பாடல் #1772

பாடல் #1772: ஏழாம் தந்திரம் – 6. ஞான லிங்கம் (உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்றுமாக இருக்கின்ற சதாசிவத்தை ஞான இலிங்கமாக உணர்வது)

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாஞ் சிவஞ் சத்தியாகுஞ்
சத்தி சிவமன்றித் தாபரம் வேறில்லைச்
சத்தி தானென்றுஞ் சமைந்துரு வாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவனறன விளையாடடுத தாரணி
சததி சிவமுமாஞ சிவஞ சததியாகுஞ
சததி சிவமனறித தாபரம வெறிலலைச
சததி தானெனறுஞ சமைநதுரு வாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவன் தன் விளையாட்டு தாரணி
சத்தி சிவமும் ஆம் சிவம் சத்தி ஆகும்
சத்தி சிவம் அன்றி தாபரம் வேறு இல்லை
சத்தி தான் ஒன்றும் சமைந்து உரு ஆகுமே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவன் (இறைவனும்) தன் (தங்கள்) விளையாட்டு (திருவிளையாட்டால்) தாரணி (அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள்)
சத்தி (இறைவியானவள்) சிவமும் (இறைவனுமாகவும்) ஆம் (இருக்கின்றாள்) சிவம் (இறைவனாவன்) சத்தி (இறைவியாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) அன்றி (இல்லாமல்) தாபரம் (இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள்) வேறு (வேறு) இல்லை (எதுவும் இல்லை)
சத்தி (இறைவி) தான் (தானே) ஒன்றும் (இறைவனோடு சேர்ந்து) சமைந்து (கலந்து) உரு (அனைத்து விதமான வடிவங்களாகவும்) ஆகுமே (ஆகுகின்றாள்).

விளக்கம்:

இறைவியும் இறைவனும் தங்கள் திருவிளையாட்டால் அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாக்குகின்றார்கள். இறைவியானவள் இறைவனுமாகவும் இருக்கின்றாள், இறைவனாவன் இறைவியாகவும் இருக்கின்றான். இறைவியும் இறைவனும் இல்லாமல் இந்த உலகத்தில் ஆதாரமாக பற்றிக் கொள்ள வேண்டி பொருள் வேறு எதுவும் இல்லை. இறைவி தானே இறைவனோடு சேர்ந்து கலந்து அனைத்து விதமான வடிவங்களாகவும் ஆகுகின்றாள். இதை பரிபூரணமாக உணர்ந்து கொள்வதே ஞான இலிங்கத்தின் தத்துவமாகும்.

பாடல் #1753

பாடல் #1753: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

அகார முதலா யனைத்துமாய் நிற்கு
முகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கு
மகார வுகார மிரண்டு மறியி
லகார வுகார மிலிங்கம தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகார முதலா யனைததுமாய நிறகு
முகார முதலா யுயிரபபெயது நிறகு
மகார வுகார மிரணடு மறியி
லகார வுகார மிலிஙகம தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகாரம் முதல் ஆய் அனைத்தும் ஆய் நிற்கும்
உகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும்
அகாரம் உகாரம் இரண்டும் அறியில்
அகாரம் உகாரம் இலிங்கம் அது ஆமே.

பதப்பொருள்:

அகாரம் (ஓங்கார தத்துவத்தில் ‘அ’கார எழுத்தின்) முதல் (முதல்) ஆய் (ஆகி) அனைத்தும் (அனைத்தும்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்பதுவும்)
உகாரம் (‘உ’கார எழுத்தின்) முதல் (முதல்) ஆய் (ஆகி) உயிர்ப்பு (அனைத்து உயிர்களின்) எய்து (இயக்கமாக) நிற்கும் (நிற்பதுவும்)
அகாரம் (‘அ’கார எழுத்தின் தத்துவம்) உகாரம் (‘உ’கார எழுத்தின் தத்துவம்) இரண்டும் (ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை உள்ளுக்குள் உணர்ந்து) அறியில் (அறிந்து கொண்டால்)
அகாரம் (அந்த ‘அ’கார எழுத்தும்) உகாரம் (‘உ’கார எழுத்துமாக தமக்குள் இருக்கின்ற) இலிங்கம் (பரம்பொருளின் இலிங்க வடிவம்) அது (அதுவே) ஆமே (ஆத்மாவாகும்).

