பாடல் #1133

பாடல் #1133: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

அறிவான மாயையு மைம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரிற்
பிரியா வறிவறி வாருள்ளம் பேணும்
நெறிவாய சித்த நினைந்திருந் தாளே.

விளக்கம்:

உயிர்களின் உண்மை அறிவை மாயை மறைத்து இருப்பதால் அவர்களுக்குள் இருக்கும் ஐந்து புலன்களும் உலக அறிவை மட்டுமே கொடுக்கின்றன. இதை மாற்றி அவர்களின் மாயையை நீக்கி உண்மை அறிவைக் கொடுக்கின்ற இறைவியின் அருள் அவர்களுக்கு கிடைத்து விட்டால் அவர்களுக்கு இறைவனும் தாமும் வேறில்லை என்கிற பேரறிவு ஞானம் கிடைத்து விடும். அதன் பிறகு அவர்கள் தமக்குள் இருக்கும் இறைவனை நினைத்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பதினால் இறைவியும் அவர்களின் சித்தத்தில் சேர்ந்து வீற்றிருப்பதை தமது செயலாக வைத்திருப்பாள்.

குறிப்பு:

பாடல் #1132 இல் உள்ளபடி தமக்குள் இறைவன் ஆடுகின்ற அம்பலத்தை தரிசிக்க முடியும் என்கிற அறிவு இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு உண்மை ஞானத்தை கொடுக்கும் இறைவியின் அருள் கிடைத்து விட்டால் அவர்கள் தாமே இறைவனாக இருப்பதை உணர்ந்து எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள். இவர்கள் பேரின்பத்தில் இறைவனை எப்போதும் நினைத்துக் கொண்டே இருப்பதால் இறைவியும் அவர்களின் சித்தத்துடன் சேர்ந்திருப்பதை தனது தர்மமாக வைத்திருப்பாள்.

பாடல் #1134

பாடல் #1134: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

இரவும் பகலு மிலாத விடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாம லருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனு மாமே.

விளக்கம்:

காலை மாலை என்று வரையறுக்கப்பட்ட காலங்கள் இல்லாமல் எந்தக் காலத்திலும் நமக்குள்ளேயே வீற்றிருக்கின்ற நறுமணம் கமழ்கின்ற அழகிய கூந்தலை உடைய இறைவியைத் தமக்குள்ளேயே தேடி அடைந்து அவளுடைய திருவருளைத் தவிர வேறு எந்த எண்ணத்தாலும் சிறிதும் அசைந்து விடாத மனநிலையில் ஆழ்நிலை தியானத்தில் இருப்பவர்கள் எப்போதும் மாறாமல் இருக்கும் உடலைப் பெற்று என்றும் இளமையுடனே இருப்பார்கள்.

குறிப்பு:

பாடல் #1133 இல் உள்ளபடி சித்தத்தில் வீற்றிருக்கும் இறைவியானவள் எப்படி வீற்றிருக்கின்றாள் அவளை எப்படி அடைந்து அவளை மட்டுமே எண்ணி இருந்து அழியாத உடலை எப்படி பெறலாம் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1135

பாடல் #1135: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

பாலனு மாகும் பராசத்தி தன்னொடு
மேலணு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனு முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.

விளக்கம்:

பாடல் #1134 இல் உள்ளபடி எப்போதும் இளமை மாறாத உடலைப் பெற்று என்றும் இறைவியோடு சேர்ந்து இருக்கின்ற சாதகர்கள் அதற்கும் மேலான நிலைக்கு செல்வதற்கு தடையாக இருக்கின்ற அம்மை அப்பன் எனும் பிரிவினையான எண்ணங்களை விட்டு விட்டு முக்திக்கு சரிசமமாகச் சொல்லப்படுகின்ற அனைத்துமாகவும் நிற்கின்ற இறைவியே ஆதிப் பரம்பொருளாக இருக்கின்றாள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

குறிப்பு:இறைவன் இறைவி என்று தனித்தனியாக நினைக்கின்ற எண்ணத்தை விடுகின்ற சாதகர்களுக்கு இறைவன் இறைவி என்று தனித்தனியாக இல்லாமல் ஒரே மூலப் பரம்பொருளாக பராசக்தியே இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1136

பாடல் #1136: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடு
நின்றறி ஞானமு மிச்சையு மாய்நிற்கும்
நன்றறி யுங்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே.

