மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #66

22-4-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பயம் எங்கிருந்து வருகின்றது? அதனை எவ்விதம் எதிர்ப்பது?

பொதுவாக நமக்குத் தெரியாத காரியங்களைக் கண்டு பயம் காண்கின்றோம் என்பதே உண்மை. இதற்கு உதாரணமாக இரு சக்கர வாகனங்களை ஓட்டக் கற்றுக் கொள்ளும் காலங்களில் செல்லும் வழியில் ஓர் கல்லைக் கண்டாலும் பயம் கொண்டு இறங்கி விடுகின்றோம் அல்லது விழுந்து விடுகின்றோம் அடிபடுகின்றோம். ஆனால் பழகிய பின்பு இவ்வளவு தானா என்கிற உணர்வு வந்துவிடப் பயம் போகின்றது. இவ்விதமே குழந்தைகள் நடக்க முயற்சிக்கும் காலங்களில் முதலில் பல முறைகள் விழுந்து எழுந்து பின்பு ஓட ஆரம்பிக்கின்றது. அப்படி ஓட ஆரம்பித்தபின் அது நடக்க முயற்சித்த காலத்தை மறந்து விடுகின்றது தான் விழுந்ததை எல்லாம் மறந்து விடுகின்றது அல்லவா? இவ்விதம் அறிந்த பின்பு பயம் விலகும் என்பதே உண்மையாகின்றது. அதனால் எதைக்கண்டு பயப்படுகின்றோமோ அக்காரியத்தை மீண்டும் மீண்டும் செய்தால் பயம் நீங்கும். சில நபர்கள் பயத்தால் ஓடி ஒளிகின்றனர். பயத்தால் பல காரியங்கள் செய்யாமல் இருக்கின்றனர். அவ்விதம் இருந்தால் நஷ்டப்படுவது நீங்களே என்பதை உணர வேண்டும். எது அச்சத்தைத் தருகின்றதோ அதனை மீண்டும் மீண்டும் செய்யுங்கள் பயத்தை வெல்லுங்கள். மேலும் எதிலும் நிதானம் வேண்டும். அதற்காக யாம் கூறிவிட்டோம் என்று நாகத்தைக் கையில் பிடிக்க முயற்சித்தல் கூடாது. சாதாரண நிலைகளில் பொதுவாக இளைஞர்களுக்கு நேரிடும் சில சம்பவங்கள், தேர்வுகள் (பரிட்சை) கணக்கு தொழிலுக்குச் செல்லும் போது நேர்முகத் தேர்ச்சிகள் இவையாவும் பயத்தைத் தரும். இதற்காக நாம் தொழிலுக்குச் செல்லவில்லை வீட்டிலேயே இருந்துவிடுகின்றோம் என்கின்ற கருத்து தவறானதாகும். இவையாவும் நீக்கிக்கொண்டால் உங்கள் வாழ்வில் பயம் என்பது காணாமல் சென்று விடும். ஏனெனில் மற்ற ஒருவரால் நம்மிடமிருந்து பறிக்க இயன்றதில் உச்ச பட்சத்தில் இருப்பது நமது உயிர் மட்டுமே அந்த உயிரை இறைவனிடம் அர்ப்பணித்து விட்டால் பின்பு பயம் ஏது? இதை மனதில் வைத்து செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #65

26-3-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிரார்த்தனை என்பது என்ன?

பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல், இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும். ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #64

26-2-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இறை சக்தி ஒன்று மட்டுமே இருக்கும் போது, நான் ஏன் காலத்தை வீணாக்கி மனிதர்களை நாடி அவர்களிடமிருந்து ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டும்?

தெய்வம் நேரடியாக வந்து யாதும் உபதேசிப்பதில்லை இதை நன்கு உணர்தல் வேண்டும். இறைவனிடம் நேரடியாக ஆன்மீகம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் மகத்தான தியாகங்கள் மகத்தான சாதனைகள் (தியானம்) செய்தல் வேண்டும். கலியுகத்தில் தெய்வ சக்தியானது நாம் கேட்கும் வினாக்களுக்கு மனித ரூபம் இல்லையேல் வேறு ஏதேனும் வழியில் விளக்கங்களை உணர்த்துவார். உண்மையாக வழிபாட்டில் ஈடுபடும் மகான்கள் வழியிலும் விளக்கங்கள் கிடைக்கக்கூடும். இதற்கு ஒருவர் நமக்கு உகந்த ஓர் குருவை தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்பது விதியாகும். இத்தகைய நிலையில் நாம் சாதனைகளைத் தெய்வத்தை நோக்கிச் செய்திட்டால் பின்பு அத்தெய்வத்தின் அருளால் நமக்கு ஓர் நல்ல வழிகாட்டியும் (குரு) கிடைத்திடுவார்.

திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #63

7-12-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தியானத்தை எவ்விதம் செய்தல் வேண்டும்?

மேலான இடத்தை விட்டுக் கீழான இடத்தை நோக்கி ஓடும் மழை நீரானது யதார்த்த நிலையாகும். இதற்கு மாறாக கீழ் நிலையிலிருந்து மனம்தனை மேல் செலுத்துவது மட்டுமின்றி மேல் நிலையும் அடைதல் வேண்டும் என்பதே ஆன்மீக நெறி. இது யதார்த்த நிலைக்கு மாறுபட்டது என்கின்ற போதிலும் மனமது செம்மையானால் எந்தக் கடினமும் இல்லை. மேல் நோக்குவதே ஆன்மீகத்திற்கு நலம் தரும் வழி என்றும் மேல் என்பது இறைவனை மட்டுமல்ல நல்ல குணங்களையும் நல்ல செயல்களையும் நல்ல சிந்தனைகளையும் குறிப்பது ஆகும். எவர் ஒருவர் நல்ல செயல்களைச் செய்கின்றாரோ அதைப் பின்பற்றுதல் வேண்டும். நல்ல சிந்தனைகளை எவர் அளித்தாலும் உடனடியாக அதைப் பின்பற்ற முயற்சித்தல் வேண்டும். இதில் தவறினால் வாய்ப்பு ஒன்று இழந்ததாகக் கண்டு கொள்ளலாம். இவ்விதமே அனைத்தும் மேல் நோக்கிச் சிந்திக்க மேல் நோக்கித் தியானம் செய்ய சிறப்புகள் உண்டாகும் என்பதே எமது அறிவுரையாகும். எவ்விதம் தியானம் செய்வது எனக் கேட்டால் இதனைக் குருவிடம் நேர்முகமாகக் கற்றுக் கொள்வதே சிறந்தது. மூன்று நான்கு வகை தியானங்களில் நமக்கு எது சிறப்பாக அமைகின்றதோ அதனை ஏற்றுக் கொண்டு ஈடுபாட்டோடு செய்திட மேன்மைகள் தாமாக தொடரும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #62

10-11-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கேடு நினைப்பவன் கெடுவான் என்கின்ற பழைய சொல்லிற்கு உள் அர்த்தம் என்ன?

பொதுவாக மற்றவர்களை கேடு நினைக்கின்றவன் கெடுவான் என்பது தான் பொருளாகின்றது. இருப்பினும் இதனை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும் கேடு நினைப்பவன் என்பது மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவன் மட்டுமல்ல பொதுவாகவே தீயகாரியங்கள் சதா நினைக்கின்றவனும் கேடு நினைக்கின்றவன் ஆவான். இவ்விதம் நினைக்கின்றவன் தகாத காரியங்களை பற்றி சதா நினைக்கின்றவனும் கெடுவான். கெடுவான் என்பதற்கு வேறு அர்த்தம் அழிந்து விடுவான் என்பதாகும் கெட்டு போவான் என்பது மட்டுமில்லாது கெடும் இது பொதுவாக தீபம் அனைவதற்கும் ஓர் வாக்காகும் சதா தீய காரியங்கள் நினைத்து இருக்கின்றவன் சித்த பிரம்மம் கண்டு தீபம் அனைவது போல் அனைந்து விடுவான் தன்னை மாய்த்துக் கொள்வான் என்பதும் பொருளாகும். எப்பொழுதும் தீய எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் கெட்ட எண்ணங்கள் மனதில் வரும் பொழுதும் அதனை சீர் (சரி) செய்யும் வகையில் உயர்ந்த எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும். தெய்வீக எண்ணங்கள் உடனடியாக வளர்த்தல் வேண்டும் இவ்விதம் செய்தால் தீயவை உடனே மறையும். இதனை கடைபிடிப்போர் சிலரே. ஏன் இவ்வாறு தீய எண்ணங்கள் வருகிறது என எண்ணுவோர் மட்டுமே தெய்வீக எண்ணங்களையும் நல்ல எண்ணங்களையும் உடனடியாக வளர்க்கின்றனர். இரண்டாவதாக இக்காலத்தில் பலரும் பல உபதேசங்கள் பெற்று நல்வார்த்தைகள் கேட்டு முழுமையாக கிரகித்துக் கொண்டு பாண்டித்யம் (இறைஅருள் இல்லாத அறிவு) பெறுகின்றனர். இவர்கள் வாழ்க்கையின் தத்துவங்களை அவை சொல்லும் விளக்கங்களை அமுல்படுத்துவதில்லை. இது சிறு வருத்தத்திற்கு உரியதாகும் ஏனெனில் அவ்வழிகளை கடைபிடிக்கும போது மனதில் பெரும் அமைதி கிடைக்கும். இதனை பலர் மறந்து விடுகின்றனர் துன்பம் வந்தால் அத்தின்பத்தில் மூழ்கி மேலும் மேலும் ஆழமாக பதிந்து விடுகின்றனர். துன்பம் வரும் பொழுது சிரிக்க முடியாது என்கின்ற போதிலும் அத்துன்பத்திலிருந்து மனதை எடுத்து ஏற்கனவே மனதில் நடந்த ஆனந்த காலத்திற்கு மனதை இழுத்துச் செல்ல வேண்டும். இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் விஷயங்களாகும் இன்பம் பெரிதாக வந்தால் மனதில் தீர்மானித்துக் கொள்ளுங்கள் பின் துன்பமும் வருகின்றது என்று இதில் எந்த வித மாற்றமும் இல்லை பெரும் துன்பம் வந்தால் இத்துன்பத்திற்கு பிறகு மகிழ்ச்சியான காலம் வரும் என உறுதியாக எடுத்துக் கொள்ளலாம். இவை இயற்கையின் விதி மட்டுமல்லாது அவரவர்களின் கர்மவிதியும் கூட கர்மம் இல்லாதவன் இவ்வுலகில் இருக்கமாட்டான் என்பது இதற்கு பெரும் விளக்கமாகும். இதனை நன்கு உணர்ந்து செயல்படுவீர்களாக.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #61

