பாடல் #505

பாடல் #505: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப்
பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்
சீலமும் நோன்பும் இலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது ஆகுமே.

விளக்கம்:

மடி வற்றிப்போன பசுமாடு அழகாக இருக்கிறதே என்று குனிந்து அதற்கு புற்களை உணவாகக் கொடுத்து அதன் மடியிலிருந்து பாலைக் கறந்து குடித்து விடலாம் என்று நினைப்பது ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து பேரின்ப வாழ்வைப் பெற்று விடலாம் என்று நினைப்பது போலாகும். ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் தானம் பருவம் முடிந்த பிறகு விதைத்த பயிர் எப்படி வளர்ந்து செழிக்காதோ அதுபோல எந்தப் பயனையும் கொடுக்காமல் வீணாகிவிடும்.

உள்விளக்கம்: ஒழுக்கமும் தவமும் இல்லாதவர்கள் தானம் பெற தகுதி இல்லாதவர்கள் ஆவார்கள்.

பாடல் #506

பாடல் #506: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஈவது யோக இயம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்கா தவர்களுக்
கீவது பெரும்பிழை யென்றுகொள் ளீரே.

விளக்கம்:

தவம் யோகம் செய்து தீய குணங்களை போக்கி நன்மைகளைச் செய்து அனைத்து உயிர்களிடமும் அன்பாக இருக்கும் அடியவர்களுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். வேஷம் போட்டுக் கொண்டு நடித்தால் தானம் கிடைக்கும் என்கிற ஆசையில் மனதில் உண்மையான அன்பில்லாமல் இருப்பவர்களுக்கு தானம் கொடுப்பது மிகப்பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பாடல் #507

பாடல் #507: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

ஆமா றறியான் அதிபஞ்ச பாதகன்
தோமாறும் ஈசற்குந் தூய குரவற்குங்
காமாதி விட்டோர்க்குந் தரல்தந்து கற்றோன்
போமா நரகிற் புகான்போதங் கற்கவே.

விளக்கம்:

ஒழுக்கத்தில் செல்லும் வழியை அறியாமல் பஞ்சமகா பாவங்களை செய்கின்ற மகா பாவியாக இருந்தாலும் குற்றமில்லாத சிவனடியார்களுக்கும் தூய்மையான சிவஞானத்தைப் போதிக்கும் குருக்களுக்கும் காமம் மற்றும் பஞ்சமாக தீயகுணங்களை கைவிட்ட சிவயோகியர்களுக்கும் தரக்கூடிய தானத்தை தந்து அதன் பயனால் ஞானம் பெற்றுவிட்டால் மகா பாவங்கள் செய்திருந்தாலும் நரகத்திற்குப் போக மாட்டார்கள்.

உட்கருத்து: மகாபாவத்தை செய்தவர்களாக இருந்தாலும் முறையான தானத்தை சரியானவர்களுக்குச் செய்துவிட்டால் அதன் பயனால் பாவ வினைகள் தீர்ந்து நல் வினைகளைச் சேர்த்து நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

ஐந்து மகா பாவங்கள் (பாடல் #200 இல் காண்க):

  1. கொலை – தெரிந்தே ஒரு உயிரைக் கொல்வது
  2. களவு – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டு திருடுவது
  3. கள் – போதையில் மயங்கிக் கிடப்பது
  4. காமம் – மோகத்தில் மயங்கிக் கிடப்பது
  5. பொய் – உண்மையை மறைத்துப் பொய் பேசுவது

ஐந்து மகா தீய குணங்கள்:

  1. காமம் – மோகம்
  2. குரோதம் – கோபம்
  3. லோபம் – சுயநலம்
  4. மதம் – கர்வம், ஆணவம்
  5. மாச்சரியம் – பொறாமை

பாடல் #508

பாடல் #508: இரண்டாம் தந்திரம் – 17. அபாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதி இல்லாதவர்கள்)

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்
அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்
எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்
நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

விளக்கம்:

தம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு மலையளவு மாபெரும் பொருளை தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும் இறைவனை நினைக்காமல் தானம் பெற்ற இருவருமே ஏழு வித நரகங்களின் குழியை சென்று அடைவார்கள்.

பாடல் #501

பாடல் #501: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

திலமத் தனைபொன் சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோகம் தரும்
நிலமத் தனைபொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகங் குன்றுமே.