விளக்கம்:

பாடல் #1135 இல் உள்ளபடி சாதகருக்குள் அனைத்துமாக நின்ற ஆதி பரம்பொருளாகிய இறைவியே அசையா சக்தியாகிய இறைவனோடு சேர்ந்து நிற்கின்ற போது ஞானா சக்தியாகவும் இச்சா சக்தியாகவும் நிற்கின்றாள் என்பதையும் அவளை நன்மையே வடிவானவளாக அறிகின்ற போது கிரியா சக்தியாகவும் நிற்கின்றாள் என்பதையும் அறிந்து கொண்டு அவளின் எண்ணங்களிலேயே வீற்றிருக்கும் சாதகர்கள் தமக்குள் இருக்கின்ற அனைத்தும் அவளின் அம்சமாகவே மாறி விடுவதை உணர்ந்து கொள்வார்கள்.

குறிப்பு:

அசையா சக்தியாக இருக்கும் இறைவனுடன் இருக்கும் பூரண சக்தியானவள் உலகங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிற போது அது இச்சா சக்தியாகவும், அதை எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது அது ஞானா சக்தியாகவும், அதை எண்ணிய படியே உருவாக்குகின்ற போது கிரியா சக்தியாகவும் இருக்கின்றாள். அசையா சக்தியான இறைவனும் அசையும் சக்தியாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் பூரண சக்தியை தமக்குள் உணர்ந்த சாதகர்கள் இந்த மூன்று சித்திகளையும் பெற்று அதை உலகத் தேவைக்கேற்ப செயல் படுத்துவார்கள்.

பாடல் #1137

பாடல் #1137: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

மருவொத்த மங்கையுந் தானு முடனே
உருவொத்து நின்றமை யொன்று முணரார்
கருவொத்து நின்று கலக்கின்ற போது
திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.

விளக்கம்:

பாடல் #1136 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் இருக்கும் அனைத்து அம்சங்களாகவும் இறைவியே மாறி நிற்பதை உணர்ந்தாலும் தம்முடைய உருவமும் இறைவியாகவே மாறி நிற்பதை உணராமல் இருக்கின்றார்கள். ஆணின் அம்சமும் பெண்ணின் அம்சமும் ஒன்று சேர்ந்து கருவாக உருவாகுவது போலவே இறைவியும் தாமும் ஒன்றாக கலந்து நிற்பதை சாதகர்கள் உணருகின்ற போது இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கும் அவர்களின் சிந்தனைக்குள் இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

பாடல் #1138

பாடல் #1138: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்தி
விந்துவும் நாதமு மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொ டாதியதாம் வண்ணத் தாளே.

விளக்கம்:

பாடல் #1137 இல் உள்ளபடி இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கின்ற சாதகரின் சிந்தைக்குள் வீற்றிருக்கின்ற இறைவியும் இறைவனும் சேர்ந்த பூரண சக்தி அவரின் உடலுக்குள்ளிருந்து வெளிச்சமாகவும் சத்தமாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரவி அனைத்தையும் இயக்குகின்றது. இறைவனைப் போலவே சாதகரும் சந்திரனை சூடிக்கொண்டு சடை முடி தரித்துக் கொண்டு சாத்வீக குணத்துடன் இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் உருவமாகவே ஆகிவிடுகின்றார்.

பாடல் #1139

பாடல் #1139: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநற் றீபத் தொளியுடன்
ஊறி யிருந்தன ளுள்ளுடை யார்க்கே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்து இருக்கின்ற அமிழ்தமான பாலை வழங்குகின்ற இறைவியை தமக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று அந்த அமிழ்தமான பாலை உண்மை ஞானத்தை தரும் பேரொளியாக மாற்றுகின்ற வழியை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. அந்த வழியை குருவின் உபதேசத்தாலோ அல்லது இறைவியின் அருளாலோ அறிந்து கொண்டு அதன்படியே தமக்குள் ஆராய்ந்து இறைவியை அறிந்து கொண்டு தெளிவு அடைந்தவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவி அமிழ்தப் பாலை உண்மை ஞானத்தையும் பேரின்பத்தையும் கொடுக்கின்ற பேரொளி தீபமாக ஊறிக் கொண்டே இருப்பாள்.

