பாடல் #626: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)
நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.
விளக்கம்:
நம்பிக்கைக்கு உரியவனும் முதற்பொருளாக விளங்குபவனும் நான்கு வேதங்களாலும் ஒதப்படுபவனும் தங்கத்தின் ஜொலிப்பு போல உள்ளே விளங்கும் சோதியும் ஆன சிவபெருமான் மீது அன்பு செலுத்தி ஆசைகளை அடக்கி மனதை சுழுமுனை வழியாக உச்சியில் ஏறுமாறு செய்து தலை உச்சியுள்ள சகஸ்ரதளத்தில் தியானித்திருந்தால் அங்கு இருக்கும் சிவபெருமானைக் வணங்கி அவனுடன் கலந்து இருக்கலாம்.