பாடல் #723: மூன்றாம் தந்திரம் – 12. கலை நிலை (நாடிகளில் இறைவன் நிற்கும் முறை)
ஓசையினில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியினில் மூன்றும் நாவினில் இரண்டும்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசுஅறு சோதி வகுத்துவைத் தானே.
விளக்கம்:
ஏழு விதமான ஒலிகளை உணரும் காதுகளும் ஐந்து விதமான ஒளிகளைக் காணும் கண்களும் மூன்று விதமான சுவாசங்களை முகரும் நாசிகளும் இரண்டு விதமானதைச் செய்யும் நாக்கும் தொடுவதை உணரும் உடலும் உயிரான ஆன்மாவை விட்டுப் பிரியும் நாள் எதுவென்பதை மிகவும் துல்லியமாக மூச்சுக்காற்றை வைத்தே அளந்து வைத்திருக்கின்றான் அனைத்துவித மலங்களையும் அறுத்து அருளும் சோதிமயமான இறைவன்.
கருத்து: உயிர்கள் தம்மிடம் அடையும் வழியை வைத்தருளிய இறைவன் அதன்படி செய்யாத உயிர்கள் அழிந்து மறுபடியும் பிறவி எடுப்பதற்கான ஆயுளையும் துல்லியமாக அளந்து வைத்திருக்கின்றான்.
காதுகள் உணரும் ஏழு விதமான ஒலிகள்:
- சத்தம் – இயற்கையான ஓசைகள்
- பரிசம் – கருவிகளினால் எழுப்பப்படும் இசை
- உருவம் – பிம்பங்களின் அசைவைக் காட்டும் சலசலப்பு
- இரசம் – நீர் எழுப்பும் ஓசை
- கந்தம் – காற்று எழுப்பும் ஓசை
- சரித்தல் – உலகத்தோடு இயங்கும் நுண்ணிய ஓசைகள்
- சேர்த்தல் – உடலுக்குள் இயங்கும் நுண்ணிய ஓசைகள்
கண்கள் காணும் ஐந்து விதமான ஒளிகள்:
- உருவம் – நிலம் (பிம்பங்கள்)
- இரசம் – நீர் (திரவங்கள்)
- கந்தம் – காற்று (புகைகள்)
- தகித்தல் – நெருப்பு (தீக்கள்)
- வெம்மை – ஆகாயம் (வெற்றிடம்)
நாசிகள் முகரும் மூன்று விதமான சுவாசங்கள்:
- வாசனை
- இடகலை மூச்சு குளிர்ச்சியான காற்று
- பிங்கலை மூச்சு வெப்பமான காற்று
நாக்கு செய்யும் இரண்டு விதமான செயல்கள்:
- சுவைத்தல்
- பேசுதல்