விளக்கம்:

ஓங்கார தத்துவத்தில் ‘அ’கார எழுத்தின் முதலாகி அனைத்துமாக நிற்பதுவும், ‘உ’கார எழுத்தின் முதலாகி அனைத்து உயிர்களின் இயக்கமாக நிற்பதுவும், ‘அ’கார எழுத்தின் தத்துவம் ‘உ’கார எழுத்தின் தத்துவம் ஆகிய இரண்டுமாக இருப்பதுமாகிய பரம்பொருளை உள்ளுக்குள் உணர்ந்து அறிந்து கொண்டால், அந்த ‘அ’கார எழுத்தும் ‘உ’கார எழுத்துமாக தமக்குள் இருக்கின்ற பரம்பொருளின் இலிங்க வடிவமே ஆத்மாவாகும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1754

பாடல் #1754: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

ஆதார மாதெய்வ மாகின்ற விந்துவு
மேதாதி நாதமு மீதே விரிந்தன
வாதார விந்து வதிபீட நாதமே
போதா விலிங்கப் புணர்ச்சியது ஆமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆதார மாதெயவ மாகினற விநதுவு
மெதாதி நாதமு மீதெ விரிநதன
வாதார விநது வதிபீட நாதமெ
பொதா விலிஙகப புணரசசியது ஆமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆதார மா தெய்வம் ஆகின்ற விந்துவும்
மேத ஆதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதி பீட நாதமே
போதா இலிங்க புணர்ச்சி அது ஆமே.

பதப்பொருள்:

ஆதார (அனைத்திற்கும் ஆதாரமாகிய) மா (மாபெரும்) தெய்வம் (தெய்வமாக) ஆகின்ற (ஆகின்ற) விந்துவும் (விந்து சக்தியும்)
மேத (அதற்கு மேலாக) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) நாதமும் (நாத சக்தியும்) மீதே (ஒன்றன் மீது ஒன்றாகவே) விரிந்தன (அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றது)
ஆதார (இதில் ஆதாரமாகிய) விந்து (விந்து சக்திக்கு) அதி (மேன்மை தருகின்ற) பீட (பீடமே) நாதமே (நாத சக்தியாகும்)
போதா (எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகள்) இலிங்க (இலிங்க வடிவத்தில்) புணர்ச்சி (கலந்து) அது (இருக்கின்ற நிலையே) ஆமே (ஆத்ம இலிங்கமாகும்).

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதாரமாகிய மாபெரும் தெய்வமாக இருக்கின்ற விந்து (வெளிச்சம்) சக்தியும் அதற்கு மேலாக ஆதியிலிருந்தே இருக்கின்ற நாத (சத்தம்) சக்தியும் ஒன்றன் மீது ஒன்றாகவே அனைத்திலும் விரிந்து பரந்து இருக்கின்றது. இதில் ஆதாரமாகிய விந்து சக்திக்கு மேன்மை தருகின்ற பீடமே நாத சக்தியாகும். எப்போதுமே பிரிந்து போகாத இந்த இரண்டு சக்திகள் இலிங்க வடிவத்தில் கலந்து இருக்கின்ற நிலையே ஆத்ம இலிங்கமாகும்.

பாடல் #1755

பாடல் #1755: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

சத்தி சிவமா மிலிங்கமே தாபரஞ்
சத்தி சிவமா மிலிங்கமே சங்கமஞ்
சத்தி சிவமா மிலிங்கஞ் சதாசிவஞ்
சத்தி சிவமா குந்தற்பரந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததி சிவமா மிலிஙகமெ தாபரஞ
சததி சிவமா மிலிஙகமெ சஙகமஞ
சததி சிவமா மிலிஙகஞ சதாசிவஞ
சததி சிவமா குநதறபரந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவம் ஆகும் தற்பரம் தானே.

பதப்பொருள்:

சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கமே (ஆத்ம இலிங்கமே) தாபரம் (உடலாக இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கமே (ஆத்ம இலிங்கமே) சங்கமம் (உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆம் (சேர்ந்து இருக்கின்ற) இலிங்கம் (ஆத்ம இலிங்கமே) சதாசிவம் (அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது)
சத்தி (இறைவியும்) சிவம் (இறைவனும்) ஆகும் (ஆக சேர்ந்து) தற்பரம் (தாமாகவே இருக்கின்ற பரம்பொருள்) தானே (ஆகும்).

