பாடல் #1839: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
உழைக்கு முன்னே நெடுநீர் மலரேந்திப்
பிழைப்பின்றி யீசன் பெருந்தவம் பேணி
யிழைக்கொண்ட பாதத் தினமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உழைககு முனனெ நெடுநீர மலரெநதிப
பிழைபபினறி யீசன பெருநதவம பெணி
யிழைககொணட பாதத தினமலர தூவி
மழைககொணடல பொலவெ மனனிநில லீரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உழைக்கும் முன்னே நெடு நீர் மலர் ஏந்தி
பிழைப்பு இன்றி ஈசன் பெரும் தவம் பேணி
இழை கொண்ட பாதத்து இன மலர் தூவி
மழை கொண்டல் போலவே மன்னி நில்லீரே.
பதப்பொருள்:
உழைக்கும் (காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு) முன்னே (முன்பு) நெடு (அவசரமின்றி நிதானமாக) நீர் (தூய்மையான நீரையும்) மலர் (நறுமணமிக்க மலர்களையும்) ஏந்தி (இரு கைகளில் ஏந்திக் கொண்டு)
பிழைப்பு (எந்தவிதமான குற்றமும்) இன்றி (இல்லாமல்) ஈசன் (இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற) பெரும் (மிகப்பெரும்) தவம் (தவத்தை) பேணி (ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து)
இழை (அழகிய சிலம்புகளை) கொண்ட (அணிந்து கொண்டு இருக்கின்ற) பாதத்து (இறைவனின் திருவடிகளுக்கு) இன (ஒரே வகையான) மலர் (நறுமலர்களை) தூவி (தூவி அருச்சனை செய்து)
மழை (மழை பொழிகின்ற) கொண்டல் (கருத்த மேகத்தை) போலவே (போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து) மன்னி (நிலையாக) நில்லீரே (நில்லுங்கள்).
விளக்கம்:
காலையில் எழுந்த பிறகு தங்களின் தொழில் செய்வதற்கு முன்பு அவசரமின்றி நிதானமாக தூய்மையான நீரையும் நறுமணமிக்க மலர்களையும் இரு கைகளில் ஏந்திக் கொண்டு, எந்தவிதமான குற்றமும் இல்லாமல் இறைவனை சிரத்தையோடு பூசை செய்கின்ற மிகப்பெரும் தவத்தை ஒரு நாளும் தவறாமல் கடைபிடித்து, அழகிய சிலம்புகளை அணிந்து கொண்டு இருக்கின்ற இறைவனின் திருவடிகளுக்கு ஒரே வகையான நறுமலர்களை தூவி அருச்சனை செய்து, மழை பொழிகின்ற கருத்த மேகத்தை போலவே தூய்மையான நீரால் அபிஷேகம் செய்து நிலையாக நில்லுங்கள்.
உட் கருத்து:
இறைவனுடைய திருவடிகளில் எப்போதும் இழைந்து (உராய்ந்து) கொண்டே இருக்கின்ற அழகிய சிலம்புகளைப் போலவே அடியவர்கள் தங்களின் மனதிற்குள் இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பது ஒரு மிகப் பெரிய தவம் ஆகும். அந்த தவத்தை சிரத்தையோடு இடைவிடாது கடை பிடித்தால் கருமையான மேகங்களுக்குள் மழை நீர் மறைந்து இருப்பது போலவே அடியவரது எண்ணத்திற்குள் இறைவனின் திருவருளானது எப்போதும் நிறைந்து நிற்கும்.
