பாடல் #1838: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
தேவர்க ளோடிசை வந்துமண் ணாடோறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தெவரக ளொடிசை வநதுமண ணாடொறும
பூவொடு நீரசுமந தெததிப புனிதனை
மூவரிற பனமை முதலவனாய நினறருள
நீரமையை யாவர நினைககவல லாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தேவர்களோடு இசை வந்து மண் நாள் தோறும்
பூவோடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.
பதப்பொருள்:
தேவர்களோடு (விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று) இசை (அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை) வந்து (மனம் ஒன்றிப் பாடி) மண் (இந்த மண்ணுலகில்) நாள் (தினம்) தோறும் (தோறும்)
பூவோடு (நறுமணம் மிக்க மலர்களோடு) நீர் (தூய்மையான நீரையும்) சுமந்து (கைகளில் எடுத்து வந்து) ஏத்தி (போற்றி துதித்து) புனிதனை (தூய்மையானவனாகிய இறைவனை)
மூவரில் (பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளில்) பன்மை (பலவித தன்மைகள் கொண்டவனைப் போல பிரிந்து இருந்தாலும்) முதல்வன் (அனைத்திற்கும் முதல்வன்) ஆய் (ஆகவே) நின்று (நின்று) அருள் (திருவருள் புரிகின்றவனின்)
நீர்மையை (பெருங் கருணை குணத்தை) யாவர் (எவர்) நினைக்க (நினைத்து பார்க்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள்?).
விளக்கம்:
விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று, அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை மனம் ஒன்றிப் பாடி, இந்த உலகத்தில் தினம் தோறும் நறுமணம் மிக்க மலர்களோடு தூய்மையான நீரையும் கைகளில் எடுத்து வந்து, தூய்மையானவனாகிய இறைவனை போற்றி துதித்து, பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாக தனித்தனி தன்மைகளோடு பிரிந்து இருந்தாலும் அனைத்திற்கும் முதல்வனாகவே நின்று திருவருள் புரிகின்ற இறைவனின் பெருங் கருணை குணத்தை நினைத்து பார்க்கும் வல்லமை பெற்றவர்கள் யார்?
