பாடல் # 794

பாடல் # 794 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

உதித்து வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக யோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்ந்துகொ ளுற்றே.

விளக்கம் :

பிராணன் வலப்பக்கம் தோன்றி இடப்பக்கம் ஓடும் போது ஒரு பக்கம் கனமாகவும் ஒரு பக்கம் மெல்லியதாகவும் இருக்கும். இரு பக்கமும் கணமாகவும் மெல்லியதாகவும் மாறி மாறி பிராணன் ஒடுவது இயற்கையாக உள்ளது என்பதை உணர்ந்து அறிந்துகொள்ளலாம்.

பாடல் # 795

பாடல் # 795 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

விளக்கம் :

மூச்சுக்காற்று நடுநாடியாகிய சுழுமுனையில் நிற்காமல் இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் மாறி மாறி இயங்குகின்ற போது உலகியல் வாழ்க்கையில் கிடந்து வருத்தப்பட நேரிடும். யோகியானவன் மூச்சுக்காற்றை நாடிகள் கூடுகின்ற நடுநாடியின் சுழுமுனையில் குண்டலினியோடு சேர்க்க நடுநாடியின் உச்சியில் தீபத்தின் ஒளி தோன்றும் என்று நந்தி அருளினான்.

பாடல் # 796

பாடல் # 796 : மூன்றாம் தந்திரம் – 16. வார சரம் (வார நாட்களில் மூச்சுகாற்றின் இயக்கம்)

ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போய மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளும் முகுர்த்தமு மாமே.

விளக்கம் :

யோகிகள் உள் நோக்கி தியானம் செய்து ஆராயும் பொருள் முழுமுதற்சிவனாகும், ஆராய்ந்த சிவன் நம் அழகான கண் மலர்களுக்கு மேலே உள்ளான். பதினாறு மாத்திரை அளவு செய்யும் மூச்சுப் பயிற்சியின் மூலம் சுவாசத்தை மாற்றி அமைத்தால் அந்த சிவனை நன்கு உணரலாம். அவ்வாறு உணர்ந்தால் வாழ் நாட்களைக் கூறுபடுத்தி வழங்கும் நாள், கிழமை, மாதம், ஆண்டு முகூர்த்தம் ஆகியவை காரணப்பொருளாக இருந்து உயிரின் ஆயுளை அதிகரிக்கும்.