பாடல் #1294

பாடல் #1294: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

கையவை யாறுங் கருத்துற நோக்கிடு
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்குமெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே.

விளக்கம்:

பாடல் #1293 இல் உள்ளபடி சாதகரிடம் சூட்சுமமாக இருக்கின்ற ஆறு கைகளிலும் ஏந்தி இருக்கின்ற பைரவர் கொடுத்து அருளிய ஆறு ஆயுதங்களையும் எண்ணத்தில் வைத்து ஆராய்ந்து பார்த்தால் சாதகரின் உடலுக்குள்ளேயே வந்து செம்மையான அருள் வடிவமாக வீற்றிருக்கும் பைரவரை அறிந்து கொள்ளலாம். அதன்படி சாதகருக்குள் வந்து வீற்றிருக்கின்ற பைரவர் தமது தூய்மையான அருளை சாதகருக்குக் கொடுத்து அவருக்குள் இருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களையும் நீக்கி பேருண்மையாக விளங்குகின்ற பரம்பொருளை உணரும்படி அருள்வார். அதன் பிறகு பொய்யான மாயை அகங்காரம் ஆகியவற்றை விட்டுவிட்டு சாதகர்கள் பைரவரை பூஜித்து வழிபாடு செய்வார்கள்.

பாடல் #1295

பாடல் #1295: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

பூசனை செய்யப் பொருந்தியோ ராயிரம்
பூசனை செய்ய மதுவுட னாடுமால்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே.

விளக்கம்:

பாடல் #1294 இல் உள்ளபடி பைரவரை பூஜித்து வழிபடுவதற்கு அவருக்கு ஏற்ற மந்திரத்தை ஒரு ஆயிரம் முறை மானசீகமாக உச்சரிக்க வேண்டும். தூய்மையான தேனாலும் நீராலும் அபிஷேகம் செய்ய வேண்டும். சந்தனம் ஜவ்வாது புனுகு ஆகிய நறுமணம் வீசும் பொருட்களை பூச வேண்டும். நெய் தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறெல்லாம் செய்து வழிபட்ட பிறகு திருநீறு எடுத்து பூசிக் கொள்ள வேண்டும்.

பாடல் #1296

பாடல் #1296: நான்காம் தந்திரம் – 10. வயிரவச் சக்கரம் (மானசீக சக்கர அமைப்பில் பைரவர் வழிபாடு)

வேண்டிய வாறு கலகமு மாயிடும்
வேண்டிய வாறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகுங் கருத்தே.

விளக்கம்:

பாடல் #1295 இல் உள்ள முறைகளின் படி பைரவரை பூஜித்து வழிபாட்டின் மூலமாகவும் பாடல் #1293 இல் உள்ளபடி ஏற்கனவே பெற்ற ஆறு விதமான அருள்களின் மூலமாகவும் சாதகர்கள் தம்மை நாடி வருகின்ற தீமைகளையும் நன்மைகளாக மாற்றி விட முடியும். அந்த ஆறு விதமான அருள்களுக்கு உள்ளிருக்கும் பேருண்மையான பரம்பொருளையும் தமக்குள் பெற்று உணர்ந்த பிறகு சாதகர்களுக்குள்ளிருந்து பரம்பொருள் கொடுக்கின்ற வழியைப் பின்பற்றி அவர்கள் சாதகம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் அவர்கள் என்ன நினைத்தாலும் அது அப்படியே நடக்கும்.

பாடல் #1256

பாடல் #1256: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

வன்னி யெழுத்தவை மாபல முள்ளன
வன்னி யெழுத்தவை வானுற வோங்கின
வன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்
வன்னி யெழுத்திடு மாறது சொல்லுமே.

விளக்கம்:

பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன. இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன. இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.

கருத்து:

ஏரொளிச் சக்கரம் ஒளி ஒலி வடிவத்தில் இருக்கின்ற எழுத்துக்களை சரியாக அமைக்கும் வழி முறையை உள்ளுக்குள் இருந்து அறிவுறுத்தும். அந்த வழி முறைகளை சரியாக கடைபிடிக்கும் சாதகர்கள் இறைவனின் பேரொளியோடு இணைந்து விடுவார்கள்.

பாடல் #1257

பாடல் #1257: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

சொல்லிய விந்துவு மீராறு நாதமாஞ்
சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவன
சொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருச்
சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

விளக்கம்:

பாடல் #1256 இல் உள்ளபடி உள்ளுக்குள் இருந்து சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி மேலே ஏறி வந்த வெளிச்சத்திலிருந்து வெளிப்படும் சத்தங்கள் பன்னிரண்டு வகையான ஒலிகளாக இருக்கின்றது. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளும் சாதகருக்குள் வீற்றிருக்கும் தலைவனாகிய இறைவனின் அம்சமாகவே இருக்கின்றன. இந்த பன்னிரண்டு வகையான ஒலிகளையும் அசபையாக (உச்சரிக்காமல்) மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் அவை பலவிதமாக பரிணமித்து மொத்தம் நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களாக வெளிப்படும். இந்த நூற்றி நாற்பத்து நான்கு எழுத்துக்களின் வரிவடிவங்களும் ஒன்று சேர்ந்து வெளிப்படும் போது மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும்.

