பாடல் #1757

பாடல் #1757: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

விந்துவு நாதமு மேவு மிலிங்கமாம்
விந்து வதேபீடம் நாத மிலிங்கமா
மந்த விரண்டையு மாதார தெய்வமாய்
வந்த கருவைந்துஞ் செய்யுமவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விநதுவு நாதமு மெவு மிலிஙகமாம
விநது வதெபீடம நாத மிலிஙகமா
மநத விரணடையு மாதார தெயவமாய
வநத கருவைநதுஞ செயயுமவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம்
விந்து அதே பீடம் நாதம் இலிங்கம் ஆம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே.

பதப்பொருள்:

விந்துவும் (வெளிச்சமும்) நாதமும் (சத்தமும்) மேவும் (சரிசமமாக பொருந்தி இருப்பதே) இலிங்கம் (ஆத்ம இலிங்கம்) ஆம் (ஆகும்)

விந்து (வெளிச்சமானது) அதே (அந்த இலிங்கத்தின்) பீடம் (பீடமாகவும்) நாதம் (சத்தமானது) இலிங்கம் (இலிங்கத்தின் பாணமாகவும்) ஆம் (இருக்கின்றது)

அந்த (அந்த வெளிச்சம் சத்தம் ஆகிய) இரண்டையும் (இரண்டையும்) ஆதார (ஆதாரமாகக் கொண்டு) தெய்வம் (வீற்றிருக்கின்ற தெய்வம் [தொழில் காரணர்கள்]) ஆய் (ஆக)

வந்த (ஆத்ம இலிங்கத்தில் வந்த) கரு (கருவாக [தொழில் காரணம்]) ஐந்தும் (பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும்) செய்யும் (தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கான தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அவை (ஆகிய) ஐந்தே (ஐந்து விதமான தொழில்களையும் புரிகின்றனர்).

விளக்கம்:

விந்துவும் (வெளிச்சம்) நாதமும் (சத்தம்) சரிசமமாக பொருந்தி இருப்பதே ஆத்ம இலிங்கம் ஆகும். வெளிச்சமானது அந்த இலிங்கத்தின் பீடமாகவும், சத்தமானது இலிங்கத்தின் பாணமாகவும் இருக்கின்றது. அந்த வெளிச்சம் சத்தம் ஆகிய இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற தெய்வங்களாக (தொழில் காரணர்கள்) ஆத்ம இலிங்கத்தில் வந்த கருவாக (தொழில் காரணம்) பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும் தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கான தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் புரிகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.