பாடல் #1551: ஐந்தாம் தந்திரம் – 22. நிராதாரம் (சாஸ்திரங்களை சார்ந்து இல்லாமல் உணர்வுகளை சார்ந்து இருத்தல்)
பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியி னேரொப்பர்
நீங்கிய வண்ண நினைவு செய்யாதவ
ரேங்கி யுலகி லிருந்தழு வாரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பாஙகமர கொனறைப படரசடை யானடி
தாஙகு மனிதர தரணியி னெரொபபர
நீஙகிய வணண நினைவு செயயாதவ
ரெஙகி யுலகி லிருநதழு வாரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பாங்கு அமர் கொன்றை படர் சடையான் அடி
தாங்கும் மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.
பதப்பொருள்:
பாங்கு (அழகாக) அமர் (அமைக்கப் பட்ட) கொன்றை (கொன்றை மலர்கள்) படர் (படர்ந்து இருக்கின்ற) சடையான் (திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின்) அடி (திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை)
தாங்கும் (நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற) மனிதர் (மனிதர்கள்) தரணியில் (இந்த உலகத்திலேயே) நேர் (இறைவனின் திருவடிகளுக்கு) ஒப்பர் (இணையானவர்களாக இருப்பார்கள்)
நீங்கிய (அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு) வண்ணம் (என்று நினைத்துக் கொண்டு) நினைவு (இறைவனை எப்பொழுதும் நினைத்து இருப்பதை) செய்யாதவர் (செய்யாதவர்கள்)
ஏங்கி (தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே) உலகில் (இந்த உலகத்தில்) இருந்து (இருந்து) அழுவாரே (துன்பப் படுவார்கள்).
விளக்கம்:
அழகாக அமைக்கப் பட்ட கொன்றை மலர்கள் படர்ந்து இருக்கின்ற திருச் சடையைத் தரித்து இருக்கின்ற இறைவனின் திருவடிகளை எப்போதும் நினைக்கின்ற எண்ணங்களை தமது நெஞ்சத்தில் தாங்கி இருக்கின்ற மனிதர்கள் இந்த உலகத்திலேயே இறைவனின் திருவடிகளுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். அவ்வாறு இல்லாமல் இறைவன் வேறு தாம் வேறு என்று நினைத்துக் கொண்டு இறைவனை எப்பொழுதும் நினைக்காமல் இருப்பவர்கள் தாம் விரும்பிய எதுவும் கிடைக்காமல் ஏக்கத்திலேயே இந்த உலகத்தில் இருந்து எப்போது இந்த பிறவி முடியும் என்று துன்பப் படுவார்கள்.