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

தானென் றவனென் றிரண்டாகுந் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென் றபூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானென றவனென றிரணடாகுந தததுவந
தானென றவனென றிரணடுந தனிறகணடு
தானென றபூவை யவனடி சாததினால
நானென றவனெனகை நலலதொன றனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்ற அவன் என்ற இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.

பதப்பொருள்:

தான் (தான்) என்று (என்று தனியாகவும்) அவன் (இறைவன்) என்று (என்று தனியாகவும்) இரண்டு (இரண்டு விதம்) ஆகும் (ஆக பிரித்து வைத்து பார்க்கின்ற) தத்துவம் (தத்துவமானது)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) அவன் (இறைவன்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருள்) இரண்டும் (ஆகிய இரண்டையும்) தனில் (தமக்குள்ளேயே) கண்டு (கண்டு உணர்ந்து)
தான் (தான்) என்ற (என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை) பூவை (ஒரு பூவாக பாவித்து) அவன் (தமக்குள் இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளில்) சாத்தினால் (அதை சாத்தி வணங்கித் தொழுதால்)
நான் (அடியவர் நான்) என்று (என்று எதை எண்ணுகின்றாரோ அதை) அவன் (இறைவன்) என்கை (என்று உணர்வதே) நல்லது (நல்லதான) ஒன்று (ஒன்றாக) அன்றே (அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்).

விளக்கம்:

தான் என்று தனியாகவும் இறைவன் என்று தனியாகவும் இரண்டு விதமாக பிரித்து வைத்து பார்க்கின்ற தத்துவமானது, தான் என்று எண்ணப்படுகின்ற பொருள் இறைவன் என்று எண்ணப்படுகின்ற பொருள் ஆகிய இரண்டையும் தமக்குள்ளேயே கண்டு உணர்ந்து, தான் என்று எண்ணப்படுகின்ற பொருளாகிய ஆன்மாவை ஒரு பூவாக பாவித்து தமக்குள் இருக்கின்ற இறைவனின் திருவடிகளில் அதை சாத்தி வணங்கித் தொழுதால், அடியவர் நான் என்று எதை எண்ணுகின்றாரோ அதை இறைவன் என்று உணர்வதே நல்லதான ஒன்றாக அன்றிலிருந்தே உணர்ந்து கொள்ளுவார்.

பாடல் #1608

பாடல் #1608: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைசசன வாறாறு மகறறியெ வைதது
மெசச பரமனறன வியாததும மெலிடடு
நிசசய மாகச சிவமாககி நெயததா
லசசங கெடுததெனனை யாணடன னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைச்சன ஆறு ஆறும் அகற்றியே வைத்து
மெச்ச பரமன் தன் வியாத்தும் மேல் இட்டு
நிச்சயம் ஆக சிவம் ஆக்கி நேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனன் நந்தியே.

பதப்பொருள்:

வைச்சன (பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய) ஆறு (ஆறும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்களையும்) அகற்றியே (உடலிலிருந்து நீக்கி) வைத்து (வைத்து)
மெச்ச (அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த) பரமன் (பரம்பொருளாகிய இறைவன்) தன் (தன்னை போலவே) வியாத்தும் (அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற) மேல் (மேலான நிலைக்கு) இட்டு (என்னை கொண்டு வந்து)
நிச்சயம் (உறுதி) ஆக (ஆக) சிவம் (என்னை சிவப் பரம்பொருளாகவே) ஆக்கி (ஆக்கி) நேயத்தால் (அளவில்லாத தம்முடைய அன்பினால்)
அச்சம் (இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை) கெடுத்து (நீக்கி) என்னை (என்னை தமது) ஆண்டனன் (அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).

விளக்கம்:

பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்து ஆறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன் தன்னை போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னை கொண்டு வந்து உறுதியாக என்னை சிவப் பரம்பொருளாகவே ஆக்கி அளவில்லாத தம்முடைய அன்பினால் இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி என்னை தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார் குருநாதராக வந்த இறைவன்.

