பாடல் #727
பாடல் #727: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
விளக்கம்:
பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.
கருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

பாடல் #728
பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.
விளக்கம்:
மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.
கருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #729
பாடல் #729: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.
விளக்கம்:
பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.
கருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.
