பாடல் #1273

பாடல் #1273: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்
கண்டிடு நாதமுந் தன்மே லெழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன லொத்தபின்
கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

விளக்கம்:

பாடல் #1272 இல் உள்ளபடி காணும் படி நட்சத்திரங்களாக மாறி இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படுகின்ற வெளிச்சமானது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் போது அதன் மேலிருந்து வெளிப்படுகின்ற சத்தமும் அதனோடு தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும். அதனுடன் சாதகருக்குள்ளிருக்கும் அக்னியின் சுடரானது மிகவும் வளர்ந்து கொழுந்து விட்டுப் பெரும் நெருப்பாக நீண்டு ஒன்றாகச் சேர்ந்த பிறகு அதுவே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக ஆகிவிடும்.

பாடல் #1274

பாடல் #1274: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

காரொளி யண்டம் பொதிந்த துலகெங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி யொக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி யொன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

விளக்கம்:

பாடல் #1273 இல் உள்ளபடி அண்ட சராசரங்களில் இருக்கின்ற அடர்ந்த இருளுக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும் பேரொளியாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்டத்தில் பொதிந்து இருந்து உலகங்கள் அனைத்திலும் இருக்கின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் செயல்களுக்கு பயனளிக்கும் ஒளியாக வளர்ந்து கிடக்கிறது. அந்த ஏரொளிச் சக்கரத்தின் ஒளியானது உலகத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களோடும் சரிசமாக ஒன்றாகச் சேர்ந்து முழுமைப் பெற்று ஐந்து பூதங்களால் ஆகிய உலகத்தோடே நிற்கின்றது.

கருத்து: ஏரொளிச் சக்கரத்திற்கு தொடர்ந்து சக்தியளிக்கும் சாதகர் ஐந்து பூதங்களின் செயல்களுக்கு பயனளிக்கும் ஒளியாக வளர்வது மட்டுமின்றி ஐந்து பூதங்களாகவே மாறி விடுகிறார் என்றும் அவற்றை உலக நன்மைக்கு ஏற்றார் போல் இயக்கவும் செய்கிறார் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

பாடல் #1275

பாடல் #1275: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

நின்றது வண்டமு நீளும் புவியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்
நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

விளக்கம்:

பாடல் #1274 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி உலகத்திலுள்ள ஐந்து பூதங்களோடும் ஒளியாக நிற்கின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து அதிலுள்ள அனைத்து உலகங்களுக்கும் பரவி நிற்கின்றது. இந்த ஏரொளிச் சக்கரம் அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி நின்று அனைத்தையும் தாங்கி நிற்பது எப்படி என்பதை ஆராய்ந்து பார்த்தால் அது சாதகருக்குள்ளிருக்கும் மூலாதாரத்திலிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்தை சார்ந்தே இருக்கின்றது. இப்படி அண்ட சராசரங்கள் முழுவதும் தாங்கி நிற்கின்ற சக்தியைக் கொடுப்பது சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சமே ஆகும்.

குறிப்பு: இறை சக்தியின் மூலம் நேரடியாக வராமல் சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து மட்டுமே வெளிச்சமாகவும் சத்தமாகவும் வெளிப்படுவதால் ஏரொளிச் சக்கரத்தை இங்கே மூல மலம் என்று குறிப்பிட்டு அருளுகின்றார்.

பாடல் #1276

பாடல் #1276: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விந்துவு நாதமு மொக்க விழுந்திடில்
விந்துவு நாதமு மொக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாத மெழுந்திடில்
விந்துவை யெண்மடி கொண்டது வீசமே.

விளக்கம்:

பாடல் #1275 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்து அண்ட சராசரங்கள் முழுவதும் பரவி அங்கிருந்து வெளிச்சமும் சத்தமும் ஒரே அளவில் கீழுள்ள உலகங்களுக்கு விழுந்து நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகத்திலுள்ள உயிர்களில் இறைவனை அடைய முயற்சி செய்யும் ஆன்மாக்களுக்கு பயன் படும்படி வெளிச்சம் குறைந்து அதை விட எட்டு மடங்கு அதிகமாக சத்தமாக வெளிப்படும் போது அது மந்திர ஒலியாக இருக்கின்றது.

