பாடல் #652

பாடல் #652: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

விளக்கம்:

ஐம்புலன்களாகிய பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் ஆகியவற்றில் செல்லும் எண்ணங்கள் எல்லாம் சிவமாய் உணர்ந்து முக்தி நிலையை அறிந்து அதிலேயே லயித்து இருப்பவர்கள் சிவ முக்தர்கள் ஆவார்கள். இவர்கள் ஐந்து புலன்களின் உணர்விலும் தொடர்பில்லாதவர்கள் ஆகையால் தூய நிலையை அடைந்து அவர்களின் எண்ணம் சிவனோடு ஒன்றுபட்டு ஆனந்த நிலையில் நடனம் ஆடுவார்கள்.

கருத்து: சிவயோகியர் உடம்பை மறந்து மேல் நிலையில் இன்புற்று இருப்பார்கள்.

பாடல் #653

பாடல் #653: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.

விளக்கம்:

பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகிய ஒன்பது வாயுக்களும், இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு ஆகிய ஒன்பது நாடிகளில் (நரம்புகளில்) அதிகமாகாமலும் குறையாமலும் சரிசமமாக இருந்தால் பத்தாவது நாடியான சுழுமுனை வழியே செல்லும் பத்தாவது வாயுவான தனஞ்செயன் என்னும் வாயு உடலோடும் உயிரோடும் ஒன்றுபட்டு பிரியாமல் இருக்கும்.

கருத்து: உடலிலுள்ள ஒன்பது வாயுக்களும் சமமாக இருந்தால் உடலை விட்டு உயிர் பிரியாது இருக்கும்.

பாடல் #654

பாடல் #654: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்
இருக்கு முடலி லிருந்தில வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

விளக்கம்:

தனஞ்செயன் என்னும் வாயு உடம்பில் இருக்கும் ஒன்பது வாயுக்களோடு கலந்து உடலில் உள்ள இருநூற்று இருபத்து நான்கு நரம்புகள் வழியே சென்று கொண்டு இருக்கும். அவ்வாறு செல்லாமல் இருந்தால் உடம்பு வீங்கி வெடித்துவிடும்.

கருத்து: தனஞ்செயன் என்னும் வாயு உடலில் உள்ளவரை உடல் அழியாது.

பாடல் #655

பாடல் #655: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்
வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.

விளக்கம்:

வயிற்றுக் கட்டி அல்லது வீக்கம், சிரங்கு, குஷ்டம், உறுப்புகள் வீக்கம், பலவகை சோகைகள், வாதம் (நரம்பு தளர்ச்சி) கூன், முடம் (ஊனம்) கண் நோய்கள் ஆகிய வியாதிகள் உடலிலுள்ள தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் உருவாகும்.

கருத்து: உடலுக்கு வரும் வியாதிகளில் பல தனஞ்செயன் என்னும் வாயு குறைவதால் வருகின்றன.

பாடல் #656

பாடல் #656: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

விளக்கம்:

கண்ணில் வியாதிகளைக் கொடுக்கும் தனஞ்செயன் கண்ணில் பூ விழுதல் (கருவிழியில் வெள்ளை நிறம் தோன்றி கண் பார்வை போதல்) காசம் (கண்ணில் சீழ் வழிதல்) ஆகியவற்றிற்கு காரணம் இல்லை. கண்ணிலிருந்து ஒளியை மூளைக்குக் கொண்டு செல்லும் கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் இவ்விரு வியாதிகள் வருகின்றன. இந்த வாயுவின் குறைபாட்டால் பார்வையில் ஒளி இல்லாமலும் ஆகும்.

கருத்து: கூர்மன் என்னும் வாயு குறைபாட்டால் கண்ணில் பூ விழுதல் காசம் ஆகிய இரு நோய்கள் உண்டாகும்.

