பாடல் #831: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)
பரியங்க யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் யோகம் அடைந்தார்க் கல்லது
சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவர்க்கொண் ணாதே.
விளக்கம்:
ஐந்து நாழிகைகள் மன உறுதியோடு இறைவனை நினைத்துக் கொண்டே மிகவும் கடினமான பரியங்க யோகத்தை செய்தவர்களுக்கு மட்டுமே இறைவனை தமக்குள் உணரும் பெரும்பேறு கிடைக்கும். மற்றவர்கள் விரக தாபத்தில் கையிலிருக்கும் வளையல்கள் நழுவும் அளவிற்கு மெலிந்த தேகத்துடன் சந்தனம் போன்ற வாசனையும் மிருதுவும் உடைய கொங்கைகளை கொண்ட மாதர்களைத் தழுவிப் பெறும் சிற்றின்பத்திலேயே மூழ்கி இருப்பார்கள்.
பரியங்கயோகம் தெரிந்து கொள்ள ஆசை சரியான விளக்கம் கிடைக்குமா
மூன்றாவது தந்திரத்தில் உள்ள 20 பாடல்களை நன்கு தொடர்ந்து படித்துக் கொண்டே இருங்கள். சில நாட்களில் உறுதியாக விளக்கம் தெரிந்து கொள்ளலாம். தங்களுக்கு விளக்கத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது தங்களுக்கு அதில் உள்ள விளக்கங்கள் புரியவில்லை என்றாலோ எங்களை தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் இயன்ற அளவு தங்களின் சந்தேகத்திற்கு விளக்கம் கொடுக்க முயற்சிக்கிறோம்.