பாடல் #1608

பாடல் #1608: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)

வைச்சன வாறாறு மகற்றியே வைத்து
மெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டு
நிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தா
லச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைசசன வாறாறு மகறறியெ வைதது
மெசச பரமனறன வியாததும மெலிடடு
நிசசய மாகச சிவமாககி நெயததா
லசசங கெடுததெனனை யாணடன னநதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைச்சன ஆறு ஆறும் அகற்றியே வைத்து
மெச்ச பரமன் தன் வியாத்தும் மேல் இட்டு
நிச்சயம் ஆக சிவம் ஆக்கி நேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனன் நந்தியே.

பதப்பொருள்:

வைச்சன (பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய) ஆறு (ஆறும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் முப்பத்து ஆறு தத்துவங்களையும்) அகற்றியே (உடலிலிருந்து நீக்கி) வைத்து (வைத்து)
மெச்ச (அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த) பரமன் (பரம்பொருளாகிய இறைவன்) தன் (தன்னை போலவே) வியாத்தும் (அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற) மேல் (மேலான நிலைக்கு) இட்டு (என்னை கொண்டு வந்து)
நிச்சயம் (உறுதி) ஆக (ஆக) சிவம் (என்னை சிவப் பரம்பொருளாகவே) ஆக்கி (ஆக்கி) நேயத்தால் (அளவில்லாத தம்முடைய அன்பினால்)
அச்சம் (இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை) கெடுத்து (நீக்கி) என்னை (என்னை தமது) ஆண்டனன் (அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார்) நந்தியே (குருநாதராக வந்த இறைவன்).

விளக்கம்:

பிறவி எடுக்கும் போது உடலில் இறைவன் வைத்து அருளிய முப்பத்து ஆறு தத்துவங்களையும் உடலிலிருந்து நீக்கி வைத்து அனைத்திற்கும் மேலான பொருள் என்று வியக்கத் தகுந்த பரம்பொருளாகிய இறைவன் தன்னை போலவே அனைத்திலும் வியாபித்து இருக்கின்ற மேலான நிலைக்கு என்னை கொண்டு வந்து உறுதியாக என்னை சிவப் பரம்பொருளாகவே ஆக்கி அளவில்லாத தம்முடைய அன்பினால் இனி பிறவி எடுத்து விடுவோமோ என்கின்ற எனது பயத்தை நீக்கி என்னை தமது அடிமையாக ஆக்கி ஆட்கொண்டு அருளினார் குருநாதராக வந்த இறைவன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.