கருத்து: சாதகருக்குள்ளிருந்து வெளிப்பட்டு வரும் ஏரொளிச் சக்கரமானது அண்டங்கள் முழுவதும் விரிந்து பரவி அங்கிருந்து அனைத்து உலகங்களுக்கும் நன்மையைக் கொடுக்கும் மூல விதையாக இருக்கின்றது. உலகங்களில் இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் மேலும் மேன்மையடைய இந்த ஏரொளிச் சக்கரம் வெளிச்சத்தைக் குறைந்து சத்தத்தை அதிகமாக்கி மந்திர ஒலியாகக் கொடுக்கின்றது.

பாடல் #1277

பாடல் #1277: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வீச மிரண்டுள நாதத் தெழுவன
வீசமு மொன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே.

விளக்கம்:

பாடல் #1276 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்படும் சத்தத்திலிருந்து வெளிப்படும் மந்திர ஒலிகள் இரண்டு வகைகளாக இருக்கின்றது. இவை இரண்டுமே சத்தத்திலிருந்து வெளிப்பட்டு மேல் நோக்கி ஒன்றின் மேல் ஒன்றாக விரைவாக எழுந்து கொண்டே இருக்கின்றது. இந்த இரண்டு விதமான மந்திர ஒலிகளும் ஏரொளிச் சக்கரத்தின் சத்தத்துடன் சரிசமமாகச் சேர்ந்து ஒன்றாக வெளிப்பட்ட பிறகு ஏரொளிச் சக்கரத்திலிருந்து வெளிப்பட்டு அண்ட சராசரங்கள் முழுவதும் விரிந்து பரவி இருக்கின்ற வெளிச்சத்தோடும் சரிசமாகப் விரிந்து பரவுவதை பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் காணலாம்.

பாடல் #1278

பாடல் #1278: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்
விரிந்தது வுட்கட்ட மெட்டெட்டு மாகில்
விரிந்தது விந்து விரையது வாமே.

விளக்கம்:

பாடல் #1277 இல் உள்ளபடி அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவுகின்ற வெளிச்சம் அதிகமாகும் போது மந்திர ஒலிகள் அளவில் குறைந்து மறைந்து விடும். அதன் பிறகு வெளிச்சமும் சத்தமும் அளவில் சரிசமாக விரிந்து பரவும் போது அதன் உள் அமைப்பில் ஒன்றோடு ஒன்று அறுபத்து நான்கு மடங்கு அளவில் இருக்கும்படி ஆகி விட்டால் அதுவே பாடல் #1276 இல் உள்ளபடி உலகத்திலுள்ள இறைவனை அடைய விரும்பி சாதகம் செய்யும் உயிர்கள் அனைத்திற்கும் முக்திக்கு வழிகாட்டும் வித்தாக ஆகிவிடும்.

பாடல் #1279

பாடல் #1279: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரையது விந்து விளைந்தன வெல்லாம்
விரையது விந்து விளைந்த வுயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் றானே.

விளக்கம்:

பாடல் #1278 இல் உள்ளபடி முக்திக்கு வழிகாட்டும் வித்தாக இருக்கின்ற ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சத்திலிருந்தே அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்தும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே அனைத்து உயிர்களும் உருவாகி இருக்கின்றன. அந்த வெளிச்சத்திலிருந்தே இந்த உலகங்களும் உருவாகி இருக்கின்றன. ஏரொளிச் சக்கரத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்ற சாதகர்களும் இந்த மூல விதையின் வெளிச்சத்திலிருந்தே உருவாகி இருக்கின்றார்கள்.

குறிப்பு: அனைத்தையும் உருவாக்குகின்ற மூல விதையாக சாதகருக்குள்ளிருந்து வெளிப்படும் ஏரொளிச் சக்கரத்தின் வெளிச்சம் இருந்தாலும் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது அசையா சக்தியான இறைவனே ஆகும்.

