பாடல் #1293: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)
ஆமேவப் பூண்டரு ளாதி வயிரவ
னாமே கபாலமுஞ் சூலமுங் கைக்கொண்டங்
காமே தமருக பாசமுங் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே.
விளக்கம்:
பாடல் #1292 இல் உள்ளபடி சாதகரைச் சுற்றிப் படர்ந்து சாதகர் தரித்து இருக்கும் பைரவச் சக்கரமானது ஆதி மூலமாகிய பைரவர் கொடுத்து அருளியது. பைரவரது அருளானது பைரவச் சக்கரத்தை தரித்த சாதகரின் கைகளில் சூட்சுமமாக இறப்பில்லாத தன்மையை அருளும் கபாலமாகவும் தீய சக்திகளை தடுத்து நிற்கும் திரிசூலமாகவும் நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளையுமே சேர விடாமால் இரண்டு பக்கமும் வருகின்ற நாதத்தால் காத்து அருளுகின்ற தமருகமாகவும் உலகப் பற்றுக்களை அறுக்கின்ற பாசக் கயிறாகவும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழிக்கின்ற சிரமாகவும் இனி வரும் பிறவிகளையும் அறுக்கின்ற வாளாகவும் இருக்கின்றது.
கருத்து: பைரவர் அருளால் சாதகர் பெற்ற பைரவச் சக்கரத்தின் மூலம் சாதகர் இறப்பில்லாத தன்மையையும் தீய சக்திகளை அண்ட விடாமல் தடுத்தும் பிறவி எடுப்பதற்கு காரணமாகிய நன்மை தீமை ஆகிய இரண்டு வினைகளுமே இருக்கக்கூடாது என்பதனால் அதை தடுத்தும் உலகப் பற்றுக்களை நீக்கியும் பிறவி எடுப்பதற்கான கர்மங்களை அழித்தும் ஏற்கனவே இருக்கின்ற கர்மங்களினால் இனி எடுக்க வேண்டிய பிறவிகளை அறுத்தும் பயன் பெறுகிறார்.