பாடல் #1294: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)
கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.
விளக்கம்:
பாடல் #1293 இல் உள்ளபடி சாதகரிடம் சூட்சுமமாக இருக்கின்ற ஆறு கைகளிலும் ஏந்தி இருக்கின்ற பைரவர் கொடுத்து அருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்து கொள்ளலாம். அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கின்ற பைரவர் தமது தூய்மையான அருளை சாதகருக்குக் கொடுத்து அவருக்குள் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி பேருண்மையாக விளங்குகின்ற பரம்பொருளை உணரும்படி அருள்வார். அதன் பிறகு பொய்யான மாயை அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டு சாதகர்கள் பைரவரை பூஜித்து வழிபாடு செய்வார்கள்.