பாடல் #1496: ஐந்தாம் தந்திரம் – 11. சற்புத்திர மார்க்கம் (இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவனை அடைகின்ற வழி முறை)
பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திட
லாசற்ற நற்றவம் வாய்மை யழுக்கின்மை
நேசித்திட் டன்னமு நீர்சுத்தி செய்தல்மற்
றாசற்றல் சற்புத்திர மார்க மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பூசிததல வாசிததல பொறறல செவிததிட
லாசறற நறறவம வாயமை யழுககினமை
நெசிததிட டனனமு நீரசுததி செயதலமற
றாசறறல சறபுததிர மாரக மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பூசித்தல் வாசித்தல் போற்றல் சேவித்திடல்
ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை
நேசித்து இட்ட அன்னமும் நீர் சுத்தி செய்தல் மற்று
ஆசு அற்றல் சற் புத்திர மார்கம் ஆமே.
பதப்பொருள்:
பூசித்தல் (பூஜை செய்தல்) வாசித்தல் (மந்திரங்களை பாடுதல்) போற்றல் (போற்றி வணங்குதல்) சேவித்திடல் (தரிசனம் செய்தல்)
ஆசு (குற்றம்) அற்ற (இல்லாத) நல் (நன்மையான) தவம் (தவத்தை மேற்கொள்ளுதல்) வாய்மை (உண்மையே பேசுதல்) அழுக்கு (அழுக்கு) இன்மை (இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல்)
நேசித்து (அன்போடு) இட்ட (சமைத்து வைத்த) அன்னமும் (உணவை நைவேத்யமாக படைத்தல்) நீர் (நீரினால்) சுத்தி (சுத்தம்) செய்தல் (செய்து சமர்ப்பணம் செய்தல்) மற்று (ஆகிய இவை அனைத்தையும்)
ஆசு (தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம்) அற்றல் (இல்லாமல் இருந்து செய்வதே) சற் (உண்மையான தந்தையாக இறைவனையும்) புத்திர (அவரின் பிள்ளையாக தன்னையும் பாவித்து) மார்கம் (அவனை அடைகின்ற வழி முறை) ஆமே (ஆகும்).
விளக்கம்:
இறைவனை உண்மையான தந்தையாக பாவித்து அவருக்கு பூஜை செய்தல், மந்திரங்களை பாடுதல், போற்றி வணங்குதல், தரிசனம் செய்தல், குற்றம் இல்லாத நன்மையான தவத்தை மேற்கொள்ளுதல், உண்மையே பேசுதல், அழுக்கு இல்லாமல் சுற்றுப் புறத்தையும் தம்மையும் சுத்தமாக வைத்தல், அன்போடு சமைத்து வைத்த உணவை நைவேத்யமாக படைத்தல், நீரினால் சுத்தம் செய்து சமர்ப்பணம் செய்தல் ஆகிய இவை அனைத்தையும் தாம் செய்கின்றோம் என்கின்ற எண்ணம் இல்லாமல் இருந்து செய்வதே இறைவனின் பிள்ளையாக தன்னை பாவித்து அவனை அடைகின்ற வழி முறை ஆகும்.