விளக்கம்:

பாடல் #1754 இல் உள்ளபடி எப்போதும் பிரியாமல் இருக்கின்ற இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கமே உடலாக இருக்கின்றது. இறைவனும் இறைவியும் சேர்ந்தே இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தில் உடல், இறைவனிடமிருந்து பிரிந்து வந்த ஆன்மா, இறைவன் ஆகிய மூன்றும் கலந்து இருக்கின்றது. இப்படி மூன்றும் கலந்து பிண்டத்தில் இருக்கின்ற ஆத்ம இலிங்கமே அண்ட சராசரங்களிலும் விரிந்து பரவி இருக்கின்ற பரம்பொருளாகவும் இருக்கின்றது. இப்படி அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கின்ற ஆத்ம இலிங்கமானது தானாகவே அனைத்துமாகவும் இருக்கின்ற பரம்பொருளாக இருக்கின்றது.

பாடல் #1756

பாடல் #1756: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

தானே ரெழுகின்ற சோதியைக் காணலாம்
பானே ரெழுகின்ற வைம்பதம் வந்திடிற்
பூனே ரெழுகின்ற பொற்கொடி தன்னுடன்
றானே யெழுந்த வகாரமது ஆமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ ரெழுகினற சொதியைக காணலாம
பானெ ரெழுகினற வைமபதம வநதிடிற
பூனெ ரெழுகினற பொறகொடி தனனுடன
றானெ யெழுநத வகாரமது ஆமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
பான் நேர் எழுகின்ற ஐம்பதம் வந்திடில்
பூ நேர் எழுகின்ற பொற் கொடி தன்னுடன்
தானே எழுந்த அகாரம் அது ஆமே.

பதப்பொருள்:

தான் (தமக்குள் இருக்கின்ற) நேர் (சுழுமுனை நாடியின் வழியே நேராக) எழுகின்ற (மூலாதாரத்திலிருந்து எழுந்து மேலே வருகின்ற) சோதியைக் (ஜோதியை) காணலாம் (காணலாம்)
பான் (அண்டம் எங்கும் பரவி) நேர் (அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சரிசமமாக) எழுகின்ற (எழுந்து இருக்கின்ற) ஐம்பதம் (இறைவனின் ஐந்து பூதங்கள்) வந்திடில் (தமக்குள்ளும் இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்து விட்டால்)
பூ (சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில்) நேர் (சுழுமுனை நாடிக்கு நேராக) எழுகின்ற (எழுகின்ற) பொற் (பொன் போல பிரகாசிக்கும்) கொடி (கொடியாக வீற்றிருக்கும்) தன்னுடன் (இறைவியுடன்)
தானே (தாமாகவே எப்போதும் சேர்ந்தே) எழுந்த (எழுந்தருளும் இறைவனை உணரலாம்) அகாரம் (ஓங்காரத்தில் ‘அ’கார எழுத்தாக இருக்கின்ற) அது (ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

தமக்குள் இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து நேராக எழுந்து மேலே வருகின்ற ஜோதியை பாடல் #1755 இல் உள்ளபடி தாமாகவே இருக்கின்ற பரம்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் காணலாம். அப்போது அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் அதனதன் தன்மைக்கு ஏற்ப சரிசமமாக எழுந்து இருக்கின்ற இறைவனின் ஐந்து பூதங்கள் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மற்றும் நிலம்) தமக்குள்ளும் இருக்கின்றது என்கின்ற உணர்வு வந்து விட்டால், சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் சுழுமுனை நாடிக்கு நேராக எழுகின்ற பொன் போல பிரகாசிக்கும் கொடியாக வீற்றிருக்கும் இறைவியுடன் தாமாகவே எப்போதும் சேர்ந்தே எழுந்தருளும் இறைவனை உணரலாம். ஓங்காரத்தில் ‘அ’கார எழுத்தாக இருக்கின்ற ஆத்ம இலிங்கத்தின் தத்துவம் இதுவே ஆகும்.

பாடல் #1757

பாடல் #1757: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

விந்துவு நாதமு மேவு மிலிங்கமாம்
விந்து வதேபீடம் நாத மிலிங்கமா
மந்த விரண்டையு மாதார தெய்வமாய்
வந்த கருவைந்துஞ் செய்யுமவை யைந்தே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விநதுவு நாதமு மெவு மிலிஙகமாம
விநது வதெபீடம நாத மிலிஙகமா
மநத விரணடையு மாதார தெயவமாய
வநத கருவைநதுஞ செயயுமவை யைநதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம்
விந்து அதே பீடம் நாதம் இலிங்கம் ஆம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய்
வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே.

