பாடல் #1758: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)
சத்திநற் பீடந் தகுநல்ல வாத்துமாச்
சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ்
சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்
சத்திநல் லாத்துமாச் சதாசிவந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சததிநற பீடந தகுநலல வாறறுமாச
சததிநற கணடந தகுவிததை தானாகுஞ
சததிநல லிஙகந தகுஞசிவ தததுவஞ
சததிநல லாறறுமாச சதாசிவந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சத்தி நல் பீடம் தகு நல்ல ஆத்துமா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் இலிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆத்துமா சதா சிவம் தானே.
பதப்பொருள்:
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) பீடம் (ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில்) தகு (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) நல்ல (நன்மையைக் கொடுத்து) ஆத்துமா (செயல் படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) கண்டம் (ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில்) தகு (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) வித்தை (செயல் படுகின்ற ஞான தத்துவமாக) தான் (தானே) ஆகும் (ஆகின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) இலிங்கம் (ஆத்ம இலிங்கத்தில்) தகும் (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) சிவ (செயல் படுகின்ற சிவ) தத்துவம் (தத்துவமாக இருக்கின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையை கொடுக்கின்ற) ஆத்துமா (ஆத்ம இலிங்கமே) சதா (அனைத்திற்கும மேலான) சிவம் (பரம்பொருளாக) தானே (தானே இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1757 இல் உள்ளபடி ஆத்ம இலிங்கத்திற்கு உள்ளிருந்து ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையான ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி நன்மையைக் கொடுத்து செயல் படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற ஞான தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற சிவ தத்துவமாக இருக்கின்றது. இப்படி ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையை கொடுக்கின்ற ஆத்ம இலிங்கமே அனைத்திற்கும மேலான பரம்பொருளாக தானே இருக்கின்றது.