பாடல் #697: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞ்சது வன்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.
விளக்கம்:
பத்துத் திசைகளையும் பத்து முகங்களாகக் கொண்டிருக்கும் சதாசிவசக்திக்கு உயிரின் மூச்சிக்காற்றுடன் உடலில் இருக்கும் பத்து வாயுக்களும் பத்து ஆயுதங்களாகும். இந்த பத்து ஆயுதங்களும் கீழே பார்த்த சகஸ்ரதளம் மேலே பார்த்த சகஸ்ரதளம் என்று இரண்டு ஆயுதங்களான அச்சக்தியுடன் உருவமற்ற நிலையில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலராக இருக்கும் சகஸ்ரார தளத்தில் என்றும் ஒடுங்கியே இருந்து பலகாலங்கள் பேரின்பத்தில் திளைத்திருக்க வைத்து அருளுவது சதாசிவமூர்த்தியாகிய ஒரு சக்தியே ஆகும்.
கருத்து: ஆயிரம் இதழ்கள் கொண்ட மலர்ந்த தாமரை மலராத தாமரை ஆகிய இரண்டுவித சக்திகளையும் பத்து திசைகளாகிய முகங்களையும் பத்து வாயுக்களாகிய ஆயுதங்களையும் கொண்டிருக்கும் சதாசிவமூர்த்தியாகிய இறை சக்தி ஒன்றுதான் எட்டுவிதமான சித்திகள் அடைந்தவர்களுக்கு அனைத்தையும் அருளுகின்றது.
பத்துவித காற்றுக்கள்:
- பிராணன் – உயிர்க்காற்று
- அபாணன் – மலக் காற்று
- வியானன் – தொழிற்காற்று
- உதானன் – ஒலிக்காற்று
- சமானன் – நிரவுக்காற்று
- நாகன் – விழிக்காற்று
- கூர்மன் – இமைக்காற்று
- கிருகரன் – தும்மற் காற்று
- தேவதத்தன் – கொட்டாவிக் காற்று
- தனஞ்செயன் – வீங்கல் காற்று