பதப்பொருள்:

விந்துவும் (வெளிச்சமும்) நாதமும் (சத்தமும்) மேவும் (சரிசமமாக பொருந்தி இருப்பதே) இலிங்கம் (ஆத்ம இலிங்கம்) ஆம் (ஆகும்)

விந்து (வெளிச்சமானது) அதே (அந்த இலிங்கத்தின்) பீடம் (பீடமாகவும்) நாதம் (சத்தமானது) இலிங்கம் (இலிங்கத்தின் பாணமாகவும்) ஆம் (இருக்கின்றது)

அந்த (அந்த வெளிச்சம் சத்தம் ஆகிய) இரண்டையும் (இரண்டையும்) ஆதார (ஆதாரமாகக் கொண்டு) தெய்வம் (வீற்றிருக்கின்ற தெய்வம் [தொழில் காரணர்கள்]) ஆய் (ஆக)

வந்த (ஆத்ம இலிங்கத்தில் வந்த) கரு (கருவாக [தொழில் காரணம்]) ஐந்தும் (பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும்) செய்யும் (தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கான தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) அவை (ஆகிய) ஐந்தே (ஐந்து விதமான தொழில்களையும் புரிகின்றனர்).

விளக்கம்:

விந்துவும் (வெளிச்சம்) நாதமும் (சத்தம்) சரிசமமாக பொருந்தி இருப்பதே ஆத்ம இலிங்கம் ஆகும். வெளிச்சமானது அந்த இலிங்கத்தின் பீடமாகவும், சத்தமானது இலிங்கத்தின் பாணமாகவும் இருக்கின்றது. அந்த வெளிச்சம் சத்தம் ஆகிய இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு வீற்றிருக்கின்ற தெய்வங்களாக (தொழில் காரணர்கள்) ஆத்ம இலிங்கத்தில் வந்த கருவாக (தொழில் காரணம்) பிரம்மா, திருமால், உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய ஐந்து தெய்வங்களும் தமக்குள்ளிருந்தே ஒவ்வொருவருக்கான தொழில்களாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து விதமான தொழில்களையும் புரிகின்றனர்.

பாடல் #1758

பாடல் #1758: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

சத்திநற் பீடந் தகுநல்ல வாத்துமாச்
சத்திநற் கண்டந் தகுவித்தை தானாகுஞ்
சத்திநல் லிங்கந் தகுஞ்சிவ தத்துவஞ்
சத்திநல் லாத்துமாச் சதாசிவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சததிநற பீடந தகுநலல வாறறுமாச
சததிநற கணடந தகுவிததை தானாகுஞ
சததிநல லிஙகந தகுஞசிவ தததுவஞ
சததிநல லாறறுமாச சதாசிவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தி நல் பீடம் தகு நல்ல ஆத்துமா
சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும்
சத்தி நல் இலிங்கம் தகும் சிவ தத்துவம்
சத்தி நல் ஆத்துமா சதா சிவம் தானே.

பதப்பொருள்:

சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) பீடம் (ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில்) தகு (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) நல்ல (நன்மையைக் கொடுத்து) ஆத்துமா (செயல் படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) கண்டம் (ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில்) தகு (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) வித்தை (செயல் படுகின்ற ஞான தத்துவமாக) தான் (தானே) ஆகும் (ஆகின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையான) இலிங்கம் (ஆத்ம இலிங்கத்தில்) தகும் (சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி) சிவ (செயல் படுகின்ற சிவ) தத்துவம் (தத்துவமாக இருக்கின்றது)
சத்தி (ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது) நல் (நன்மையை கொடுக்கின்ற) ஆத்துமா (ஆத்ம இலிங்கமே) சதா (அனைத்திற்கும மேலான) சிவம் (பரம்பொருளாக) தானே (தானே இருக்கின்றது).

