பாடல் #446

பாடல் #446: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

விளக்கம்:

ஏழு உலகங்களைப் படைத்து அவை தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். ஏழு உலகங்களும் தன் தொழில்களை செய்ய பலவித தேவர்களையும் படைத்து அருளினான். பலவித உயிர்களைப் படைத்து தம் வினைகளைத் தீர்த்தபின் அவற்றை அழித்து தம்மோடு மீண்டும் சேர்த்துக் கொண்டு அருளுகின்றவன் இறைவன். அந்த உயிர்கள் தன்னை நாடி வரும்போது அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகவும் நின்று அருளுகின்றான்.

பாடல் #447

பாடல் #447: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆதி படைத்தனன் ஐம்பெரும் பூதங்கள்
ஆதி படைத்தனன் ஆயபல் ஊழிகள்
ஆதி படைத்தனன் எண்ணிலி தேவரை
ஆதி படைத்தவையும் தாங்கிநின் றானே.

விளக்கம்:

அனைத்திற்கும் ஆதியான இறைவனே உயிர்கள் வாழ்வதற்க்காக ஆகாயம் நீர் நெருப்பு காற்று மண் என ஐந்து பெரும் பூதங்களைப் படைத்து அருளினான். அந்த உயிர்கள் வினைகள் முடியும் வரை வாழ்ந்து தன்னை வந்து அடைவதற்காக பல ஊழிக்காலங்களையும் அருளினான். அந்த உயிர்கள் தவமிருந்து தன்னை நாடி வரும் போது அவர்களை எண்ணிலடங்காத பல தேவர்களாகக்கி அருளுகின்றான். இப்படி அனைத்தையும் படைத்த இறைவனே தான் படைத்த அனைத்தையும் தாங்கிக் கொண்டு பாதுகாத்து அருளுகின்றான்.

பாடல் #448

பாடல் #448: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

அகன்றான் அகலிடம் ஏழுமொன் றாகி
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனும் ஆகி
நவின்றான் உலகுறு நம்பனு மாமே.

விளக்கம்:

பரந்து விரிந்த ஏழு உலகங்கள் முழுவதும் அகன்று பரவி இருந்தாலும் அனைத்தும் ஒருவனாய் இருப்பவன் இறைவன் ஒருவனே. இவன் தான் இறைவன் என்று சுட்டிக் காட்டி உணர்த்தக் கூடிய அளவிற்கு இறைவன் எளிமையானவன் இல்லை. அவனே பலவித ஆன்மாக்களின் உயிரோடு உயிராக உடனே இருந்து பாதுகாத்து அருளுகின்றவன். அவனே பல்வேறு குருநாதர்களாய் வந்து உயிர்களுக்கு நல்வழியை போதித்து அருளிய அவனே உலகத்து உயிர்களெல்லாம் நம்பியிருக்கும் தலைவனும் ஆவான்.

பாடல் #449

பாடல் #449: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோதக மாமே.

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்குள் ஒளியாக இருக்கும் இறைவனே உயிரோடு உயிராகவும் கலந்து ஒரே உடலாக இருக்கின்றான். அவனே விண்ணுலக அமரர்களெல்லாம் விரும்பித் தொழும் அனைத்திற்கும் மேலான பரம்பொருள். அவனே மண்ணுலக அடியவர்களெல்லாம் புகழ்ந்து போற்றும் பல்வேறு உருவங்களாகத் திருமேனி தரித்து இருப்பவன். அவனே கண்களுக்குள் இருந்து காட்சியைக் காட்டும் கருமணியாகவும் இருந்து கண்களால் காண முடியாத பேருண்மைகளைக் குருநாதனாய் இருந்து போதிப்பவனும் ஆவான்.

பாடல் #450

பாடல் #450: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

ஆரும் அறியாதவ் வண்டத் திருவுருப்
பார்முத லாகப் பயிலுங் கடத்திலே
நீரினிற் பால்போல நிற்கின்ற நேர்மையைச்
சோராமற் காணும் சுகமுமறிந் தேனே.

விளக்கம்:

யாராலும் அறிந்துவிட முடியாத அண்டசராசரங்கள் அடங்கிய திருமேனியைக் கொண்ட இறைவன் நீரில் பால் சேர்க்கும் போது எப்படி இரண்டும் ஒன்றாகிக் கலந்து விடுகின்றதோ அதுபோலவே உலகத்தில் பிறக்கும் உயிர்களுடன் உயிராகக் கலந்து உடலாகி ஒன்றாக இருப்பதை இடைவிடாமல் கண்டு பேரின்பம் அடையும் பாக்கியத்தை அவனது திருவருளால் யான் பெற்றிருக்கின்றேன்.