பாடல் #1840: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
வென்று விரைந்து விரைபணி யென்றனர்
நின்று பொருந்த யிறைப்பணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொன்றிடு நித்தலுங் கூறிய தன்றே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
வெனறு விரைநது விரைபணி யெனறனர
நினறு பொருநத யிறைபபணி நெரபடத
துனறு சலமலர தூவித தொழுதிடிற
கொனறிடு நிததலுங கூறிய தனறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
வென்று விரைந்து விரை பணி என்றனர்
நின்று பொருந்த இறை பணி நேர் பட
துன்று சல மலர் தூவி தொழுதிடில்
கொன்று இடும் நித்தலும் கூறியது அன்றே.
பதப்பொருள்:
வென்று (ஐந்து புலன்களினால் ஆசை மயக்கத்தை வென்று) விரைந்து (வாழ்க்கைக்கு உடனடியாக செய்ய வேண்டியது) விரை (நறுமணம் மிக்க தூபத்தை காட்டி) பணி (இறைவனுக்கு தொண்டு செய்வதே) என்றனர் (என்று சான்றோர்கள் சொன்னார்கள்)
நின்று (இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து நின்று) பொருந்த (மனம் இறைவனோடு பொருந்தி இருக்க) இறை (இறைவனுக்கான) பணி (பூஜைகளை) நேர் (சிறிதும் தவறாமல்) பட (நிகழும் படி)
துன்று (இறைவனோடு பொருந்தி) சல (தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மலர் (காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து) தொழுதிடில் (தொழுது வந்தால்)
கொன்று (இறையருளானது வினைகளை கொன்று) இடும் (நீக்கிவிடும்) நித்தலும் (தினம்தோறும்) கூறியது (என்று சான்றோர்கள் சொன்னது) அன்றே (முன் காலத்தில் ஆகும்).
விளக்கம்:
ஐந்து புலன்களின் வழியே செல்லும் ஆசைகளில் சிக்கிச் சுழலாமல் அதை மன உறுதியால் வென்று மனித வாழ்க்கையில் உடனடியாக செய்ய வேண்டியது இறைவனுக்கு தூப தீபங்கள் காட்டி வழிபடுவதே என்று சான்றோர்கள் சொல்லுவார்கள். அவர்கள் சொல்லியபடி இறைவன் மேல் கொண்ட பக்தியில் தன்னையே மறந்து இறைவனோடு தம் மனமும் பொருந்தி இருக்கும் படி நின்று தூய்மையான நீரால் அபிஷகம் செய்தும் காலைப் பனி பூத்திருக்கும் நறுமணம் மிக்க மலர்களால் அருச்சனை செய்தும் தினந்தோறும் இறைவனை தொழுது வந்தால் இறைவனது திருவருளானது அடியவர்களின் வினைகளை அழித்து நீக்கிவிடும். இதை முன் காலத்திலேயே சான்றோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