விளக்கம்:

பாடல் #1757 இல் உள்ளபடி ஆத்ம இலிங்கத்திற்கு உள்ளிருந்து ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையான ஆத்ம இலிங்கத்தின் பீடத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி நன்மையைக் கொடுத்து செயல் படுகின்ற ஆத்ம தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தின் பாணத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற ஞான தத்துவமாக இருக்கின்றது. ஆத்ம இலிங்கத்தில் சாதகரின் பக்குவத்துக்கு தகுந்த படி செயல் படுகின்ற சிவ தத்துவமாக இருக்கின்றது. இப்படி ஐந்து தொழில்களையும் புரிகின்ற இறை சக்தியானது நன்மையை கொடுக்கின்ற ஆத்ம இலிங்கமே அனைத்திற்கும மேலான பரம்பொருளாக தானே இருக்கின்றது.

பாடல் #1759

பாடல் #1759: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்கை
மனம்புகுந் தின்பம் பொழிகின்ற போது
நலம்புகுந் தென்னோடு நாதனை நாமே
நிலம்புகுந் தாதியுமேல் கொண்ட வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனமபுகுந தெனனுயிர மனனிய வாழகை
மனமபுகுந தினபம பொழிகினற பொது
நலமபுகுந தெனனொடு நாதனை நாமெ
நிலமபுகுந தாதியுமெல கொணட வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்கை
மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது
நலம் புகுந்து என்னோடு நாதனை நாமே
நிலம் புகுந்த ஆதியும் மேல் கொண்ட ஆறே.

பதப்பொருள்:

மனம் (அனைத்திற்கும் மேலான பரம்பொருளாக தமது ஆத்ம இலிங்கமே இருக்கின்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்களின் மனதிற்குள்) புகுந்து (புகுந்து) என் (அவர்களின்) உயிர் (உயிரோடு) மன்னிய (பொருந்தி) வாழ்கை (வாழ்க்கையில் எப்போதும் உடன் இருந்து)
மனம் (அவர்களின் மனதிற்குள்) புகுந்து (புகுந்து) இன்பம் (அனைத்து விதமான இன்பங்களையும்) பொழிகின்ற (வாரி வழங்கும்) போது (போது)
நலம் (நலங்களெல்லாம்) புகுந்து (அவர்களுக்குள் புகுந்து) என்னோடு (அவர்களோடு) நாதனை (அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனோடு) நாமே (ஒன்றாக கலந்திருந்து)
நிலம் (உலகத்தில்) புகுந்த (புகுந்து வீற்றிருக்கும்) ஆதியும் (ஆதி பரம்பொருள்) மேல் (அவர்களின் ஆன்மாவை மேன்மை படுத்தி) கொண்ட (ஆட்கொண்டு அருளி) ஆறே (நன்மையின் வழியில் நடத்துகின்றான்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான பரம்பொருளாக தமது ஆத்ம இலிங்கமே இருக்கின்ற தத்துவத்தை உணர்ந்து கொண்டவர்களின் மனதிற்குள் இறைவன் புகுந்து, அவர்களின் உயிரோடு பொருந்தி, வாழ்க்கையில் எப்போதும் உடன் இருந்து, அனைத்து விதமான இன்பங்களையும் வாரி வழங்கும் போது, நலங்களெல்லாம் அவர்களுக்குள் புகுந்து, அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனோடு ஒன்றாக கலந்திருந்து, உலகத்தில் புகுந்து வீற்றிருக்கும் ஆதி பரம்பொருள் அவர்களின் ஆன்மாவை மேன்மை படுத்தி ஆட்கொண்டு அருளி நன்மையின் வழியில் நடத்துகின்றான்.

பாடல் #1760

பாடல் #1760: ஏழாம் தந்திரம் – 5. ஆத்ம லிங்கம் (அருவமாக இருக்கின்ற ஆத்மாவின் இலிங்க வடிவம்)

பராபர னெந்தை பனிமதி சூடித்
தராபரன் தன்னடி யார்மனங் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னு
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பராபர னெநதை பனிமதி சூடிற
றராபரன றனனடி யாரமனங கோயில
சிராபரன றெவரகள செனனியில மனனு
மராமரன மனனி மனததுறைந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பராபரன் எந்தை பனி மதி சூடி
தராபரன் தன் அடியார் மனம் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
அராமரன் மன்னி மனத்து உறைந்தானே.

