பாடல் #413

பாடல் #413: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உடலாய் உயிராய் உலகம தாகிக்
கடலாய் கார்முகில் நீர்பொழியும் வானாய்
இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி
அடையார் பெருவழி அண்ணல்நின் றானே.

விளக்கம்:

உலகத்தை படைத்து அதனைக்காக்க அனைத்து உயிர்களின் உடலாகவும் சூட்சுமத்தில் உயிராகவும் அவை பிறந்து வாழும் அனைத்து உலகங்களாகவும் அந்த உலகங்களில் உயிர் தோன்ற வழி செய்யும் கடல்களாகவும் அவை வாழ வழி செய்யும் மழை நீரைப் பொழியும் கருத்த மேகங்களைக் கொண்ட வானமாகவும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் வெற்றிட ஆகாயமாகவும் அனைத்தும் தானே ஆகவும் உண்மையான அடியவர்கள் தேடி அடையும் முக்தியாகவும் இறைவன் ஒருவனே நிற்கின்றான்.

உட்கருத்து: உயிர்கள் அடைவதற்குரிய பெருவழியான முக்தியை அருளிய இறைவன் உலகப்பொருட்களில் அதுவாகவே இருக்கின்றான்.

பாடல் #414

பாடல் #414: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்
கூடு மரபிற் குணஞ்செய்து மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்து ளேநின்று
நாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.

விளக்கம்:

உயிர்கள் தேடிப் பார்க்கக்கூடிய எட்டுத் திசைகளிலும் பிறவி எடுத்திருக்கும் பல ஆன்மாக்கள் கூடி நிற்கின்ற உடல்களின் உயிராகவும் அப்படிக் கூடுகின்ற காரணமான வினைப் பயனாகவும் இருக்கின்றவன் மாபெரும் குருவான இறைவன். அவனே உயிர்களின் உள்ளத்துக்குள் மன சாட்சியாய் நின்று அவற்றின் வினைப் பயனுக்கு ஏற்ப அவை அனுபவிக்கும் இன்பம் துன்பமாகவும் விருப்பு வெறுப்பாகவும் இருக்கும் முறையையும் அவனது கருணையினால் யான் அறிந்தேன்.

உட்கருத்து: பாடல் #406 இந்த பாடல் போலவே இருந்தாலும் அதில் பிறப்பைக் கூறிய திருமூலர் இதில் காப்பதைக் கூறியிருக்கின்றார். இதை ஒரு வார்த்தையையும் ஒரு எழுத்தையும் மாற்றி உணர்த்தி நிற்கின்றார் திருமூலர்.

பாடல் #415

பாடல் #415: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்
தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்
தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்
தானொரு காலந்தண் மாயவனு மாமே.

விளக்கம்:

இறைவன் ஒருவனே ஆதி காலத்தில் இருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான். அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான். உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான். காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.

பாடல் #416

பாடல் #416: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்திலும் அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்குள்ளும் தோன்றும் உண்மையான அன்பாகவும் அறிவாகவும் அவை பெறும் ஒழுக்கமான அடக்கமாகவும் இருப்பவன் இறைவனே. நல் வினையால் உயிர்கள் பெறும் இன்பமாகவும் இன்பத்தில் மற்ற உயிர்களோடு கலக்கும் புணர்ச்சியாகவும் இருப்பவன் இறைவனே. உலகம் உருவான ஆதிகாலமாகவும் அந்த உலகம் இறுதியில் அழியும் ஊழிக் காலமாகவும் இருப்பவன் இறைவனே. அவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் அன்பினால் ஐந்து பூதங்களிலும் அமர்ந்து இருந்து உயிர்களை எப்போதும் காத்து அருளுகின்றான்.

பாடல் #417

பாடல் #417: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமுஞ் சிறுதூதை
மற்றதும் அவனே வனையவல் லானே.

விளக்கம்:

உயிர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தில் உயிர்களைப் பல்வேறு உலகங்களிலும் உருவாக்குபவன் இறைவனே. அவனே உயிர்களின் வினைப் பயனைப் பெற்று அதன் காரணமாக பிறவியை உருவாக்குபவன். ஒரு குயவன் தனது அச்சுச் சக்கரத்தில் களிமண்ணை வைத்துச் சுற்றி அந்தக் களிமண்ணைப் பிடித்து தாழியும், குடமும், சிறு பாண்டங்களும் மற்றும் பலவிதமான மண் பாத்திரங்களும் செய்வதைப் போல இறைவன் உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான உடல்களை வடித்து அருளும் வல்லமை உள்ளவன் ஆவான்.

