பாடல் # 807 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கரும் பாமே.
விளக்கம் :
பாவச் செயல்களைச் செய்ததனால் பிறப்பு இறப்புக்கு உட்பட்டு தீ வினைகள் நம்மை வருத்தும் பொழுது அதனை போக்க வழி தெரியாமல் இருப்பவர்கள் நாவின் நுனியால் உண்ணாக்குத் தொளையை அடைக்கும் பயிற்சியாகிய கேசரி யோகத்தைப் பயின்றால் எமனை வென்று விடலாம். பரந்த வினைகளை எல்லாம் ஆராய்ந்து அவற்றால் விளையும் பயன்கள் ஒன்றும் இல்லை என நன்கு அறிந்தவர்கள் தெய்வப் பணியில் ஈடுபட்டு கிடைக்கும் திருவருளை இனிய கரும்பு சுவைப்பது போல் அதன் இனிமையைச் சுவைப்பர்.