பதப்பொருள்:

பராபரன் (அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும்) எந்தை (எமது தந்தையானவனும்) பனி (தன் தலையில் குளிர்ச்சியான) மதி (நிலவை) சூடி (சூடிக் கொண்டு இருப்பவனும்)
தராபரன் (உலகங்களுக்கு எல்லாம் தலைவனாவனும்) தன் (தமது) அடியார் (அடியார்களின்) மனம் (மனதையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருப்பவனும்)
சிராபரன் (தேவர்களுக்கும் மேலான தேவனும்) தேவர்கள் (விண்ணுலக தேவர்களின்) சென்னியில் (தலையில்) மன்னும் (நிலை பெற்று வீற்றிருப்பவனும்)
அராமரன் (உருவமில்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன்) மன்னி (எமக்குள் நிலை பெற்று) மனத்து (எமது மனதிற்குள்) உறைந்தானே (எப்போதும் வீற்றிருந்தான்).

விளக்கம்:

அனைத்திற்கும் மேலான பரம்பொருளானவனும், எமது தந்தையானவனும், தன் தலையில் குளிர்ச்சியான நிலவை சூடிக் கொண்டு இருப்பவனும், உலகங்களுக்கு எல்லாம் தலைவனாவனும், தமது அடியார்களின் மனதையே தமக்கு விருப்பமான கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருப்பவனும், தேவர்களுக்கும் மேலான தேவனும், விண்ணுலக தேவர்களின் தலையில் நிலை பெற்று வீற்றிருப்பவனும், உருவமில்லாமல் இருக்கின்ற பரம்பொருளுமாகிய இறைவன் எமக்குள் நிலை பெற்று எமது மனதிற்குள் எப்போதும் வீற்றிருந்தான்.

பாடல் #1761

பாடல் #1761: ஏழாம் தந்திரம் – 5. ஆத்மலிங்கம்

பிரானல்ல னாமெனிற் பேதை உலகர்
குரானென்று மென்மனங் கோயில் கொண்டீச
னராநின்ற செஞ்சடை யங்கியு நீரும்
பொராநின் றவர்செய்யப் புண்ணியன் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிரானலல னாமெனிற பெதை யுலகர
குரானெனறு மெனமனங கொயில கொணடீச
னராநினற செஞசடை யஙகியு நீரும
பொராநின றவரசெயயப புணணியன றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகர்
குரான் என்றும் என் மனம் கோயில் கொண்டு ஈசன்
அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும்
பொரா நின்று அவர் செய்ய புண்ணியன் தானே.

பதப்பொருள்:

பிரான் (தலைவனாக இருந்து செயல் பட வைக்கின்ற இறைவன்) அல்ல (இல்லை) நாம் (நமக்குள்) எனில் (என்று சொல்லுபவர்கள்) பேதை (அறிவில்லாத) உலகர் (உலகத்தவர் ஆவார்கள்)
குரான் (உள்ளுக்குள் இருந்து ஓதுபவனாக) என்றும் (எப்போதும்) என் (எனது) மனம் (மனதையே) கோயில் (கோயிலாக) கொண்டு (கொண்டு நிற்கின்ற) ஈசன் (இறைவன்)
அரா (பாம்பு) நின்ற (அணிந்த) செம் (செழுமையான) சடை (சடையோடு) அங்கியும் (நெருப்பையும்) நீரும் (நீரையும் ஏந்திக் கொண்டு)
பொரா (தனக்கு ஒப்பு உவமை எதுவும் இல்லாதவனாக) நின்று (தனித்து நின்று) அவர் (அவன்) செய்ய (எம்மை நன்மைகளை செய்ய வைத்து) புண்ணியன் (அதன் புண்ணியங்களை) தானே (தானே ஏற்றுக் கொள்கின்றான்).

விளக்கம்:

தனக்குள் தலைவனாக இருந்து செயல் பட வைக்கின்றவன் இறைவன் இல்லை என்று உலகத்தவர்கள் யாராவது சொன்னால் அவர்கள் அறிவில்லாதவர்களே. ஏன் என்றால் அனைவருக்கும் உள்ளுக்குள் இருந்து ஓதுபவனாகிய இறைவன் அடியவரது மனதையே கோயிலாக கொண்டு தலையில் பாம்பை அணிந்த சடையுடன் கையில் நெருப்பும் நீரும் ஏந்திக் கொண்டு நிற்கின்றான். அவன் அடியவரை நன்மைகள் செய்ய வைத்து அதன் புண்ணியங்களை தானே ஏற்றுக் கொள்கின்றான்.