பாடல் #1280

பாடல் #1280: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விளைந்த வெழுத்தது விந்துவும் நாதம்
விளைந்த வெழுத்தது சக்கர மாக
விளைந்த வெழுத்தவை மெய்யினு ணிற்கும்
விளைந்த வெழுத்தவை மந்திர மாமே.

விளக்கம்:

பாடல் #1279 இல் உள்ளபடி அனைத்தையும் உருவாக்கி இருக்கின்ற மூல விதையாகிய எழுத்துக்களே மந்திர வெளிச்சமாகவும் (எழுத்து வடிவம்) மந்திர சத்தமாகவும் (ஒலி வடிவம்) சக்கரமாகவும் (எழுத்தும் சத்தமும் சேர்ந்த சக்கர வடிவம்) இருக்கின்றது. இதுவே தர்மத்தின் வழி செயல்படும் உலகத்தின் அனைத்து செயல்களுக்கும் மூல காரணமாக நின்று செயலாற்றுகின்றது. இந்த மூல விதையாகிய எழுத்துக்களே அனைத்து மந்திரங்களாகவும் இருக்கின்றது.

பாடல் #1281

பாடல் #1281: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மந்திர சக்கர மானவை சொல்லிடிற்
தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமா
தந்திரத் துள்ளு மிரேகையி லொன்றில்லை
பந்தமு மாகும் பிரணவ முன்னிடே.

விளக்கம்:

பாடல் #1280 இல் உள்ளபடி மூல விதையாக இருக்கின்ற எழுத்துக்களே மந்திரங்களாகவும் சக்கரங்களாகவும் ஆகின்ற விதத்தை சொல்லப் போனால் ஏரொளிச் சக்கரத்தின் மூலம் வெளிச்சமும் சத்தமும் வெளிப்பட்டு அதுவே மூல விதையாக இருக்கின்ற வழி வகைக்கு உள்ளே இருக்கின்ற எழுத்துக்களின் பலவிதமான வெளிச்ச வடிவங்களில் ஒன்றில் இருந்து எரிகின்ற நெருப்பு மயமாக ஒரு வட்டம் இருக்கின்றது. இந்த வட்டத்திற்கு உள்ளே இருக்கின்ற வடிவத்திற்கு ஏற்ற கோடுகளில் வெளிச்சத்தையும் சத்தத்தையும் ஒன்றாக பிணைக்கின்ற சக்திகள் ஒன்றும் இல்லை. ஓமெனும் பிரணவத்தின் சக்தியே வெளிச்சத்திற்கும் சத்தத்திற்கும் உள்ளிருக்கும் தியானப் பொருளாக இருந்து இரண்டையும் பிணைத்து வைத்திருக்கின்றது.

பாடல் #1282

பாடல் #1282: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

உன்னிட்ட வட்டத்தி லொத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

விளக்கம்:

பாடல் #1281 இல் உள்ளபடி ஓமெனும் பிரணவமே தியானப் பொருளாக உள்ளிருந்து பிணைத்திருக்கும் வெளிச்சத்திற்கும் சத்தத்திற்கும் உள்ளிருக்கும் எரிகின்ற நெருப்பு வட்டத்தோடு ஒன்றாகச் சேர்ந்து எழுகின்ற மந்திரங்கள் நிலைத்து நிற்பதனால் சக்கர வடிவத்திற்கு ஏற்ப பின்னிப் பிணைந்து இருக்கின்ற கோடுகள் நிலைத்து நிற்காமல் தாமாகவே மறைந்து போய்விடும். நெருப்பு வட்டத்திலிருந்து தானாகவே வெளிப்பட்டு எழுகின்ற மந்திரம் தளர்ச்சி இல்லாமல் சக்கரத்திற்குப் பின்னால் நிலையாக நிற்கும். அப்போது தானாகவே முறைப்படுத்திக் கொண்டு நிலையாக நிற்கின்ற அந்த மந்திரத்தை ஒளி வடிவமாக தரிசிக்க முடியும்.