விளக்கம்:

உண்மையான அறிவைப் பெற்ற சிவ ஞானியர்களுக்கு ஒரு எள்ளின் அளவு தங்கத்தைக் கொடுத்தாலும் அதனை இறைவனே ஏற்றுக் கொண்டு அதன் பயனாக முக்தியையும், எண்ணியதை அடைகின்ற சக்தியையும், பேரின்பப் பெருவாழ்விற்கான வழியையும் தந்து அருளுவான். உலக அறிவை மட்டும் கொண்டு தமக்கு ஞானம் இருப்பதாக எண்ணி ஞானியர் போல வேஷம் போட்டுக் கொண்டு இருக்கும் முடர்களிடம் இந்த உலகத்திலுள்ள அனைத்து தங்கத்தையும் தானமாக கொடுத்தாலும் அதனால் ஒரு பயனும் கிடைக்காதது மட்டுமில்லாமல் கொடுத்த வீண் தானத்தின் பயனால் அடுத்த பிறவியிலும் பேரின்பப் பெருவாழ்வு கிடைக்காமல் போய்விடும்.

உள்விளக்கம்: தகுதியானவர்களுக்கே தானம் செய்ய வேண்டும்.

பாடல் #502

பாடல் #502: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுஉணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

விளக்கம்:

எமனால் உயிர்கள் ஒரு நாள் இறந்து போவதைப் பார்த்தாலும் தாமும் அப்படி ஒரு நாள் இறந்து போவோம் என்பதை உணராமல் உயிர்கள் இருக்கின்றனர். அதுபோலவே ஒவ்வொரு உயிருக்குள்ளும் அந்த உயிரையே தனது அம்சமாகக் கொண்டு இருக்கும் இறைவன் தமக்குள்ளும் இருக்கின்றான் என்பதையும் உணராமல் இருக்கின்றனர். உலக வாழ்க்கையை விட நன்மை தருவது பேரின்பப் பெருவாழ்வு என்பதை உணர்ந்து அன்பாலும் தவத்தாலும் தேடிச் சென்று தமக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து கொள்ளும் சிலர் மட்டுமே இறைவனின் அருள் பெற்று தேவர்களாக பதவி பெறுகிறார்கள்.

உட்கருத்து: விரைவில் முடியும் உலக வாழ்க்கை மேல் ஆசை வைக்காமல் என்றும் நிரந்தரமான பேரின்பப் பெருவாழ்வுதான் வேண்டும் என்று உணர்ந்த உயிர்கள் மட்டுமே இறைவனின் அருளைப் பெறுவதற்கு தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #503

பாடல் #503: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட்டு இலாத இடிஞ்சிலு மாமே.

விளக்கம்:

வினைப் பயனால் பிறவி எடுத்த போது கருவாக உருவான போதிலிருந்தே யாம் இறை நினைப்பை கைவிடாது பற்றிக் கொண்டேன். உயிர்கள் அனைத்துமாக இருக்கும் உண்மை இறைவனின் திருவடிகளையே எனக்குள் தேடி கயிறு போல பின்னிய சடையை தலையில் அணிந்த இறைவனின் திருஉருவத்தை எனக்குள் கண்டு அவனது திருவடிகளையே சரணடைந்தேன். அதனால் நெய் விட்டு எரிக்கப்படுகின்ற உலக விளக்குகளைப் போல இல்லாமல் நெய்யே விடாமல் தானாக ஒளிரும் விளக்காக எனக்குள் இறைவன் வந்து இருக்கின்றான் என்பதை உணர்ந்து கொண்டேன்.

உட்கருத்து: பொய்யான உலகப் பற்றுக்களை விட்டுவிட்டு உண்மையான இறைவனையே முழுவதுமாகப் பற்றிக்கொண்ட உயிர்கள் தான் இறைவனைத் தமக்குள் ஒளி வடிவமாகத் தரிசிக்கத் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #504

பாடல் #504: இரண்டாம் தந்திரம் – 16. பாத்திரம் (கொடுப்பதற்கும் பெறுவதற்கும் தகுதியானவர்கள்)

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்கின்ற இளங்கிளை யோனே.

விளக்கம்:

உலகங்களும் உயிர்களும் உருவாகும் காலத்தில் உருவாகி அழியும் காலத்தில் அழிகின்றன. உயிர்களின் வினைகள் தீர்க்க தீர்க்க வினைகள் சென்று விடும். உயிர்கள் செய்யும் கர்மங்களால் வினைகள் வந்தும் சேரும். இவை எல்லாவற்றையும் கட்டிக் காக்கும் குருவாக இருக்கும் இறைவன் காட்டியருள அதைக் கண்டவர்கள் இறைவனின் கட்டளையைப் பெற்று அதைச் செயல்படுத்தும் தகுதி பெற்ற புதிய அடியவர்கள் ஆவார்கள்.

உட்கருத்து: அனைத்தும் இறைவனே என்ற உண்மையை இறைவன் காட்டத் தமக்குள் கண்டு உணர்ந்தவர்கள் இறைவனின் கட்டளையை செயல் படுத்தும் தகுதியான பாத்திரமாக இருக்கிறார்கள்.

