பாடல் #49

பாடல் #49: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத் தொருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்தெய்த லாமே.

விளக்கம்:

மாயையால் உயிர்களைக் கட்டிப்போடும் பரை (பராசக்தி) மும்மலங்களால் கட்டுண்ட ஆன்மாவாகிய பசு ஆன்மாக்களை உலகோடு கட்டிப்போடும் பாசம் (உலகப் பற்றுக்கள்) இவை அனைத்திற்கும் தலைவனான இறைவனை உள்ளத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து அன்பினால் அவனோடு கலந்து இருக்கக்கூடியவர்களுக்கு ஆன்மாவின் கர்மாக்கள் பெருங்கடல் போன்று சூழ்ந்து மெய்ஞானத்தை மறைக்கும் திரைபோல இருந்தாலும் இறைவனின் அருளால் அந்தக் கடலையும் நீந்திக் கரையேறி மும்மலக்கட்டுக்களை அறுத்து உலகப் பற்றுக்களை ஒதுக்கி மாயையைக் கடந்து முக்தியை எய்தலாம்.

பாடல் #50

பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.

விளக்கம்:

இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.

உள்விளக்கம்:

இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.

பாடல்: பாயிரம் – கடவுள் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
யிந்து விளம்பிறை போலு மெயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஐநது கரததனை யானை முகததனை
யிநது விளமபிறை பொலு மெயிறறனை
நநதி மகனறனை ஞானக கொழுநதினைப
புநதி யிலவைத தடிபொறறுகின றெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஐந்து கரத்து அனை யா அனை முகத்து அனை
இந்து விளம் பிறை போலும் எயிற்று அனை
நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை
புந்தி இல் வைத்து அடி போற்றுகின்றேனே.

பதப்பொருள்:

ஐந்து (ஐந்து) கரத்து (கரங்களே) அனை (ஐந்து பூதங்களாக உடையவனும்) யா (உலகம்) அனை (போன்ற) முகத்து (திருமுகமே) அனை (உலகமாக உடையவனும்)

இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)

நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)

புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).

விளக்கம்:

ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாக கொண்டவனும், இளப் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறை தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை எமது அறிவுக்கு உள்ளே வைத்து அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.

இப்பாடலில் 3 ஆவது அடிக்கான பொருளை நேரடியாக புரிந்து கொள்வது சிறிது கடினம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.