14-10-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

வைராக்கியம் என்று கூறினால் அது முழுமையாக இருக்க வேண்டும். எதார்த்தமான காரியங்களில் பெரும் வைராக்கியத்தைக் காணும் மக்கள் தெய்வ காரியங்களில் விட்டுவிடுவது ஏன் என எமக்கு குழப்பம் ஏற்படுகிறது. வைராக்கியம் என்பது மேல் நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பது விதியாகும். முழுமையாக இறைவனை அடைதல் வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் இருந்தால் மற்றவைகள் அனைத்தும் தானாக வீழ்ந்து விடும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றால் இறைவனை அடைவது கடினமாகும். படிப்படியாகத் தேவையற்றவையை விலக்குதல் வேண்டுமே ஓழிய திடீரென்று நான் இதனை விட்டு விடுகின்றேன் இதனை என்னிடமிருந்து நீக்குகின்றேன் இதனை தவிர்க்கின்றேன் (கெட்டபழக்கம், தீயகுணம்) என வாக்குகள் அளித்து விட்டு பின்பு அவ்வாக்கை திருப்பி எடுத்துக் கொண்டு பழைய நிலைக்குத் திரும்பும் நிலையைக் கண்டால் அது வெட்கத்துக்குரிய ஓர் நிலையாகும். இதனை உறுதியாக தவிர்த்தல் வேண்டும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #60

16-9-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஈசனைப் பல பெயர்கள் கூறி அழைக்கின்றனர். இவ்வாறு நாராயணனைப் பல பெயர்கள் கூறி அழைப்பதும் உண்டு. பலரும் எமது தெய்வம்தான் பெரிது மற்றவை சிறிது எனக் கூறுவதும் உண்டு. இது ரூபங்களை (உருவங்களை) வணங்கும் காலம் வரை தவறில்லை. அதனையும் தாண்டிச் செல்ல வேண்டுமானால் இத்தகைய ரூபங்களை மறத்தல் வேண்டும். குறிப்பாக ஜெகதீஸ்வரனே சிறப்பானவர் ஜம்புகேஸ்வரனே சிறப்பானவர் என்பதெல்லாம் ஆரம்ப காலங்களில் கூறுவது சரியாக இருக்கும். ஆனால் மேன்மை வேண்டும் ஞானம் வேண்டும் என்றால் பெயர்களை மறந்து ரூபமற்ற நிலையைத் தாண்டிச் செல்ல வேண்டும். எங்கும் அதே ஈஸ்வரன் அதே நாராயணன் என்று எண்ணிட வேண்டும். பின்பு எல்லாம் ஒன்றே என்ற நிலை பெற்றபின் சிவனும் விஷ்ணுவும் வேறில்லை என்கின்ற நிலை உணர்வீர். அதன் பின்பு அனைத்து நிலைகளிலும் மேன்மை அடைவீர்கள். அரியும் சிவனும் ஒன்றே அறியாதோர் வாயில் மண்ணே என்று இக்காலத்தில் ஓர் பழமொழி உண்டு. ஆனால் யாம் அரியும் சிவனும் ஒன்றே என்று அறியாதோர் அறிவு மண்ணே என்று கூறுவோம். இதனை உணர்ந்து நாமங்களிட்டு வழிபடுவதைக் குறைத்து வருவீர்களாக. எக்காலத்திலும் ஜம்புகேஸ்வரர் சுந்தரேஸ்வரரை விடச் சிறப்பானவராகவோ குறைந்தவராகவோ ஆக மாட்டார் என்பதை உணர வேண்டும். எல்லாம் ஒன்றே என்பதை மனதில் வைத்து வழிபடுவதே சிறப்பானதாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #59

23-7-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆடி மாதம் நல்ல காரியங்கள் ஏதும் செய்யக்கூடாது என்று கூறுகின்றார்களே அது ஏன்?

