பாடல் #608

பாடல் #608: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இயங்கும் பரிந்துயி ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையாம் ஈசனை உணரவல் லார்க்கே.

விளக்கம்:

மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்து சிவபெருமானை உணரக் கூடியவர்களின் உள்ளிருந்து வெளிவரும் ஓசையானது பூவிலிருந்து வெளிவரும் நறுமணம் போலவும் சிவபெருமானின் ஓசை என்னும் சொரூபமாகவும் தேவர்கள் முதலிய அனைத்து உயிர்களுக்குள்ளும் பாசம் என்னும் உணர்வாகவும் அந்தப் பாசத்தின் கருணையால் உயிருக்கு உயிராகவும் கலந்து நிற்கும்.

பாடல் #609

பாடல் #609: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

விளக்கம்:

தியானத்தினால் உள்ளிருந்து வெளிவரும் ஓசையின் இறுதியில் உண்மை என்னும் இறை சக்தியை உணரலாம். நல்ல யோகத்தினால் இறைவனுடன் கலந்து இருப்பதை உணரலாம். இறைவனைத் தவிர வேறு சிந்தனை இருக்காது. கர்மங்கள் நீங்கித் தூய்மையான சிவனை உணரலாம்.

பாடல் #610

பாடல் #610: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

விளக்கம்:

தியானத்தினால் ஆறு சக்கரத்திலும் அடங்கியிருக்கும் குண்டலினி சக்தியிலிருந்து வெளிவரும் ஐந்து வகை அக்கினிகளான மூலாக்கினி, வடவாக்கினி, மின்னல் அக்கினி, கதிராவன் அக்கினி, திங்கள் அக்கினி ஆகியவை பிரகாசிக்கும் போது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கும். அதன்பின் ஐந்து புலன்களாகிய சுவைத்தல், பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் ஆகிய உணர்வுகள் நீங்கப் பெற்று சிவபெருமானை அடையலாம்.

பாடல் #611

பாடல் #611: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

விளக்கம்:

தியானம் செய்பவர்களுக்கு உள்ளம் ஒளிமயமாக இருக்கும். அங்கே இருள் கிடையாது. அவர்களுக்கு மரணம் பற்றிய பயம் இருக்காது. இந்த நுண்ணறிவைப் பெற்ற யோகியர்கள் தங்களுக்குள் காணும் உள்ளொளி ஒரு யோசனை தூரம் பரவியிருக்கும். அந்த ஒளிமயமான வெள்ளி அறையாகிய மனதில் பயத்திற்கு இடமிருக்காது.

பாடல் #612

பாடல் #612: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிரியா திருக்குமே.

விளக்கம்:

யோகியர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வைராக்கியம் குறையாமல் தியானத்தில் ஒன்றியபடி இருந்தால் மூலாதார அக்கினியும், ஆக்ஞா சந்திரனும், சகஸ்ரதள சூரியனும் ஆகிய மூன்றும் ஒரு சேர வளர்ந்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றினால் அவர்களின் உடல் உயிரை விட்டு பிரியாது நிலைத்து இருக்கும்.

பாடல் #613

பாடல் #613: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.

விளக்கம்:

தலை உச்சியிலுள்ள சகஸ்ரதள சூரியனுக்கு பிரம்மாவும் நெற்றிக்கு நடுவிலுள்ள ஆக்ஞா சந்திரனுக்கு விஷ்ணுவும் மூலாதார அக்கினிக்கு உருத்திரனும் தலைவர்களாக இருக்கின்றார்கள். அவர்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே வைத்து தியானிப்பவர்களுக்கு தியானம் கைகூட அவர்கள் உதவுவார்கள்.

பாடல் #614

பாடல் #614: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசந் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

விளக்கம்:

அறியாமை என்னும் மாயையால் மனம் தளர்ந்து இருளாக இருக்கின்றது. அந்த இருள் நீங்க மூன்று சக்கரங்களிலும் (மூலாதாரம், ஆக்ஞா, சகஸ்ரதளம்) தியானம் செய்து முதுகுத்தண்டு வழியாக குண்டலினியை மேலே ஏற்றி அறியாமை நீங்கப் பெறலாம். அப்படிச் செய்தால் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை ஆகிய இருள்கள் நீங்கி ஏற்றம் பெறலாம்.

பாடல் #615

பாடல் #615: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

விளக்கம்:

மூன்று குணங்களான இராஜசம் (கோபம்) தாமசம் (சமரசம்) சாத்வீகம் (சாந்தம்) ஆகியவற்றால் ஏற்படும் மாயை என்னும் இருள் நீங்க தினமும் அதிகாலையில் ஒரு நாழிகை (24 நிமிஷம்) நேரம் மூலாதாரத்திலுள்ள காற்றை இடகலை பிங்கலை நாடிகள் (பாடல் #567 இல் உள்ளபடி) வழியாக மூச்சுப்பயிற்சி செய்தால் உடம்பில் உயிரை அழியாது சிவபெருமான் வைப்பார்.

பாடல் #616

பாடல் #616: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் உள்ளே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

விளக்கம்:

தொப்புள் குழியிலிருந்து நாலு அங்குலத்திற்கு மேலும் நெஞ்சுக்குழிக்கு இரண்டு அங்குலத்திற்கு உள்ளேயும் உள்ள இடத்தில் மனதை வைத்துத் தியானம் செய்யக் கூடியவர்களுக்கு அங்கே இருக்கும் உடலின் தலைவனான இறைவனை அறிய முடியும்.

பாடல் #617

பாடல் #617: மூன்றாம் தந்திரம் – 8. தியானம் (தியான வகைகளும், செய்யும் முறைகளும்)

அறிவாயசத் தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

விளக்கம்:

மனம் தியானத்தில் நிலைக்கப் பெற்றால் நிலையில்லாத முப்பத்தாறு தத்துவங்கள் நீங்குவதை உணரலாம். வலிமையான மாயை சிவனருளாலே அழியும். அந்த சிவபெருமானை விட்டு என்றும் பிரியாதிருக்கும் பேரருளைப் பெற்றிடலாம். தியானத்தின் வழியை விட்டு விலகாமல் செல்பவர்கள் இந்த நிலையை உணர்ந்திடலாம்.

குறிப்பு: திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

https://www.kvnthirumoolar.com/பாடல்-467/