பாடல் #1633: ஆறாம் தந்திரம் – 6. தவ தூடணம் (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)
ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஓதலும வெணடா முயிரககுயி ருளளுறறாற
காதலும வெணடா மெயகாய மிடஙகணடாற
சாதலும வெணடாஞ சமாதியைக கூடினாற
பொதலும வெணடாம புலனவழி பொகாரககெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதியை கூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே.
பதப்பொருள்:
ஓதலும் (மந்திரங்களை ஓதுதல்) வேண்டாம் (தேவை இல்லை) உயிர்க்கு (தங்களின் உயிருக்கு) உயிர் (உயிராக) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை) உற்றால் (உணர்ந்து அடைந்து விட்டால்)
காதலும் (எந்த விதமான விருப்பங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) மெய் (அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள்) காயம் (தங்களின் உடலையே) இடம் (கோயிலாக) கண்டால் (ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால்)
சாதலும் (அழிவு என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (கைவரப் பெற்று விட்டால்)
போதலும் (இறைவனை தேடி எங்கும் போவது) வேண்டாம் (தேவை இல்லை) புலன் (ஐந்து புலன்களும்) வழி (காட்டுகின்ற வழிகளில்) போகார்க்கே (போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு).
விளக்கம்:
தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்து விட்டால் மந்திரங்களை ஓத வேண்டியது இல்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை. சமாதி நிலையை கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.