ஆடி மாதம் என்பது தீய மாதம் அல்ல என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக மனிதர்கள் தங்கள் காரியங்கள் செய்வதை நிறுத்தி தேவிகளின் காரியங்கள் செய்தல் வேண்டும் என்பதே அதற்குரிய விளக்கம். உதாரணமாக மனிதர்கள் சுபகாரியங்களில் ஈடுபடாமல் தெய்வ காரியங்களில் குறிப்பாக தேவியின் காரியங்களை நடத்தி அவளை மகிழச் செய்திட அனைத்தும் பெருகும். இதற்காகவே ஆடிப் பெருக்கு என்கிற ஒரு விழாவும் இருக்கிறது. இந்நிலையில் ஆடி ஆனந்தம் தரும் ஆண்டாருக்கும் நல் நிலையில் ஆனந்தம் கொடுக்கும். மனிதர்கள் அவர்களை நன்றாக பூஜித்திட வேண்டும் என்பதே விளக்கமாகும். ஆண்டார் என்று இங்கே யாம் எப்பிறவியினரையும் சார்ந்து கூறவில்லை. அகிலத்தை (உலகத்தை) ஆண்டாள் என்பதே இதற்குப் பொருளாகும். இவ்விதம் இருக்க அனைவரும் மூன்று நாட்களில் குறிப்பாக ஆதித்ய நாளிலும் (ஞாயிற்றுக் கிழமை) மங்களவன் நாளிலும் (செவ்வாய்க் கிழமை) வெள்ளிக் கிழமையன்றும் மறக்காமல் தேவிதனைக் கண்டு வணங்கி ஏதாவது தோத்திர வழிபாடு (ஜெப வழிபாடு) செய்திட நலன்கள் உண்டாகும்.

மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #58

26-6-2010 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இடுக்கன் வருங்கால் நகுக எனும் பழமொழியின்படி கடின காலங்களில் எவ்வாறு சிரிப்பு வரும்?

நல்லவைகள் நடக்கும்போதும் கடினங்கள் நடக்கும்போதும் நாம் சமமான மனநிலையில் இருத்தல் வேண்டும். நல்லவை நடக்கும்போது பெரிய அளவில் சிரிக்காமல் இருக்கப் பழகிக்கொண்டால் கடினம் வரும் காலத்தில் சிரிப்பும் தோன்றும். ஏனெனில் அனைத்தும் அவன் திருவிளையாடல் என அறிந்துகொண்டால் அந்தத் திருவிளையாடலின் அருமையை உணர்ந்து சிரிப்பே தோன்றும் கோபமும் குறையும் வேறொன்றும் தோனாது. ஒன்றை மனதில் நன்றாக நினைத்திட சென்ற ஜென்ம வினைகள் எல்லாம் நம்மைப் பற்றிக்கொள்வதன் விளைவால் இந்த ஜென்மத்தில் அந்த வினைகளைத் தீர்க்கும் வாய்ப்பும் இறைவன் அளித்திட அவ்வாய்ப்புகளில் துக்கமும் கலந்து நிற்கும் என்பதை உணர்தல் வேண்டும். இதில் தீமையைக் காணாமல் நல்ல வாய்ப்பு என எண்ணிக்கொண்டால் துக்கம் வரும் நிலை இல்லை. இருப்பினும் மனித இயல்பு ஒன்று உண்டு. நன்றாக இருக்கும் காலங்களில் சிரிப்பையும் தீயது என்று எண்ணும்போது துயரமும் அதிகமாக இருக்கும் என்கின்ற நிலையைக் காணுகின்றோம். இதற்கு முழுமையான காரணம் சரணாகதி இல்லாத நிலை. அனைவரும் இறைவனிடம் சரணாகதி அடையவேண்டும். முழுமையான சரணாகதி அடைந்தால் என்றும் ஆனந்தமே துயரம் என்னும் நிலைக்கு இடமில்லை. இதற்கெனவே பெரியோர்கள் சிவனே எனக் கிட என்று கூறுவதும் உண்டு. அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டுவிட நமக்குத் துயரமும் இல்லை பெரும் ஆனந்தமும் இல்லை அனைத்தும் சமம் ஆகின்றன. இவ்விதம் அனைத்தையும் தாண்டி சாட்சியாக நின்று காணும் நிலை அடைதல் வேண்டும்.