பாடல் #1837

பாடல் #1837: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசனருட் சேவடி யென்றன்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாருந் திதித்துண ராரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஏததுவர மாமலர தூவித தொழுதுநின
றாரததெம தீசனருட செவடி யெனறன
மூரததியை மூவா முதலுரு வாயநினற
தீரததனை யாருந திதிததுண ராரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏத்துவர் மா மலர் தூவி தொழுது நின்று
ஆர்த்து எமது ஈசன் அருள் சேவடி என்றன்
மூர்த்தியை மூவா முதல் உரு ஆய் நின்ற
தீர்த்தனை யாரும் திதித்து உணராரே.

பதப்பொருள்:

ஏத்துவர் (இறைவனை போற்றி துதித்து) மா (நறுமணம் மிக்க) மலர் (மலர்களை) தூவி (தூவி) தொழுது (அருச்சனை செய்து) நின்று (கை கூப்பி நின்று)
ஆர்த்து (பெரும் கூச்சலிட்டு) எமது (எமது பெருமானாகிய) ஈசன் (இறைவனின்) அருள் (திருவருள் வேண்டி) சேவடி (அவனின் சிவந்த திருவடியை வணங்குவார்கள்) என்றன் (எமது)
மூர்த்தியை (தலைவனாகிய இறைவனை) மூவா (முதுமை என்பதே இல்லாதவனை) முதல் (அனைத்திற்கும் முதலான ஆதியின்) உரு (வடிவம்) ஆய் (ஆகவே) நின்ற (நின்று அருள்கின்றவனை)
தீர்த்தனை (பரிசுத்தமான புண்ணியனை) யாரும் (எவரும்) திதித்து (தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து) உணராரே (உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனின் திருவருளை வேண்டி போற்றி துதித்து, நறுமணம் மிக்க மலர்களை தூவி அருச்சனை செய்து, கை கூப்பி நின்று, திருநாமத்தை சொல்லி பெரும் கூச்சலிட்டு இறைவனின் சிவந்த திருவடிகளை வணங்குகின்றார்கள். ஆனால் எமது தலைவனும், அனைத்திற்கும் முதல்வனும், முதுமை என்பதே இல்லாதவனும், அனைத்திற்கும் முதலான ஆதியின் வடிவமாகவும் இருக்கின்ற பரிசுத்தமான புண்ணியனாகிய இறைவனை தமது ஆசைகளையும் புலன்களையும் அடக்கி ஒழுக்கத்தை கடைபிடித்து உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1838

பாடல் #1838: ஏழாம் தந்திரம் – 11. சிவ பூசை (அகத்திலும் புறத்திலும் சிவத்தை அறிந்து பூஜை செய்தல்)

தேவர்க ளோடிசை வந்துமண் ணாடோறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வனாய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெவரக ளொடிசை வநதுமண ணாடொறும
பூவொடு நீரசுமந தெததிப புனிதனை
மூவரிற பனமை முதலவனாய நினறருள
நீரமையை யாவர நினைககவல லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேவர்களோடு இசை வந்து மண் நாள் தோறும்
பூவோடு நீர் சுமந்து ஏத்தி புனிதனை
மூவரில் பன்மை முதல்வன் ஆய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.

பதப்பொருள்:

தேவர்களோடு (விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று) இசை (அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை) வந்து (மனம் ஒன்றிப் பாடி) மண் (இந்த மண்ணுலகில்) நாள் (தினம்) தோறும் (தோறும்)
பூவோடு (நறுமணம் மிக்க மலர்களோடு) நீர் (தூய்மையான நீரையும்) சுமந்து (கைகளில் எடுத்து வந்து) ஏத்தி (போற்றி துதித்து) புனிதனை (தூய்மையானவனாகிய இறைவனை)
மூவரில் (பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளில்) பன்மை (பலவித தன்மைகள் கொண்டவனைப் போல பிரிந்து இருந்தாலும்) முதல்வன் (அனைத்திற்கும் முதல்வன்) ஆய் (ஆகவே) நின்று (நின்று) அருள் (திருவருள் புரிகின்றவனின்)
நீர்மையை (பெருங் கருணை குணத்தை) யாவர் (எவர்) நினைக்க (நினைத்து பார்க்கும்) வல்லாரே (வல்லமை பெற்றவர்களாக இருக்கின்றார்கள்?).

விளக்கம்:

விண்ணுலகத்தில் வாழும் தேவர்களின் அம்சமாகிய அடியவர்களோடு சேர்ந்து நின்று, அவர்கள் இசைக்கின்ற பலவித மந்திரங்களாகிய பாடல்களை மனம் ஒன்றிப் பாடி, இந்த உலகத்தில் தினம் தோறும் நறுமணம் மிக்க மலர்களோடு தூய்மையான நீரையும் கைகளில் எடுத்து வந்து, தூய்மையானவனாகிய இறைவனை போற்றி துதித்து, பிரம்மன், திருமால், உருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளாக தனித்தனி தன்மைகளோடு பிரிந்து இருந்தாலும் அனைத்திற்கும் முதல்வனாகவே நின்று திருவருள் புரிகின்ற இறைவனின் பெருங் கருணை குணத்தை நினைத்து பார்க்கும் வல்லமை பெற்றவர்கள் யார்?