பாடல் #1140

பாடல் #1140: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

உடையவ னங்கி யுருத்திர சோதி
விடையவ னேறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

விளக்கம்:

பாடல் #1139 இல் உள்ளபடி உள்ளத்திற்குள் தெளிவு பெற்ற சாதகர்களுக்கு மீதி இருக்கும் கர்மங்களையும் பிறவிகளையும் எரித்து அழிக்கும் அக்னியாக உருத்திரனின் அம்சம் ஜோதியாக காளையின் மேல் வீற்றிருந்து சாதகருக்கு தரிசனம் கொடுக்கின்றார். இதை தரிசித்ததால் தமது நெஞ்சத்திற்குள் இறைவனை அடையும் படி வீற்றிருக்கப் பெற்றவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.

குறிப்பு: இறையருளால் இறைவனின் அம்சத்தை தரிசித்து தமது கர்மங்களையும் பிறவிகளையும் நீக்கப் பெற்றவர்களே சாதகர்கள் ஆவார்கள்.

பாடல் #1141

பாடல் #1141: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

தாமே லுறைவிட மாறித ழானது
பார்மே லிதழ்பதி னெட்டிரு நூறுள
பூமே லுறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மே லுறைகின்ற பைங்கொடி யாளே.

விளக்கம்:

பாடல் #1140 இல் உள்ளபடி இறைவனை தமது நெஞ்சத்திற்குள் அடையும்படி பெற்ற சாதகருக்குள் இறைவன் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டான சக்கரத்தில் வந்து பின்பு அங்கிருந்து நான்கு இதழ்கள் கொண்ட மூலாதார சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சாதகரின் 3600 சுவாசங்களின் மூலம் எழுப்பி விடுகிறார். அங்கிருந்து வெளிப்பட்ட சக்தியானவள் ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவதாக இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவாள். உலகங்கள் அனைத்திலும் பரவி வீற்றிருக்கின்ற இறைவியே சகஸ்ரதள சக்தியாக அங்கிருந்து பசுமையான கொடி போல வெளிப்படுவாள்.

கருத்து:

இறைவியும் தாமும் வேறில்லை என்று எண்ணுகின்ற சாதகரின் நெஞ்சத்தில் இறைவன் வந்து வீற்றிருக்கின்றார். அந்த இறைவன் சாதகரின் மூச்சுக்காற்றில் 3000 எண்ணிக்கையை எடுத்து சுவாதிஷ்டான சக்கரத்தை எழுப்பி விடுகின்றார். அதன் பிறகு சாதகரின் மூச்சுக்காற்றில் 3600 எண்ணிக்கையை எடுத்து மூலாதார சக்கரத்தில் இருக்கின்ற குண்டலினி சக்தியை எழுப்பி விடுகின்றார். அந்த குண்டலினி சக்தியானது அதற்கு மேலுள்ள ஐந்து சக்கரங்களையும் தாண்டி மேலே ஏறிச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை எழுப்பி விடுகின்றது. அங்கிருக்கும் சக்தியானவள் பசுமையான கொடி போல சாதகரின் உடலுக்குள்ளிருந்து வெளிப்படுவாள்.

குறிப்பு:

மனிதன் ஒரு நாளுக்கு மொத்தம் 21,600 முறை சுவாசிக்கின்றான். யோகப் பயிற்சிகள் செய்யும் சாதகர்களுக்கு இந்த சுவாசக் காற்றானது நுரையீரலில் இருந்து உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களுக்கும் முறையே 3000 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகிறது (6 x 3000 = 18,000). மூலாதார சக்கரத்தில் 3600 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகின்றது (18,000 + 3,600 = 21,600). ஆக மொத்தம் 21,600 சுவாசங்களும் சக்கரங்களுக்கு சென்று சக்தியூட்டுகிறது.

பாடல் #1142

பாடல் #1142: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

பைங்கொடி யாளும் பரம னிருந்திடந்
திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்
விண்கொடி யாக விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே.

விளக்கம்:

பாடல் #1141 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து பசுமையான கொடி போல வெளிப்பட்ட சக்தியானவள் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக ஒரு பருமனான பிரகாசத்தைத் தருகின்ற ஜோதியாக வானம் வரை கொடி போல் வளர்ந்து உலகங்கள் அனைத்தையும் இயங்க வைக்கின்றாள்.