பாடல் #1833: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)
உழைக்கொண்ட பூநீ ரொருங்குட னேந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்ற வானோர்
தழைக்கொண்ட பாசந் தயங்கிநின் றேத்தப்
பிழைப்பின்றி யெம்பெரு மானரு ளாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
உழைககொணட பூநீ ரொருஙகுட னெநதி
மழைககொணட மாமுகில மெறசெனற வானொர
தழைககொணட பாசந தயஙகிநின றெததப
பிழைபபினறி யெமபெரு மானரு ளாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
உழை கொண்ட பூ நீர் ஒருங்கு உடன் ஏந்தி
மழை கொண்ட மா முகில் மேல் சென்ற வானோர்
தழை கொண்ட பாசம் தயங்கி நின்று ஏத்த
பிழைப்பு இன்றி எம் பெருமான் அருள் ஆமே.
பதப்பொருள்:
உழை (உண்மையான அன்பு) கொண்ட (கொண்டு) பூ (பூவும்) நீர் (தூய்மையான நீரும்) ஒருங்கு (ஒன்றாக சேர்த்து) உடன் (தம்முடன்) ஏந்தி (கையில் ஏந்திக் கொண்டு)
மழை (மழை நீரை) கொண்ட (கொண்டு இருக்கின்ற) மா (மாபெரும்) முகில் (மேகக் கூட்டங்களுக்கு) மேல் (மேலே) சென்ற (சென்று இருக்கின்ற) வானோர் (விண்ணுலகத் தேவர்களுக்கு பூஜை செய்து)
தழை (உலக பிறப்போடு இணைந்து) கொண்ட (கொண்ட) பாசம் (பாசத்தால்) தயங்கி (உலக வாழ்க்கையில் பலவித துன்பங்களில்) நின்று (நின்று) ஏத்த (அதை போக்கி அருள வேண்டும் என்று இறைவனை போற்றி வணங்க)
பிழைப்பு (குற்றம்) இன்றி (இல்லாமல்) எம் (எமது) பெருமான் (பெருமானாகிய இறைவனின்) அருள் (திருவருள்) ஆமே (கிடைக்கும்).
விளக்கம்:
உண்மையான அன்போடு அருச்சனை செய்வதற்கு நறுமணம் மிக்க மலர்களையும் அபிஷேகம் செய்வதற்கு தூய்மையான நீரையும் ஒன்றாக கைகளில் ஏந்தி வந்து, மழை நீரைக் கொண்ட மாபெரும் மேகக் கூட்டங்களுக்கு மேலே வசிக்கின்ற விண்ணுலகத் தேவர்களுக்கு பூஜை செய்து, இந்த உலகில் பிறவி எடுக்கும் போது அதனுடன் சேர்ந்து வந்த பந்த பாசங்களினால் அனுபவிக்கின்ற பலவித துன்பங்களில் இருந்து தம்மை விடுவித்து அருளும் படி இறைவனை போற்றி வணங்கும் அடியவர்களுக்கு இறைவனின் திருவருளானது எந்தவித குற்றமும் இல்லாமல் பரிபூரணமாக கிடைக்கும்.
