அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #24

18-4-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

இங்கு இறைநாமம் பாடிட பலர் பயப்படுகின்றனர். இங்கு இறைநாமம் கூற பலர் பயப்படுகின்றனர். அனைவரின் மனதிலும் பயம் உள்ளது பயத்தைவிட நாணமே (வெட்கமே) அதிகம் உள்ளது.

நல்துணை என்பது இறைநாமமே நல்துணை என்பது நமச்சிவாயமே நல்துணை என்பது இறையருளே நல்துணை இதையன்றி வேறு ஒன்றுமில்லையே இறைவனுக்கு கூட்டு பிரார்த்தனை செய்யும் காலங்களில் தியானம் செய்தல் வேண்டாம் தியானம் செய்ய வேறு நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள். தியானம் செய்ய நேரம் தனியாகவும் பூஜை செய்யும் நேரம் தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள். இவ்வாறு சொல்வது உங்கள் மனது வருத்தப்பட அல்ல நீங்கள் அனைவரும் மேன்மை அடைவதற்க்காக உங்கள் நாணத்தை போக்கிடவே அனைவரும் நலம் பெறுவதற்கே.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #23

22-2-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பிள்ளைக்கு மேலாம் தென்னங்கன்று என்று அக்காலத்தில் உள்ள பழமொழிக்கு விளக்கம் என்ன?

பிள்ளைகள் ஈன்றிட பின்பு பருவமடைந்தும் தனியாக வாழ்வது பெற்றவர்களுக்கு உபயோகம் உள்ள நிலையோ அற்ற நிலையோ என்பதை இறைவன் அறிவான் என்பதே விடையாம். மாறாக தென்னங்கன்று உறுதியாக வளர்ந்து விட்டால் இளநீர் முதல் தேங்காய் மற்றும் அதன் ஒவ்வோரு பாகமும் மனிதனுக்கு உபயோகமாகின்றது. இதன் உள் அர்த்தத்தை நன்கு ஆராய்ந்தால் நாம் படைத்ததை விட இறைவனின் படைப்பே மேலானது என்பதே பொருளாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #22

26-1-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மாற்றான் குழந்தைக்கும் யாம் உணவு அளிக்க நமது குழந்தை தானென வளரும் என்பதற்கு பொருள் என்ன?
(ஊரார் பிள்ளை ஊட்டி வளர்க்க தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழிக்கு அர்த்தம் என்ன?)

பொதுவாக அன்னதானம் சிறப்பானது பொதுவாக மற்றவர்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு அன்னம் அளித்திட நமது குழந்தைகள் செல்வங்களோடு இருப்பார்கள் என்ற கருத்து உண்டு. இருப்பினும் இது முழுமையான அர்த்தம் ஆகாது. மாற்றான் குழந்தைக்கு உணவு நன்கென அளித்தால் என்பது கர்ப்பம் தரித்துள்ள பெண்ணுக்கு (மனைவிக்கு) நாம் நன்கென உணவு அளித்தால் நம் குழந்தை நன்றாக செழிக்கும் என்பதே பொருளாகின்றது. அதாவது நம் வீட்டில் இருக்கும் கர்பிணிக்கு (மனைவிக்கு) நன்றாக உணவு அளித்தால் நம் குழந்தை வயிற்றில் நன்றாக வளரும் என்பதே பொருளாகும். இதை மற்ற குழந்தைக்கு உணவளித்தால் நம் குழந்தை செழிக்கும் என ஒப்பிட்டு உள்ளனர். இதில் தவறில்லை என்கின்ற போதிலும் உண்மையான அர்த்தம் முன்பு கூறியது ஆகும்.

இறைவன் அனைத்தும் அறிவான் நாம் அவனை ஒன்று வேண்டும் என்று கேட்பதோ வேண்டுவதோ தவறாகுமா?

