பாடல் #730: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.
விளக்கம்:
இறைவன் குடியிருக்கும் உடலாகிய கோயிலில் இடதும் வலதுமாக இருக்கும் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை அடக்கியாண்டு சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் செல்லும் பயிற்சியை சாதித்த சாதகனுக்கு மூச்சுக்காற்றின் சுழுமுனை பயணம் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போல கேட்கவும் சுழுமுனையின் உச்சியிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தின் தித்திப்பில் இறைவனின் பேரின்பக் பெருங்கூத்தும் சகஸ்ரதள ஜோதியில் சிவமாகிய ஒளியும் வெளிப்படும் என்பதை குருவிற்கெல்லாம் மஹாகுருவான சதாசிவமூர்த்தியின் மேல் ஆணை.
கருத்து: அகயோகப் பயிற்சியை சாதித்த சாதகர்களுக்கு இசையோடு நடனமும் ஆடும் இறைவனின் பேரின்பப் பெருங்கூத்துத் தரிசனம் கிடைத்து அவர்களுக்குள்ளிருந்தே ஒளியுருவமாக இறைவனும் வெளிப்படுவார்.