பாடல் #492

பாடல் #492: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைபூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே.

விளக்கம்:

அசையா சக்தியாகிய சிவமும் அசையும் சக்தியாகிய சக்தியும் தங்கள் திருவிளையாட்டால் ஆன்மா ஆசைப்படும் போது அதைத் தீர்த்துக் கொள்ள வினைகளைச் சேர்த்து உயிராக்கி உலகத்தில் பிறக்க வைத்து அந்த உயிருக்கு சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டு விதமான மாயைகளையும் வினைகள் தீரும் வரை உடலுக்குள் வைத்து பூட்டுகின்றார்கள். பின்பு உயிர்களின் எண்ணத்தில் புகுந்து சுத்த மாயை அசுத்த மாயை ஆகிய இரண்டு விதமான மாயைகளையும் நீங்கி உயிர் உருவாகுவதற்கு முன்பு இருந்த துரியம் எனும் ஆழ்நிலை உறக்க நிலையில் ஆன்மாவை சிவமாக்குகின்றார்கள்.

உட்கருத்து: இறைவன் தனது திருவிளையாட்டினால் தன்னிடம் துரிய நிலையில் கலந்திருக்கும் ஆன்மாவை மாயையை சேர்த்து பிறக்க வைத்து பின்பு மாயை நீக்கி தன்னிடமே சேர்த்துக்கொள்கிறார். துரிய நிலையையும் மாயை சேரும் நிலையையும் பாடல் #460 இல் காண்க.

பாடல் #493

பாடல் #493: இரண்டாம் தந்திரம் – 15. மூவகைச் சீவவர்க்கம் (மூன்று விதமான உயிர்கள்)

விஞ்ஞானர் நால்வர் மெய்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதிகளும் வேற்றுமை தானே.

விளக்கம்:

உடலோடு இருக்கும் போதே இறைவனை உணர்ந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் அதமர், மத்திமர், உத்தமர், சித்தர் என நான்கு வகைப்படுவார்கள். இவர்கள் ஆணவ மலத்தை மட்டுமே கொண்ட விஞ்ஞானர் ஆவார்கள்.

மாயை நீங்கப் பெற்றாலும் ஆணவமும் கன்மமும் நீங்கப் பெறாததால் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருப்பவர்கள் அபக்குவர், பரமுத்தர், அபரமுத்தர் என மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் மெய்பிரளய அகலர் ஆவார்கள்.

ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் கொண்டவர்கள் முத்தர், சாதகர், சகலர் என்று மூன்று வகைப்படுவார்கள். இவர்கள் அஞ்ஞானர் ஆவார்கள்.

விஞ்ஞானர், மெய்பிரளய அகலர், அஞ்ஞானர் என உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் 3 பகுதியாக பத்து வகையினராக வேறுபட்டு இருக்கின்றார்கள்.

குறிப்பு:

முதல் வகையினர் கன்மம், மாயை அனைத்தும் நீங்கப்பெற்று நான் என்ற எண்ணம் நீங்கி ஞானம் அடைந்தாலும் இறைவனுடன் கலக்காமல் தனிப்பட்ட தனது பெயரினால் அழைக்கப்படுவதினால் ஆணவமலம் இருக்கின்றது. இவர்கள் மரணமில்லாத உடலுடன் இருக்கும் சித்தர்கள், யோகிகள், ரிஷிகள், தேவர்கள் ஆகின்றார்கள்.

2 வது வகையினர் மாயை நீங்கி ஆணவம் கன்மம் ஆகிய இரண்டு மலங்களை மட்டுமே உடையவர்கள். இவர்கள் இறைவனை உணர்ந்து ஞானம் அடைந்தாலும் இறைவனோடு கலக்காமல் உலக நன்மைக்காக அவ்வப்போது மீண்டும் மீண்டும் உடலேடுத்து பிறந்து இறப்பார்கள் இவர்கள் பிரளய ஊழிக்காலம் வரை இறைவனோடு கலப்பதற்கு காத்திருக்கும் ஞானிகள் ஆவார்கள்.

3 வது வகையினர் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களையும் கொண்டு உலக வாழ்க்கையிலேயே மூழ்கி இருக்கின்றவர்கள்.

ஆன்மாவின் மூன்று வகைகளும் பத்து உப வகைகளும்:

  1. விஞ்ஞானர் = 1. அதமர், 2. மத்திமர், 3. உத்தமர், 4. சித்தர்.
  2. மெய்பிரளய அகலர் = 5. அபக்குவர், 6. பரமுத்தர், 7. அபரமுத்தர்.
  3. அஞ்ஞானர் = 8. முத்தர், 9. சாதகர், 10. சகலர்.