பாடல் #418

பாடல் #418: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

உள்ளுயிர்ப் பாயுட லாகிநின் றான்நந்தி
வெள்ளுயி ராகும் வெளியான் இலங்கொளி
உள்ளுயிர்க் கும்உணர் வேயுட லுட்பரந்
தள்ளுயி ராதவண்ணந் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்கும் உள்ளிருக்கும் உயிராகவும் வெளியிலிருக்கும் உடலாகவும் மூச்சுக்காற்றாகவும் நின்று கர்மாக்கள் வினைகள் சூழ்ந்த அசுத்த மாயையில் இருக்கும் உலக உயிர்களையும் கர்மாக்கள் வினைகள் இல்லாத சுத்த மாயையில் இருக்கும் தேவர்களையும் தாண்டிய பரவெளியில் உண்மைப் பொருளை உணர வைக்கும் பேரொளியாக குருவாய் நின்று அருளுகின்றான் இறைவன். அனைத்து உயிர்களுக்குள் உயிராகவும் உணர்வாகவும் அவற்றின் உடலுக்குள் பரவி இருந்து அந்த உயிர்களின் மூச்சுக்காற்று உடலை விட்டு செல்லாதபடி உடலையும் உயிரையும் உள்ளுக்குள்ளிருந்து தாங்கிக் கொண்டு நிற்பவனும் இறைவனே.

பாடல் #419

பாடல் #419: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

தாங்கருந் ..தன்மையுந் தானவை பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிதில்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்த மவ்வழி
தாங்கிநின் றானும்அத் தாரணியன் தானே.

விளக்கம்:

பல்வேறு விதமான உயிர்களுக்கும் அவற்றின் உடலுக்குள் இருந்து உயிரைத் தாங்கும் தன்மையாக இருக்கும் இறைவனே அவை அழியும் காலத்தில் உள்ளிருந்து வெளியே வரும் உயிரை வாங்குகின்றவனாகவும் இருக்கின்றான். அவனைத் தவிர உயிர்களைத் தாங்கவும் வாங்கவும் அருள் செய்யும் தெய்வம் வேறு ஒன்று இல்லை. இப்படி ஏழு உலகங்களையும் அதிலிருக்கும் அனைத்து உயிர்களையும் தாங்கி நிற்கின்ற இறைவனே அதைத் தாண்டிய விண்ணுலகத்தையும் தாங்கி நிற்கின்றான். அவனே உயிர்கள் தமது பிறவிச் சூழலிலிருந்து விடுபட்டு விண்ணுலகம் அடைய வழியாக யோக முறைகளையும் அருளி அந்த முறைகளைப் பின்பற்றி வரும் உயிர்களின் வழிமுழுவதும் அவற்றைக் காத்தும் அருளுகின்றான்.

பாடல் #420

பாடல் #420: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அணுகினுஞ் சேயவன் அங்கியிற் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணியினும் பார்மிசைப் பல்லுயி ராகித்
தணியினும் மண்ணுடல் அண்ணல்செய் வானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களின் உள்ளுக்குள்ளும் இறைவன் இருந்தாலும் அவனை அறிந்து கொள்ள முடியாதபடி மாயையால் மறைக்கப்பட்டு இருக்கின்றான். அவனை மூச்சுக்காற்றின் மூலம் குண்டலினியை மேலெழுப்பி சகஸ்ரர தளத்தில் கொண்டு சேர்த்துவிட்டால் பேரறிவு ஞானத்தைத் தந்து அருளுவான். அதன் மூலம் பிறவிச் சுழற்சியை அறுத்து முக்தி பெறலாம். இறைவனை எவ்வளவு தான் பணிந்து தொழுதாலும் ஞானத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் உலக ஆசைகளோடு இருந்தால் உலகத்தில் பல்வேறு விதமான உயிர்களாக உடலெடுத்துப் பிறந்து அழிந்தாலும் மீண்டும் மீண்டும் மண்ணுலகத்தில் உடல் பெறவே செய்வான் உலகத்தின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #381

பாடல் #381: இரண்டாம் தந்திரம் – 9. சர்வசிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்
தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.

விளக்கம்:

முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் அசையா சக்தியாகிய பராபரமாக இருக்கிறார். அறிவு வடிவாக இருக்கும் அந்த பராபரத்தில் உலகை படைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் அசையும் சக்தியாகிய பராபரை உருவாகிறது. அசையும் சக்தி உருவானதும் அதிலிருந்து சோதி உருவாகிறது. அந்த சோதியில் இருந்து ஒலி உருவாகிறது.

பாடல் #382

பாடல் #382: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

விளக்கம்:

பாடல் #381 இல் உள்ளபடி பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கிறது. அந்த சுத்தமான ஒலி ஒளிக்கு சிவன் சக்தி என்று பெயர். அந்த பராபரையாகிய எண்ணம் ஒலி ஒளி என்று பிரிந்து இருப்பதற்கு காரணம் அசையாத அறிவு சக்தியில் இருந்து உலகை உருவாக்கும் செயல் சக்தி பிறப்பதற்காக. அசையாத அறிவு சக்தியில் அசைகின்ற எண்ண சக்தி கலக்க ஒலியும் ஒளியும் தோன்றுகிறது.