பாடல் #1792: ஏழாம் தந்திரம் – 9. திருவருள் வைப்பு (இறைவன் கொடுத்த அருளை காப்பாற்றுதல்)
பொருள் பேதமீச னிரவும் பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந் தவமும்
பொருளது வுண்ணின்ற போகம தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பொருள பெதமீச னிரவும பகலு
முருவது வாவ துடலு முயிரு
மருளது வாவ தறமுந தவமும
பொருளது வுணணினற பொகம தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பொருள் பேதம் ஈசன் இரவும் பகலும்
உரு அது ஆவது உடலும் உயிரும்
அருள் அது ஆவது அறமும் தவமும்
பொருள் அது உள் நின்ற போகம் அது ஆமே.
பதப்பொருள்:
பொருள் (மாயையாகிய உலகத்தில் பொருளாக) பேதம் (பிரித்து அறிந்து கொள்ள) ஈசன் (இறைவன் அருளியது) இரவும் (இரவும்) பகலும் (பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும்)
உரு (அதை அனுபவிக்கின்ற உருவம்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) உடலும் (இறைவன் அருளிய உடலும்) உயிரும் (அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும்)
அருள் (இறைவன் கொடுக்கின்ற திருவருள்) அது (அது) ஆவது (ஆக இருப்பது) அறமும் (அடியவர்கள் கடைபிடிக்கின்ற தர்மங்களும்) தவமும் (மேற்கொள்ளுகின்ற தவங்களும் ஆகும்)
பொருள் (உண்மைப் பொருள்) அது (அது ஆக இருப்பது) உள் (அடியவருக்குள்) நின்ற (இறையருளாக நிற்கின்ற) போகம் (பேரின்பம்) அது (அதுவே) ஆமே (ஆகும்).
விளக்கம்:
மாயையாகிய உலகத்தில் பொருளாக பிரித்து அறிந்து கொள்ள இறைவன் அருளியது இரவும் பகலுமாகிய இரண்டு நிலைகளே ஆகும். அதை வினைகளுக்கு ஏற்ப அனுபவிக்கின்ற உருவமாக இருப்பது இறைவன் அருளிய உடலும் அதற்குள் இருக்கின்ற உயிரும் ஆகும். அப்படி வினைகளை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும் இறையருளால் உள்ளுக்குள் உணர்த்தப்பட்ட தர்மத்தை முறைப்படி கடை பிடிக்கின்றவர்களுக்கு அந்த தர்மத்தின் பலனும் அவர்கள் மேற்கொண்ட தவத்தின் பலனுமே இறைவன் கொடுக்கின்ற திருவருளாக இருக்கின்றது. அந்த திருவருளே உண்மைப் பொருளாக அடியவருக்குள் நிற்கின்ற பேரின்பம் ஆகும்.