பாடல் #1258

பாடல் #1258: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமு மோங்கு மெழுத்துடன்
மேல்வரும் அப்பதி யவ்வெழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

விளக்கம்:

பாடல் #1257 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் மூலாதாரத்திலிருந்து ஏரொளிச் சக்கரம் மேல் நோக்கி ஏறி வரும் போது அதனுள் அடங்கியிருக்கும் எழுத்தின் வடிவமாக வெளிச்சமும் பீஜமாக சத்தமும் வெளிப்படும் போது அந்த எழுத்துடன் சாதகருக்குள் இருக்கும் இறைவனும் சேர்ந்து வந்தால் வெளிப்படும் ஏரொளிச் சக்கரமானது உலகமாகவே விளங்கும்.

பாடல் #1259

பாடல் #1259: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடு மப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே.

விளக்கம்:

பாடல் #1258 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகமாகவே விளங்குகின்ற ஏரொளிச் சக்கரமானது அண்ட சராசரங்களில் இருக்கும் அனைத்து உலகங்களாகவும் ஆகி விடுகின்றது. அந்த சக்கரத்தோடு வெளிச்சமும் சத்தமும் இறை சக்தியும் எழுத்து வடிவமும் ஒன்றாகச் சேரும் பொழுது அதிலிருந்து வெளிப்படும் எழுத்தானது பல விதமான உலகங்களாக விரிந்து சிந்திக்க முடியாத அளவு பல யோசனை தூரத்திற்கு பரவுகின்றது.

பாடல் #1260:

பாடல் #1260: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

விரிந்த வெழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த வெழுத்தது சக்கர மாக
விரிந்த வெழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த வெழுத்தினி லப்புற மப்பே.

விளக்கம்:

பாடல் #1259 இல் உள்ளபடி உலகங்கள் அனைத்திற்கும் விரிந்து பரவிய எழுத்தானது வெளிச்சமாகவும் சத்தமாகவும் இருக்கின்றது. சாதகருக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து உலகங்கள் முழுவதும் விரிந்து பரவிய அந்த எழுத்தே ஏரொளிச் சக்கரமாகவும் பிறகு பஞ்ச பூதங்களில் முதலில் நிலத்தின் தன்மையையும் அதன் பிறகு அதிலிருந்து நீரின் தன்மையையும் வெளிப்படுத்துகின்றது.

பாடல் #1261

பாடல் #1261: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

அப்பது வாக விரிந்தது சக்கரம்
அப்பினி லப்புற மவ்வன லாயிடும்
அப்பினி லப்புற மாருத மாயெழ
அப்பினி லப்புற மாகாச மாமே.

விளக்கம்:

பாடல் #1260 இல் உள்ளபடி வெளிப்பட்ட நீரின் தன்மையாகவே உலகங்களுக்கு ஏரொளிச் சக்கரமாக விரிகின்றது. அதன்பிறகு அந்த நீரின் தன்மையிலிருந்து நெருப்பின் தன்மையாகவும் பிறகு காற்றின் தன்மையாகவும் பிறகு அதுவே ஆகாசத்தின் தன்மையாகவும் மாறுகின்றது.

பாடல் #1262

பாடல் #1262: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)

ஆகாச வக்கர மாவது சொல்லிடில்
ஆகாச வக்கரத் துள்ளே யெழுத்தவை
ஆகாச வவ்வெழுத் தாகிச் சிவானந்தம்
ஆகாச வக்கர மாவ தறிமினே.

விளக்கம்:

பாடல் #1261 இல் உள்ளபடி ஆகாசத்தின் தன்மையாக மாறிய எழுத்தின் வடிவமாக ஏரொளிச் சக்கரம் மாறுவது எப்படி என்று சொல்லப் போனால் பாடல் #1257 இல் உள்ளபடி ஏரொளிச் சக்கரத்தின் உள்ளே இருக்கின்ற நூற்று நாற்பத்து நான்கு எழுத்துக்களும் ஆகாசத் தன்மையில் இருக்கின்ற ஒரு எழுத்துக்குள்ளேயே அடங்கி இருக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே பிறகு ஓர் எழுத்தாகி கிடைப்பதற்கு அரிய மிகப்பெரும் சிவானந்தத்தைக் கொடுக்கின்றது. ஆகாசத் தன்மையில் இருக்கும் எழுத்து வடிவமே ஓர் எழுத்தாக எப்படி மாறி சிவானந்தத்தைக் கொடுக்கின்றது என்று அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.