பாடல் #1613: ஆறாம் தந்திரம் – 3. ஞாதுரு ஞான ஞேயம் (பார்க்கின்றவனும் ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருளும்)
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரைப் பற்றுப் பரஞான
மாலித்த நாட்டமே ஞேயம் பகுத்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மெலைச சொரூபஙகள மூனறு மிகுசததி
பாலிதத முததிரைப பறறுப பரஞான
மாலிதத நாடடமெ ஞெயம பகுததறற
மூலச சொரூபன மொழிஞா துருவனெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மேலை சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பர ஞானம்
ஆலித்த நாட்டமே ஞேயம் பகுத்து அற்ற
மூல சொரூபன் மொழி ஞாதுருவனே.
பதப்பொருள்:
மேலை (அனைத்திற்கும் மேலே இருக்கின்ற) சொரூபங்கள் (இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற) மூன்று (பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும்) மிகு (மேலான) சத்தி (சக்தியாகிய இறைவன்)
பாலித்த (தம்முடைய திருவருளால் அருளிய) முத்திரை (இந்த மூன்று திரைகளையும்) பற்றும் (தெரிந்து கொள்ளும்) பர (பரம் பொருளின்) ஞானம் (பேரறிவு ஞானம் கிடைக்கப் பெற்று)
ஆலித்த (தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை) நாட்டமே (பார்த்து உணர்ந்து) ஞேயம் (அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன்) பகுத்து (என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை) அற்ற (இல்லாமல் போய்)
மூல (அனைத்திற்கும் மூலமாகிய) சொரூபன் (இறைவனின் சொரூபமாக) மொழி (இருக்கின்ற பொருள்) ஞாதுருவனே (பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்).
விளக்கம்:
அனைத்திற்கும் மேலே இருக்கின்ற இறைவனின் சொரூபங்கள் ஆக இருக்கின்ற பார்க்கின்றவன், பார்க்கும் ஞானம், பார்க்கப்படும் பொருள் ஆகிய மூன்று விதமான தத்துவங்களுக்கும் மேலான சக்தியாகிய இறைவன் தம்முடைய திருவருளால் அருளிய இந்த மூன்று திரைகளையும் தெரிந்து கொள்ளும் பரம் பொருளின் பேரறிவு ஞானம் கிடைக்கப் பெறுவார். அந்த ஞானத்தின் மூலம் தமக்குள் ஆனந்த வடிவாக இருக்கின்ற சிவப் பரம்பொருளை பார்த்து உணர்ந்து அதுவே ஞானத்தால் பார்க்கப் படுகின்ற பொருள் பார்க்கின்றவன் என்று தனித்தனியாக பிரிந்து இருக்கின்ற நிலை இல்லாமல் போய் அனைத்திற்கும் மூலமாகிய இறைவனின் சொரூபமாக இருக்கின்ற பொருள் பார்க்கின்றவனாக இருக்கின்ற தாமே என்பதை உணர்ந்து கொள்ளுவார்கள்.
கருத்து:
பார்க்கின்றவனாகிய சாதகர் தமக்குள் இருக்கின்ற பரம்பொருளை பார்ப்பதற்கான ஞானத்தை இறைவனின் திருவருளால் பெற்று தாம் பார்க்கின்ற அந்த மூலப் பரம்பொருளாக தாமே இருப்பதை உணர்ந்து கொள்வார்.
ஜயா எனக்கு திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 1 முதல் 1450 வரை பாடலை பதிவு செய்யவும்,
ஐயா வணக்கம் எனக்கு திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் அனைத்தும் பதிவு செய்யவும்