பாடல் #1157

பாடல் #1157: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மாதுநல் லாளு மணாள னிருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய வல்லீரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

விளக்கம்:

பாடல் #1156 இல் உள்ளபடி சாதகரின் ஐந்து புலன்களையும் தடுத்தருளி பேரழகுடன் நன்மையின் வடிவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் இறைவனுடன் சேர்ந்து அவனில் சரிபாதியாக இருக்கின்ற போது ஜோதி வடிவத்தில் பூரண சக்தியாக வீற்றிருக்கின்றாள். இந்த இறைவியை தமது உயிருக்குத் துணையாக பெற்றுக் கொள்ள முடிந்த சாதகர்களுக்கு வினைகளினால் வரும் துன்பங்களைத் தீர்த்து அவர்களோடு இருக்கும் மாசு மலங்களை அகற்றி தூய்மையாக்கி அருளுகின்றாள் இறைவி.

கருத்து: இறைவி தன்னுடைய பெண் அம்சத்திலேயே இருந்தாலும் சரி பாதி ஆண் அம்சத்திலும் இறைவனோடு சேர்ந்து வீற்றிருக்கிறாள்.

பாடல் #1158

பாடல் #1158: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.

விளக்கம்:

பர வெளியில் பரந்து விரிந்திருக்கும் இறைவன் பேரன்பு மிக்க இறைவியின் இதயத் தாமரையிலும் பேரின்பத் தேனைக் கொண்டு மிகவும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலை உடைய இறைவியின் மனதிலும் வீற்றிருக்கின்றான். மாயை எனும் மயக்கத்தில் அடங்காதவனாகிய இறைவன் அடியவர்கள் வேண்டும் தன்மைக்கு ஏற்ப பலவகையாக நின்றாலும் தனது உடலில் சரி பாதி பாகம் இறைவியைக் கொண்டு இருப்பதால் இயல்பிலேயே இறைவியின் பெண் தன்மை உடையவனாகவும் இருக்கின்றான்.

கருத்து: இறைவன் தன்னுடைய ஆண் அம்சத்திலேயே இருந்தாலும் சரி பாதி பெண் அம்சத்திலும் இறைவியோடு சேர்ந்து வீற்றிருக்கிறான்.

பாடல் #1159

பாடல் #1159: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை யாணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்ற
பெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.

விளக்கம்:

பெண்ணாகப் பிறக்கும் ஒரு உயிருக்குள் பெண் தன்மை மட்டுமே இருக்கும் என்று நினைப்பது அறிவீனம். பெண் பாலாக பிறக்கும் உயிருக்குள் பாதி ஆண் தன்மையும் சேர்ந்தே பிறக்கின்றது. அதுபோலவே ஆண் பாலாக பிறக்கும் உயிருக்குள் பாதி பெண் தன்மையும் சேர்ந்தே பிறக்கின்றது. பாடல் #1157 இல் உள்ளபடி இறைவி தனது பெண் தன்மையிலேயே இறைவனின் ஆண் தன்மையையும் கொண்டிருக்கிறாள் என்பதையும் பாடல் #1158 இல் உள்ளபடி இறைவனும் தனது ஆண் தன்மையிலேயே இறைவியின் பெண் தன்மையையும் கொண்டிருக்கிறான் என்பதையும் அறிந்து கொண்ட சாதகர்கள் தமது பிறவியிலேயே இவர்களின் இரண்டு தன்மைகளும் தம்மோடு சேர்ந்தே பிறப்பதை முழுவதுமாக அறிந்து கொண்டு அதிலேயே மனம் இலயித்து சாதகம் செய்தால் பேச்சில்லாத மோன நிலையில் இறைவனை நோக்கி செல்லுவார்கள்.

பாடல் #1160

பாடல் #1160: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவுளுடன் புணர்ந்
தாச்சற்று எனுள்புகுந் தாலிக்குந் தானே.

விளக்கம்:

பாடல் #1159 இல் உள்ளபடி பேச்சில்லாத மோன நிலையில் இறைவனை நோக்கி செல்லுகின்ற சாதகர்கள் நன்மை தரும் பெரும் பொருளாகிய இறைவனை தமக்குள் தரிசித்த பெருமைக்கு உரியவர்கள். மாசு மருவில்லாத சோதி வடிவில் மனோன்மணி எனும் பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருக்கும் இறைவி மாசற்ற சோதியான இறைவனுடன் ஒன்றாகச் சேர்ந்து பூரண சக்தியாக குற்றம் குறையில்லாத அந்த சாதகர்களின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் அவர்களோடு வீற்றிருப்பாள்.

பாடல் #1161

பாடல் #1161: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆலிக்குங் கன்னி யரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்துபெண்ணா ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவ னுகந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #1160 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் வீற்றிருக்கும் இறைவி என்றும் இளமையுடன் இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவள் தன்னுடைய பெண் தன்மையில் இறைவனின் ஆண் தன்மையையும் சேர்த்து உலகங்கள் அனைத்திற்கும் பரவி நின்று அருள் பாலிக்கின்றாள். இவள் உலக இயக்கத்திற்கு தலைவியாகவும் வேதங்களின் தலைவியாகவும் இறைவனோடு கலந்து நின்று அருள் புரியும் விதத்தை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட சாதகர்கள் அவர்களோடு சேர்ந்து தாமும் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

பாடல் #1162

பாடல் #1162: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.

விளக்கம்:

பாடல் #1161 இல் உள்ளபடி இறைவியோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற சாதகன் தனது சாதகத்தில் முழுமையை அடைந்த பிறகு தமது ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தைப் பெறுகின்றான். அந்தப் பேரறிவு ஞானத்தை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலருக்குள் புகுந்து செல்லும்படி செலுத்தி அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாங்கியிருக்கும் இறைவியின் தோளோடு தன் தோளையும் சேர்த்து தாங்கி நிற்கின்றான்.

