பாடல் #880: மூன்றாம் தந்திரம் – 21. சந்திர யோகம் (சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம்)
விடாத மனம்பவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்
கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடு
படாத இன்பம் பருகார் அமுதமே.
விளக்கம்:
தன் விருப்பத்திற்கு ஆடும் மனம் சந்திர யோகம் செய்யும் யோகியர்களுக்கு வசப்பட்டு மூச்சுக்காற்றோடு இணைந்து கொண்டு நடு நாடி வழியே மேலேறும் போது சகஸ்ரதளத்தில் இறை சப்தங்களின் உயர்ந்த சங்கொலி கேட்கும். மதம் பிடித்த யானை போல அலையும் ஐந்து புலன்களும் யோகியின் வசப்பட்டு அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப உடலுக்குள் கட்டுப்பட்டு இயங்கும். எப்போதும் திகட்டிவிடாத பேரின்பத்தை கொடுக்கும் அமிர்தம் அவர்களின் உள்நாக்கில் ஊற அவர்கள் அதை எப்போதும் பருகிக் கொண்டே இருப்பார்கள்.