பாடல் #1291: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)
அறிந்த பிரதமை யோடாறு மறிஞ்சு
அறிந்தவச் சத்தமி மேலிவை குற்றம்
அறிந்தவை யொன்றுவிட் டொன்றுபத் தாக
அறிந்த வலமது வாக நடவே.
விளக்கம்:
உலக நடப்பில் அறிந்து கொண்ட சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிக்கும் திதிகளில் முதல் திதியாகிய பிரதமையோடு துவிதியை திருதியை சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய ஐந்து திதிகளையும் சேர்த்து மொத்தம் ஆறு திதிகளையும் அவை வருகின்ற கால அளவுகளையும் அறிந்து கொண்டு அந்த திதிகளில் ஏழாவதான சப்தமி திதியிலிருந்து அதற்கு மேல் இருக்கும் ஒன்பது திதிகளில் சிறப்பில்லாத சப்தமி நவமி ஏகாதசி திரயோதசி ஆகிய திதிகளை விட்டு விட்டு சிறப்பான அஷ்டமி தசமி துவாதசி சதுர்த்தசி ஆகிய நான்கு திதிகளுடன் முதல் ஆறு திதிகளையும் சேர்த்து மொத்தம் பத்து திதிகளிலும் மூச்சுக் காற்றை வலது நாடியின் வழியாக உள்ளிழுத்து வெளிவிட்டு பைரவரை நினைத்து வழிபடலாம்.
வளர்பிறை திதிகள்:
- பிரதமை
- துவிதியை
- திருதியை
- சதுர்த்தி
- பஞ்சமி
- சஷ்டி
- சப்தமி
- அஷ்டமி
- நவமி
- தசமி
- ஏகாதசி
- துவாதசி
- திரயோதசி
- சதுர்த்தசி
- பெளர்ணமி
தேய் பிறை திதிகள்: மேலுள்ள முதல் 14 திதிகளுடன் சேர்ந்து அமாவாசையில் முடிவது.