பாடல் #1512

பாடல் #1512: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சைவச் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவச் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவச் சிவானந்தஞ் சாயுச்சிய மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சிவனுடன சமபநத மாவது
சைவந தனையறிந தெசிவஞ சாருதல
சைவச சிவநதனனைச சாராமல நீவுதல
சைவச சிவானநதஞ சாயுசசிய மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவ சிவம் தன்னை சாராமல் நீவுதல்
சைவ சிவ ஆனந்தம் சாயுச்சியம் ஆமே.

பதப்பொருள்:

சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவனுடன் (இறைவனுடன்) சம்பந்தம் (நெருங்கிய உறவினர் போல) ஆவது (தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும்)
சைவம் (இந்த நிலையை அடைவதற்கு சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின்) தனை (வழி முறையின் மூலம்) அறிந்தே (இறைவனை அறிந்து கொண்டு) சிவம் (இறைவனை) சாருதல் (மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவம் (சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு) தன்னை (தாம் எனும் எண்ணத்தை) சாராமல் (சார்ந்து இருப்பதை) நீவுதல் (நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின் பயனால்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்தம் (மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி) சாயுச்சியம் (இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே) ஆமே (இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்).

விளக்கம்:

சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில் இறைவனுடன் நெருங்கிய உறவினர் போல தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும். இந்த நிலையை அடைவதற்கு அந்த வழி முறையின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும். அந்த தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு தாம் எனும் எண்ணத்தை சார்ந்து இருப்பதை நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும். அந்த தர்மத்தின் பயனால் சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.