பொதுவாக பத்து குழந்தைகள் இருக்கும் இடத்தில் அழுகின்ற குழந்தையை நாம் தூக்குவோம் இல்லை என்ன என்று கேட்போம். ஓர் வீட்டில் இந்நிலை என்றால் இத்தனை குழந்தைகள் வைத்திருக்கும் இறைவனை யாம் வேண்டுதல் நன்றே தவறாகாது.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #21

29-12-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அகங்காரம் என்பது தனித்தனி மனிதர்களுக்கு மட்டும் அல்லாது நடுகளுக்கு இடையையும் உள்ளது. இதற்கு மூலகாரணம் தனிப்பட்ட மனிதனின் அகங்காரமே. விளைவு போர்கள். இதுமட்டுமல்லாது அக்னி பூமியில் அதிகமாக காணக்கூடும். பெரிதாக நம்நாட்டில் பாதிக்கா போதிலும் மற்ற நாடுகளில் சேதம் உண்டாக வாய்ப்புகள் பெரிதாக உள்ளது. இந்த அகங்காரத்தை நீக்கிட வேண்டுமென்றால் இயன்ற அளவிற்கு அன்னம் அளிக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. அன்னம் அளிப்பதோடு அதன் பலனை உலக நன்மைக்கு சமர்பிப்பது நலம் தரும். இது எவ்விதம் செய்வது என்றால் வழி எளிது அன்னதானங்கள் செய்த பின்பு நீர் எடுத்து அப்புண்ணியத்தை எங்கும் செல்லட்டும், நாடு நலம் பெறட்டும் என்று பூமிக்கு செலுத்த வேண்டும். இதுவே இதற்கு சிறந்த வழி ஆகும். அனைவருக்கும் சினம் உண்டு யாதேனும் ரூபத்தில் அது பதுங்கி உள்ளிருக்கும் என்பது பொது அறிவாம் இதனை ஓங்காது தடுத்தல் வேண்டும். ஏனெனில் வருகின்ற ஆண்டில் பிரச்சனைகள் நேரிட்டால் அதற்கு காரணம் வீண் சினமும் அகங்காரமே ஆகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #20

5-11-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

திருமந்திர நூலின் நோக்கம் யாம் பெற்ற இன்பம் அனைவரும் பெறுதல் வேண்டும் என்பதேயாகும். இவ்விதம் திருமந்திரம் அனைவருக்கும் எடுத்துரைத்த போதிலும் மறு இன்பங்களை நாடுவோர் பலர் திருமந்திரம் கூறும் யாம் பெற்ற இன்பத்தை நாடுவோர் சிலர் என்பது உலக விதியாகி விட்டது இருந்த போதிலும் இக்காலத்தில் ஆன்மீகம் இறைசிந்தனை என்பது இளைஞர்களிடத்தில் அதிகரித்து இருக்கிறது. இது ஓர் பாரட்டத்தக்க காரியமாகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்கின்றது போல் இத்தகைய சிறு சிறு மாற்றங்கள் முழுமையான நலன்களை அளிக்கும். இல்வாழ்க்கையில் பணம் பொருளை நாடுகின்றோம் இறை அருள்தனை மறக்கின்றோம். இத்தகைய செல்வங்கள் நம்முடன் இறுதியில் வராது என்றும் நலம் நல்காரியங்கள் செய்வதின் விளைவாக வருவது இறைஅருள் மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் கூறுகின்றோம்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #19

8-10-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கல்லது அசையும் நாராயனா
கல்லது பாவமும் காட்டுமது நாராயணா
கல்லென கண்டோர்க்கும் கல்லாம் நாராயணா
இங்கும் கல்லும் செப்புமே நாராயணா.

இப்பாடலுக்கான விளக்கம் என்ன?