பாடல் #1163

பாடல் #1163: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
பொத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துஅது சொல்லகில் லேனே.

விளக்கம்:

திண்ணிய முலைகளையும் சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பையும் விருப்பத்திற்கு ஏற்ப பாம்பின் தலை போல விரித்து சுருங்கும் உடலையும் தூய்மையாக சொல்கின்ற இதழ்களையும் மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகளையும் பேரழகு பொருந்திய பெண் அம்சத்தையும் கொண்டு இருக்கும் சக்தியாக சாதகரே மாறி இறைவியோடு கலந்து இருக்கும் தன்மையை எம்மால் வார்த்தைகளில் விவரித்து சொல்ல இயலாது.

கருத்து:

பாடல் #1162 இல் உள்ளபடி இறைவியோடு சேர்ந்து இருந்து உலகத்தை தாங்கிக் கொண்டிருக்கும் இறைவியின் காரியங்களைச் செய்யும் சாதகர்கள் இறைவியின் அம்சங்களோடு வீற்றிருந்து செய்கின்ற நிலையை எம்மால் விவரித்து சொல்ல இயலவில்லை என்று அருளுகிறார்.

தத்துவ விளக்கம்:

இறைவியின் அம்சங்களில் திண்ணிய முலைகள் என்பது உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அளிக்கும் அமிழ்தப் பால் நிறைந்து இருப்பதைக் குறிக்கும். சங்கு போல வளைந்து செதுக்கியது போன்ற இடுப்பு என்பது அண்ட சராசரங்களையும் அதனதன் தன்மைக்கேற்ப தாங்கி இருப்பதைக் குறிக்கும். பாம்பின் தலை போல சுருங்கி விரியும் உடல் என்பது உலகங்கள் அனைத்தையும் தாங்கும் போது தேவைக்கு ஏற்ப தனது உருவத்தை விரிக்கவும் சுருக்கவும் கூடியவளாக இருப்பதைக் குறிக்கும். மயிலின் இறகு போன்ற மென்மையான திருவடிகள் என்பது அடியவர்களின் மனதை இனிமையாக வருடி அருளுவதைக் குறிக்கும். பேரழகு பொருந்திய பெண் என்பது அனைத்தையும் பெண் தன்மையில் இருந்து இறைவியின் சக்தி செயலாற்றுவதைக் குறிக்கும்.

பாடல் #1164

பாடல் #1164: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்
சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்
வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகி
மல்லவொண் ணாத மனோன்மணி தானே.

விளக்கம்:

வார்த்தைகளால் விவரித்து சொல்ல முடியாத அரும்பெரும் ஜோதியாக இருக்கும் இறைவனிடமிருந்து வெளிப்படும் கனிந்த நெருப்புத் தணல் பொதிந்து உள்ள பரவெளி மண்டலத்தில் பாடல் #1163 இல் உள்ளபடி இறைவியின் நிலையை அடைந்த சாதகர்கள் அந்த தணலின் வெப்பத்தை அனுபவித்து சொல்ல முடியாத திகைப்பில் அங்கேயே இருப்பார்கள். அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களும் இயங்குவதற்கு காரணமாகவும் எளிதில் வெற்றி கொள்ள முடியாததாகவும் இருக்கின்ற வினைகளை தனித்திருந்து ஆளுகின்ற பெருந்தலைவியாகிய இறைவியே எளிதில் அடைந்து விட முடியாத மனோன்மணி எனும் சிவசக்தியாக இருக்கிறாள்.

பாடல் #1165

பாடல் #1165: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

விளக்கம்:

பாடல் #1164 இல் உள்ளபடி மனோன்மணி எனும் சிவசக்தியே மேலுலகம் கீழுலகம் ஆகிய இரண்டு வகையான உலகங்களையும் (பாடல் #1153 இல் உள்ளபடி மேலுலகம் கீழுலகம் என்று இரண்டு வகையில் மொத்தம் 14 உலகங்கள் இருக்கின்றன) அண்ட சராசரங்களில் விரிந்திருக்கும் ஆகாயமாகவும் உயிர்களுக்கு வெப்பத்தை தருகின்ற நெருப்பாகவும் உலகத்திற்கு ஒளியையும் சக்தியையும் தருகின்ற சூரியனாகவும் இரவில் குளிர்ச்சியான ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மழையைப் பொழிய வைக்கின்ற மேகங்களாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரந்திருக்கும் மலைகளாகவும் குளிர்ந்த நீரைக் கொண்டிருக்கும் கடல்களாகவும் இருந்து அனைத்தையும் தனது அருட் பார்வையினாலேயே செயல்படுத்துகின்றாள்.

பாடல் #1166

பாடல் #1166: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்
மண்ணுடை யாரை மனிதரிற் கூட்டொணாப்
பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறைக் கண்டே.

விளக்கம்:

பாடல் #1165 இல் உள்ளபடி அனைத்தையும் தனது அருட் பார்வையினால் செயல்படுத்துகின்ற இறைவியோடு சேர்ந்து அவளிருக்கும் இடத்திலேயே வீற்றிருக்கும் பேறு பெற்ற சாதகர்கள் மண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களோடு ஒன்றாக சேர்ந்து இருக்காமல் தனித்திருந்து உண்மை ஞானத்தை உணர்ந்த பண்பைக் கொண்டவர்களாக இருப்பதால் மண்ணுலகத்தில் நிகழும் எதனாலும் பாதிக்கப்படாமல் விண்ணுலகத்தை தமது இருப்பிடமாகக் கொண்ட தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர்களை தமது ஞானத்தால் கண்டு கொண்டே இருப்பார்கள்.