பாடல் #1842: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
ஆவிக் கமலத்தினைப் புனத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கு மந்திரந் தாமறி யாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆவிக கமலததினைப புனத தினபுற
மெவித திரியும விரிசடை நநதியைக
கூவிக கருதிக கொடுபொயச சிவததிடை
தாவிககு மநதிரந தாமறி யாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆவி கமலத்தினை புனத்து இன்பு உற
மேவி திரியும் விரி சடை நந்தியை
கூவி கருதி கொடு போய் சிவத்து இடை
தாவிக்கும் மந்திரம் தாம் அறியாரே.
பதப்பொருள்:
ஆவி (உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய) கமலத்தினை (சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை) புனத்து (சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து) இன்பு (பேரின்பம்) உற (உருவாகுவதற்கு)
மேவி (அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து) திரியும் (அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற) விரி (விரிந்த) சடை (சடையைக் கொண்ட) நந்தியை (குரு நாதனாகிய இறைவனை)
கூவி (தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும்) கருதி (இறைவன் மேல் எண்ணங்களை வைத்து) கொடு (அந்த எண்ணங்களை கொண்டு) போய் (போய்) சிவத்து (சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனின்) இடை (இடத்தில்)
தாவிக்கும் (நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற) மந்திரம் (மந்திரம் எதுவென்று) தாம் (தாங்கள்) அறியாரே (அறியாமல் இருக்கின்றார்கள்).
விளக்கம்:
உயிர்களின் உயிர்ப்பு ஆற்றலாகிய சகஸ்ரதளத்தின் உச்சியில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரினை சென்று சேரும்படி மூச்சுக்காற்றை கொண்டு சென்று அடைந்து, அதன் பயனால் அமிழ்தம் சுரந்து பேரின்பம் உருவாகும் பலனை அனைத்து உயிர்களும் அடைய வேண்டும் என்ற கருணையினால் அந்த தாமரை மலரின் மேல் பிரகாசமாக திகழும் ஜோதியாக வீற்றிருந்து அதிலிருந்து அனைத்திற்கும் பரவுகின்ற ஒளிக் கதிர்களைப் போன்ற விரிந்த சடையைக் கொண்ட குரு நாதனாகிய இறைவன் அமர்ந்து இருக்கின்றான். அந்த இறைவனை தாம் செய்கின்ற பூஜையின் மூலம் போற்றிப் புகழ்ந்து அழைத்தும், இறைவன் மேல் எண்ணங்களை வைத்தும், அந்த எண்ணங்களை கொண்டு போய் சகஸ்ரதளத்தில் ஜோதியாக வீற்றிருக்கும் இறைவனுடன் நிலை பெற்று இருக்கும் படி சேர்க்கின்ற மனதின் திறமைக்கு திறவு கோலாக இருப்பது எதுவென்று தாங்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.