பாடல் #1609

பாடல் #1609: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தன னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

முனனை யறிவறி யாதவம மூடரபொற
பினனை யறிவறி யாமையைப பெதிததான
றனனை யறியப பரனாககித தறசிவத
தெனனை யறிவித திருநதன னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையை பேதித்தான்
தன்னை அறிய பரன் ஆக்கி தன் சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

பதப்பொருள்:

முன்னை (இறைவனே குருவாக வருவதற்கு முன்பு) அறிவு (அவனை அறிகின்ற அறிவை) அறியாத (அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற) அம் (இந்த உலகத்து) மூடர் (முட்டாள்களைப்) போல் (போலவே யானும் இருந்தேன்)
பின்னை (என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு) அறிவு (அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும்) அறியாமையை (அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும்) பேதித்தான் (பிரித்து காட்டி அருளினான்)
தன்னை (அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை) அறிய (அறிந்து கொள்ளும் படி செய்து) பரன் (அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக) ஆக்கி (ஆக்கி) தன் (தமது) சிவத்து (சிவத் தன்மையை)
என்னை (யானும்) அறிவித்து (அறிந்து கொள்ளும் படி செய்து) இருந்தனன் (என்னுடன் வீற்றிருந்தார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).

விளக்கம்:

இறைவனே குருவாக வருவதற்கு முன்பு அவனை அறிகின்ற அறிவை அறியாமல் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டு மாயையிலேயே உழன்று கொண்டு இருக்கின்ற இந்த உலகத்து முட்டாள்களைப் போலவே யானும் இருந்தேன். என்னை தடுத்து ஆட்கொள்வதற்காக இறைவனே குருவாக வந்த பிறகு அவனை அறிந்து இருக்கின்ற ஞானத்தையும் அவனை அறியாமல் இருக்கின்ற அறியாமையையும் பிரித்து காட்டி அருளினான். அதன் பிறகு எனக்குள் இருக்கும் இறைவனை அறிந்து கொள்ளும் படி செய்து அவரைப் போலவே என்னையும் பரம்பொருளாக ஆக்கி தமது சிவத் தன்மையை யானும் அறிந்து கொள்ளும் படி செய்து என்னுடன் வீற்றிருந்தார் குருநாதராக வந்த இறைவன்.

பாடல் #1610

பாடல் #1610: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போதமுங் கூடாத கூட்டமு
நாணாத நாணமு நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டின னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காணாத கணணுடன கெளாத கெளவியுங
கொணாத பொதமுங கூடாத கூடடமு
நாணாத நாணமு நாதாநத பொதமுங
காணா யெனவநது காடடின னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காணாத கண் உடன் கேளாத கேள்வியும்
கோணாத போதமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாத அந்த போதமும்
காண் ஆய் என வந்து காட்டினன் நந்தியே.

பதப்பொருள்:

காணாத (இதுவரை இறைவனை கண்டு அறியாத) கண் (ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும்) உடன் (அதனுடன்) கேளாத (இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற) கேள்வியும் (நிலையை மாற்றுகின்ற அறிவையும்)
கோணாத (தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத) போதமும் (ஞானத்தையும்) கூடாத (இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி) கூட்டமும் (அவனோடு சேர்ந்து இருப்பதையும்)
நாணாத (இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி) நாணமும் (இறைவனை பற்றிக் கொள்வதையும்) நாத (நாதத்தின் / ஒலியின்) அந்த (எல்லையாக இருக்கின்ற) போதமும் (ஞானத்தையும்)
காண் (இதுவரை அறியாமல்) ஆய் (இருக்கின்றாய்) என (என்று கருணையோடு) வந்து (வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு) காட்டினன் (காட்டி அறிய வைத்தான்) நந்தியே (குருநாதனாக வந்த இறைவன்).

