பாடல் #1498: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
அருங்கரை யாவது அவ்வடி நீழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லா
மொருங்கரை வாயுல கேழினொத் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அருஙகரை யாவது அவவடி நீழல
பெருஙகரை யாவது பிஞஞக னாணை
வருஙகரை யெகினற மனனுயிரக கெலலா
மொருஙகரை வாயுல கெழினொத தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அரும் கரை ஆவது அவ் அடி நீழல்
பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை
வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம்
ஒரும் கரை ஆய் உலகு ஏழின் ஒத்தானே.
பதப்பொருள்:
அரும் (சென்று சேருவதற்கு மிகவும் அரியதான) கரை (எல்லையாக) ஆவது (இருப்பது) அவ் (இறைவனின்) அடி (திருவடிகளின்) நீழல் (நிழலாகும்)
பெரும் (பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை) கரை (பெறுகின்ற எல்லையாக) ஆவது (இருப்பது) பிஞ்ஞகன் (பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின்) ஆணை (ஆணைகளாகும்)
வரும் (தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின்) கரை (எல்லைகளுக்கு) ஏகின்ற (ஏற்றபடி இந்த உலகத்தில்) மன் (நிலை பெற்று வாழுகின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) எல்லாம் (எல்லாம்)
ஒரும் (அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும்) கரை (கரையாக) ஆய் (இருக்கின்ற) உலகு (உலகங்கள்) ஏழின் (ஏழு விதத்திற்கும்) ஒத்தானே (ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்).
விளக்கம்:
சென்று சேருவதற்கு மிகவும் அரியதான எல்லையாக இருப்பது இறைவனின் திருவடிகளின் நிழலாகும். பிறை நிலாவை சூடிக்கொண்டு இருக்கும் இறைவனின் ஆணைகளே பிறப்பு இல்லாத மாபெரும் நிலையை பெறுகின்ற எல்லையாக இருக்கின்றன. தத்தமது வினைகளுக்கு ஏற்றபடி வருகின்ற கர்மங்களின் எல்லைகளுக்கு ஏற்றபடி இந்த உலகத்தில் நிலை பெற்று வாழுகின்ற உயிர்களுக்கு எல்லாம் அவற்றின் வினைகளை தீர்த்துக் கொண்டு சென்று சேரும் கரையாக இருக்கின்ற உலகங்கள் ஏழு விதத்திற்கும் ஒத்து இருக்கின்ற தந்தையாக இறைவனே இருக்கின்றான்.
கருத்து:
உயிர்கள் தங்களின் கர்மங்களை தீர்த்துக் கொள்ளவே ஏழு விதமான உலகங்களிலும் தத்தமது வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்கின்றன. இந்த ஏழு விதமான உலகங்களிலும் எடுக்கின்ற அனைத்து பிறவிகளிலும் தந்தையாக இருந்து காக்கின்ற இறைவனே முக்தி எனும் எல்லையாகவும் இருக்கின்றான்.