பாடல் #1513

பாடல் #1513: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாயுச சியஞசாக கிராதீதஞ சாருதல
சாயுச சியமுப சாநதததுத தஙகுதல
சாயுச சியஞசிவ மாதல முடிவிலாச
சாயுச சியமனத தானநத சததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாயுச்சியம் சாக்கிர ஆதீதம் சாருதல்
சாயுச்சியம் உப சாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சியம் மனத்து ஆனந்த சத்தியே.

பதப்பொருள்:

சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சாக்கிர (இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும்) ஆதீதம் (நினைவு உலகத்திலும்) சாருதல் (விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) உப (அதற்கு உதவுகின்ற) சாந்தத்து (பேரமைதி எனும் நிலையிலேயே) தங்குதல் (தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சிவம் (தாமே சிவமாக) ஆதல் (ஆகி இறைவனின்) முடிவு (எல்லை) இலா (இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) மனத்து (மனதிற்குள்) ஆனந்த (இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து) சத்தியே (அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்).

விளக்கம்:

இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும் நினைவு உலகத்திலும் விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும். இந்த நிலைக்கு உதவுகின்ற பேரமைதி எனும் நிலையிலேயே தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும். இந்த நிலையில் தாமே சிவமாக ஆகி இறைவனின் எல்லை இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும். அந்த நிலையில் மனதிற்குள் இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.