அவரவர் ஆன்மீக நிலைகள் குறித்து மூர்த்திகளும் மூர்த்திகளின் அசைவும் காணக்கூடும். இது மனப்பிரமை என பலரும் எண்ணுவதுண்டு. அவ்விதம் இல்லை கல்லும் செப்பும் நாராயணா என்பது ஓசையாகவே காதில் விழும் என்பதில் எவ்வித அச்சமும் வேண்டாம். இது மட்டும் அல்லாது மானிடர் துயரம் கண்டு மூர்த்திகளின் கண்ணில் நீர் வருவதும் உண்டு. இக்காலத்தில் மனிதர்களுக்கு வரும் வேதனைகளுக்கு ஆனந்த பைரவரும், லிங்கமும் சீராக்கும். பலர் அகம்தனிலும் தெய்வங்கள் வந்து தட்டி எழுப்புவதும் கலியுகத்தில் ஓர் சாதாரண நிலையாகி விட்டது. இதை ஏன் செய்கின்றனர் என்றால் நம்பிக்கை ஊட்டுவதற்கே கலியில் தோன்றும் கடினங்கள் இருந்த போதிலும் யாமும் உன்னை காக்கின்றோம் எமது பக்கம் திரும்புங்கள் என்கின்றதை உணர்த்திடவே இருப்பினும் மானிடர்கள் பெரும்பாலும் பணத்தை நாடுகின்றனர். இறைவனை பார்ப்பதில்லை. லட்சுமி தேவியை செல்வம் வர வேண்டும் என்று வணங்குகின்றனரே தவிர ஓர் முக்தி நிலை வர வேண்டும் என வணங்குவதில்லை. எவ்வித தெய்வத்தை வணங்கிய போதிலும் எந்த நாமம் இட்டு வணங்கிய போதிலும் செல்வது ஓரிடத்திற்கே என்பதை மனதில் வைக்க வேண்டும். எந்த ரூபமாக இருந்த போதிலும் பெறுவது அப்பரம்பொருளே என்பதை மறக்காமல் செயல்பட நன்மை உண்டாகும். தேன் எவ்வித பாட்டிலிலும் ஜாடியிலும் கண்ணாடியில் இருந்த போதிலும் தேனின் தன்மை மாறுவதில்லை. இது போல் இறைவனின் தன்மையும் மாறுவதில்லை. நீங்கள் இந்த சக்தியை எந்த பெயரை கொண்டு அழைத்தாலும் அழைத்தவுடன் உங்களுக்கு நல்வழிகாட்ட அச்சக்தி நிற்கிறது. இறைவனும் நாமும் வேறில்லை என்கின்ற எண்ணம் வளர்த்து எமக்குள் இருக்கும் இறைவன் உமக்குள்ளும் இருக்கின்றான் என்ற அப்பெரும் வாக்கியத்தினை உணர்தல் வேண்டும். பல பல இன்னல்கள் தோன்றும் பல பல குறைகள் காணும் இவையாவும் நம் முன் வினைகள் தீரும் வழியாகின்றது என மனதில் நிறுத்தி இறைவன் பாதத்தை பிடித்த வண்ணமாகவே இருத்தல் வேண்டும். எக்காலத்திலும் அவன் பாதத்தை விடுவது சீராகாது. இந்நிலையில் எம்மை இவன் விட மாட்டான் போலிருக்கிறது என ஆண்டவனும் அவனுக்கு நல்வழி அளிப்பான்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #18

11-9-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெய்வங்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் மனிதர்கள் செய்யும் தவறுகளை அறிவார்கள் ஏனெனில் அவர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். அவர்கள் மௌனம் சாதிப்பதை அறியாமை என எண்ணுதல் வேண்டாம். முதன் முறையாக செய்திடும் தவறுகளை மன்னிப்பர். இரண்டாம் முறையாக தவறுகள் செய்தால் பணவிரயம், உடல் நலக்குறைவு, இவற்றால் அவதியுற வேண்டி இருக்கும். இதனை உணராமல் மேலும் தவறுகள் செய்தால் அது சிவ தண்டனையாக பெருமளவிற்கு இருக்கும் இதனை அறிந்து மனிதர்கள் செயலாற்ற வேண்டும். குறிப்பாக தெய்வீக பணிகளில் ஈடுபடுவோர் பெரும் சிரத்தையுடன் செயல்படுவதுடன் தெரிந்து தவறுகள் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #17

14-8-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

பலர் தேவையற்று கோபம் கொள்கின்றனர். நடப்பது வாழ்வது கூறுவது செயல்படுவது அனைத்தும் கர்ம விதிகளின் பலனாக கண்டு கொண்டால் கோபம் என்பது ஓர் தேவையற்ற மனநிலை ஆகின்றது அல்லவா? அடுத்ததாக கோபத்தால் நீங்கள் சாதிக்கப் போவது என்ன என்று வினாவக் கண்டால் சாதிப்பது ஒன்றுமில்லை. அடைவது நஷ்டநிலைகளே என்றும் உணர முடியும், இந்நிலையில் எப்பொழுதும் அமைதி ஆனந்தம் கொள்ள வேண்டிய மனதில் நாமாக கோபத்தை கொடுத்து கஷ்டப்படுத்துகின்றோம். இவ்விதம் கஷ்டப்படும் மனதால் இறைவனை தொழ முடியாது என்ற உண்மையை உணர வேண்டும். அன்று மாகாளி அவள் காளிதாசனை கண்டு உரைத்த வாக்குகள் என்னவென்றால் ஊருக்கு கதை சொல்லும் மனமது வதை கண்டால் அந்த தெய்வத்தின் முகம் வாடுமே. அதாவது மனம் ஒர் நிலையில் அமைதி இல்லாமல் இருந்தால் தெய்வத்தின் முகம் சுருங்குமாம் இவ்விதமிருக்க வீணாக சிறு சிறு காரியங்களுக்கு கோபம் கொள்ள வேண்டாம். அதற்கு ஈடாக எது கோபத்தை கொடுக்கிறதோ அதனை எளிதாக பேசி தீர்த்து விடலாம் என்கின்ற ஓர் நிலையைக் காண வேண்டும். இல்லையேல் மன அமைதி குறையும். உலகத்தில் இன்று உள்ள பெரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணம் கோபமே இந்த கோபத்தை நீக்கிட அகங்காரம் என்பது நீங்கி விடும் மனதில் அமைதி நிலவும் மனதில் இறைவனும் அமர்வான்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #16