பாடல் #657

பாடல் #657: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து தலை உச்சிக்கு செல்லும் குண்டலினி சக்தியின் ஜோதியை அகக் கண்ணால் கண்டு அந்த ஜோதியின் ஒளிர்விடும் ஓசையை இதயத்துடிப்பால் உணர்ந்து இருப்பவர்களை தேவர்களுள் முதல்வர்களான உருத்ரன், திருமால், பிரம்மன் ஆகிய மூவரும் இடைவிடாது உள்ளுக்குள் உணர்ந்திருப்பார்கள்.

கருத்து: குண்டலியின் ஜோதியையும் அதன் ஓசையும் தமக்குள் உணர்ந்தவர்களை முப்பெரும் தேவர்களும் உணர்ந்து இருப்பார்கள்.

பாடல் #658

பாடல் #658: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒருங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல மாமே.

விளக்கம்:

ஒன்பது துவாரங்களைக் (இரண்டு கண், இரண்டு காது, வாய், மூக்கு, மலத் துவாரம், சிறுநீர்த் துவாரம்) கொண்ட மனித உடலில் இருக்கும் ஒன்பது வித நாடிகளை (இடகலை, பிங்கலை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குகு) புருவ மத்தியில் ஒருமுகப்படுத்தி தவம் செய்யக்கூடியவர்களின் உடலுக்கு என்றும் அழிவில்லை.

கருத்து: ஒன்பது நாடிகளையும் ஒருமுகப்படுத்தி தவம் செய்பவர்களுக்கு உடல் என்றும் அழியாமல் இருக்கும்.

பாடல் #659

பாடல் #659: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.

விளக்கம்:

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அக்கினியை எழுப்பிச் சுழுமுனை நாடி வழியே தலை உச்சிக்கு இழுத்து பிராணாயம முறைப்படி சூரியகலை (வலது நாசி), சந்திரகலை (இடது நாசி) வழியாக உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றால் தாங்கி ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையலாம். இம்முறையை சிவனது அருள்வழியில் செல்பவர்களுக்கு யாம் கூறினோம்.

கருத்து: ஏழு உலகங்களிலும் வியாபித்து இருக்கும் ஆற்றலை அடையும் வழியை சிவ வழியில் செல்வோர்க்கு கூறுகிறார்.

பாடல் #660

பாடல் #660: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.

விளக்கம்:

இடகலை பிங்கலை நாடிகளுக்கு நடுவிலுள்ள சுழுமுனை நாடியை பிராணாயாமத்தின் மூலம் திறக்க வைத்தால் வலையில் சிக்கிய மானைத் தேடி ஓடிவரும் அதன் துணை மானைப் போல குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திலுள்ள சிவத்தை தேடி அடையும். அடைந்தபின் சேமித்து வைத்த உணவு பண்டம் எப்போதும் உண்ண உதவுவதுபோல அந்நாக்கில் ஊறும் அமுதமானது உடலோடு உயிர் நீடித்திருக்க வைத்திருக்கும்.

கருத்து: குண்டலினி சக்தியை தலை உச்சியில் சேர்த்தால் அமுதம் ஊறி உடலோடு உயிர் நீண்டகாலம் நீடித்திருக்கும்.

பாடல் #661

பாடல் #661: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

விளக்கம்:

மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி சகஸ்ரதளத்திற்கு விரைவாக அடைந்து அங்கு சிவத்தை தரிசித்தவர்கள் அங்குள்ள நாடியினுள்ளே ஓங்கார ஒலியை எழுப்புவார்கள். அதன்பிறகு அமுதம் ஊறுகின்ற அன்னாக்கைத் தேடிச் சென்று அங்கே ஊறும் அமுதத்தை பருகியவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கின்ற மாயை, அகங்காரம், ஆணவம், காமம், குரோதம் ஆகிய ஐந்துவித பகைவர்களும் அடங்கி இருப்பார்கள்.

கருத்து: குண்டலினி சக்தியின் மூலம் இறைவனை தரிசித்தவர்களுக்கு இறைவனை அடையத் தடையாயிருக்கும் அனைத்தும் அடங்கியிருக்கும்.