விளக்கம்:

இதுவரை இறைவனை கண்டு அறியாத ஊனக் கண்ணை மாற்றி காண வைக்கின்ற ஞானக் கண்ணையும் அதனுடன் இறைவன் என்று ஒருவர் இருப்பதையே அறியாமல் இருக்கின்ற நிலையை மாற்றுகின்ற அறிவையும் தன்னுடைய நிலையிலிருந்து எப்போதும் மாறாத ஞானத்தையும் இறைவனோடு தாம் சேர்ந்து இருக்கின்றோம் என்பதையே அறியாமல் இருந்த எண்ணத்தை மாற்றி அவனோடு சேர்ந்து இருப்பதையும் இறைவனைப் பற்றிக் கொள்ளாமல் உலகப் பற்றுக்களிலேயே இருந்த மனதை மாற்றி இறைவனை பற்றிக் கொள்வதையும் நாதத்தின் எல்லையாக இருக்கின்ற ஞானத்தையும் இதுவரை அறியாமல் இருக்கின்றாய் என்று கருணையோடு வந்து என்னை தடுத்து ஆட்கொண்டு காட்டி அறிய வைத்தான் குருநாதனாக வந்த இறைவன்.

பாடல் #1590

பாடல் #1590: ஆறாம் தந்திரம் – 2. திருவடிப் பேறு (குருவாக வந்த இறைவனின் திருவடிகளால் பெறும் நன்மை)

இசைந் தெழுமன்பி லெழுந்த படியில்
பசைந் திடுமீசனார் பாசத்து ளேகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
வுவந்த குருபத முள்ளத்து வந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இசைந தெழுமனபி லெழுநத படியில
பசைந திடுமீசனார பாசதது ளெகச
சிவநத குருவநது செனனிகை வைகக
வுவநத குருபத முளளதது வநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இசைந்து எழும் அன்பில் எழுந்த படியில்
பசைந்து இடும் ஈசனார் பாசத்து உள் ஏக
சிவந்த குரு வந்து சென்னி கை வைக்க
உவந்த குரு பதம் உள்ளத்து வந்தே.

பதப்பொருள்:

இசைந்து (இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில்) எழும் (எழுகின்ற) அன்பில் (உண்மையான அன்பில்) எழுந்த (இறைவன் எழுந்து) படியில் (அருளியதால்)
பசைந்து (அடியவரோடு ஒன்றாக சேர்ந்து) இடும் (இருக்கின்ற) ஈசனார் (இறைவனார்) பாசத்து (அடியவரின் பாசத் தளைகளை) உள் (அவருக்குள்ளிருந்து) ஏக (விலகும் போகும் படி செய்து)
சிவந்த (அருள் வடிவமான பரம்பொருளே) குரு (குருவாக) வந்து (வந்து) சென்னி (அடியவரின் தலையின் மேல்) கை (தமது திருக்கைகளை) வைக்க (வைத்து அருளும் போது)
உவந்த (அந்த அருளால் மகிழ்ந்து) குரு (குருவாக வந்திருக்கும்) பதம் (இறைவனின் திருவடிகளானது) உள்ளத்து (அடியவரின் உள்ளத்திற்குள்) வந்தே (வந்து வீற்றிருக்கும்).

விளக்கம்:

இறையருள் சேர்ந்து இருக்கின்ற மனதில் எழுகின்ற உண்மையான அன்பில் இறைவன் எழுந்து அருளியதால், அடியவரோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற இறைவனார் அடியவரின் பாசத் தளைகளை அவருக்குள்ளிருந்து விலகும் போகும் படி செய்து, அருள் வடிவமான பரம்பொருளே குருவாக வந்து அடியவரின் தலையின் மேல் தமது திருக்கைகளை வைத்து அருளுவார். அப்போது அந்த அருளால் மகிழ்ந்து இருக்கும் அடியவரின் உள்ளத்திற்குள் குருவாக வந்திருக்கும் இறைவனின் திருவடிகளானது வந்து வீற்றிருக்கும்.