18-7-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நான் என்பது அகங்காரம் என்றால் எதார்த்தத்தில் எவ்விதம் நடப்பது? அதாவது நான் என்ற சொல் இல்லாமல் தன்னை அறிமுகப்படுத்தும் போது என்பெயர் இது நான் இது என்று ஆரம்பிக்கின்றோம் எதார்த்த நிலையில் நான் இல்லாமல் வாழ முடியாது அப்படியானால் எப்படி வாழ்வது?

நான் என்ற வார்த்தையில் தவறில்லை நான் என்கின்றதை இயற்கையிடம் கோர்த்திடவே பிழை ஆகின்றது. நான் என்பது மற்றவர்களிடம் ஒப்பிட்டு நான் சிறப்பானவன் எனவும் மற்றவர்கள் இதில் எளியோர் என காண்பது தவறாகும். இவ்விதமே அகங்காரம் பிறவி காண்கிறது. மற்ற உயிர்கள் அனைத்திலும் இறை நிலையை கண்டால் இவ்விதம் அகங்காரம் வளர்வதில்லை. பின்பு நான் என்பதில் பிழையும் இல்லை. நான் பெரியவன் மற்றவர் எல்லாம் தாழ்ந்த நிலையில் உள்ளனர். நான் சிறப்பானவன் மற்றவர் எளியோர். நான் செல்வந்தன் மற்றவர்கள் ஏழைகள். நான் கல்வியில் சிறந்தவன் மற்றவர்கள் மூடர்கள் என்பதெல்லாம் எண்ணத் துவங்கினால் அகங்காரம் வளரும். வார்த்தையில் பிழையில்லை நாம் அதை உபயோகிக்கும் மனநிலையில் தவறாகும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #15

24-5-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

எண்ணம் போல் வாழ்க என்ற சொல்லின் பொருள் என்ன? நாம் தீவிரமாக எண்ணியது யாவும் நடைபெருமா?

எண்ணம் உறுதியாக இருக்குமாயின் அதன் பின் செயலும் தொடரும் அவ்விதம் செயல் தொடர வெற்றி உண்டாகும். வெறும் எண்ணத்தால் யாதும் சாதிக்க இயலாது என்கின்றதை உறுதியாக அறிதல் வேண்டும். எண்ணம் தீவிரமடைய செயல்கள் உருவாகும் என்பதே பொருளாகும். இதற்கு மற்றோர் அர்த்தமும் முக்கியமான அர்த்தமும் உண்டு நாம் எவ்விதம் எண்ணுகின்றோமோ நமது எண்ணங்கள் எவ்விதம் இருக்கின்றதோ அவ்விதமே வாழ்வும் அமையும் உதாரணமாக தீய எண்ணம் படைத்தவனுக்கு காலம் செல்ல செல்ல தீய விளைவுகளே உண்டாகும். நல் எண்ணம் மற்றவர் நலம் வாழ்தல் வேண்டும் என எண்ணுதல் கடினம் காண்போர்க்கு உதவுதல் என எண்ணம் படைத்தவன் நல்வாழ்வே காண்பான். பின்பு ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்ற வினாவும் பின் தொடரும் அவரவர் கர்ம நிலைகள் உண்டு என்கின்றதை மீண்டும் எடுத்துரைக்கின்றோம். தெய்வங்கள் இருக்க கர்மங்களை நீக்க இயலாதா என்கின்ற மறு வினாவும் எழுகின்றது, இதற்கு யாம் ஒன்றை கூறுவோம். இறை விசுவாசத்துடன் செயல்பட சுமை தாங்கிகள் அப்அப்பொழுது தோன்றிட நமது சுமைகளை குறைக்குமேயன்றி கர்ம வினைகளை நாமே அனுபவித்தல் வேண்டும்.